Search
  • Follow NativePlanet
Share
» »தகர்க்க முடியாத வேலூர் கோட்டையில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

தகர்க்க முடியாத வேலூர் கோட்டையில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

வேலூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள வேலூர் கோட்டை இந்தியாவின் புகழ்பெற்ற கோட்டைகளில் ஒன்றாகும். 133 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கும் கோட்டை வளாகத்திற்கு உள்ளே கோயில், மசூதி, தேவாலயம், அருங்காட்சியகம் என பல அம்சங்கள் உள்ளன. இந்த புகழ்பெற்ற வேலூர் கோட்டையைப் பற்றி நம் அறிந்திறாத பல சுவாரஸ்யமான தகவல்களை இங்கேக் காண்போம்!

வேலூர் கோட்டையை கட்டியவர்கள் யார்?

வேலூர் கோட்டையை கட்டியவர்கள் யார்?

அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்ற வேலூர் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியாளர் சதாசிவ ராயரின் கீழ் இருந்த சன்ன பொம்மி நாயக்க மற்றும் திம்மா ரெட்டி நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்த கிரானைட் கோட்டை தென்னிந்தியாவின் இராணுவ கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியாவின் கோட்டைகளிலே தனித்து நிற்கிறது. இந்த கோட்டை பல தாக்குதல்களை எதிர்கொண்டு இருந்தாலும் இன்றளவும் இமியளவு கூட அசையாமல் கம்பீரமாக நிற்கிறது.

பல ஆட்சியாளர்களைக் கண்ட கோட்டை

பல ஆட்சியாளர்களைக் கண்ட கோட்டை

நாயக்கர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் அவரிகளிடம் இருந்து மராட்டியர்கள் கோட்டையை கைப்பற்றினர். 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டெல்லியின் தாவுத் கான் கோட்டையை கைப்பற்றினார். பின்னர் கர்நாடக நவாப்கள் கோட்டையை ஆண்டனர். இறுதியாக பிரிட்டிஷ் அரசு கோட்டையை கட்டுக்குள் கொண்டு வந்தது. பிரிட்டிஷார் காலத்தில் இக்கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினர் மற்றும் இலங்கையின் கண்டியரசின் கடைசி தமிழ் மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் சிறை வைக்கப்பட்டனர். பிரிட்டிஷாருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி சிப்பாய்கலகம் இக்கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் அரங்கேறியது.

மற்ற கோட்டைகளைக் காட்டிலும் தனித்து நிற்கும் வேலூர் கோட்டை

மற்ற கோட்டைகளைக் காட்டிலும் தனித்து நிற்கும் வேலூர் கோட்டை

முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை இந்தியாவின் சுதந்திர வரலாற்றுகளை எடுத்துக் கூறும் வகையில் இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. பெரிய இரட்டைச் சுவர்கள், எதிரிகளிடம் இருந்து தப்பிக்க அகழி, மிகவும் உறுதியான கட்டமைப்பு ஆகியவை இந்த கோட்டையின் இராணுவ கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது. இவ்வளவு பெரிய கோட்டைக் ஒரே ஒரு நுழைவாயில் தானாம்! ஏன்? என்று யோசிக்கிறீர்களா? பாதுகாப்பிற்காகத்தான்! அந்த காலத்தில் இந்த அகழிக்குள் 10,000 முதலைகள் விடப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

எம்மதமும் சம்மதம் எனப் போற்றும் வேலூர் கோட்டை

எம்மதமும் சம்மதம் எனப் போற்றும் வேலூர் கோட்டை

கோட்டையில் ஒரு கோயில், ஒரு மசூதி, ஒரு தேவாலயம், புகழ்பெற்ற வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனை ஆகியவை உள்ளன. கோட்டையின் உள்ளே அமைந்துள்ள ஜலகண்டீஸ்வரர் கோயில் சிற்பக் கலைக்கு பெயர் பெற்றது. கோட்டைக்குள் இருக்கும் மசூதி கடந்த ஆற்காடு நவாப் காலத்தில் கட்டப்பட்டது. திப்புசுல்தான் வாரிசுகள், குடும்பத்தார், உறவினர்கள் கோட்டைக்குள் தொழுகை நடத்த மசூதி கட்டப்பட்டது. இரண்டாயிரம் பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாம். கோட்டையின் பல பகுதிகள் இன்று அரசு அலுவலகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பொழுதுபோக்கு அம்சங்கள்

பொழுதுபோக்கு அம்சங்கள்

கோட்டை வளாகத்திற்குள் ஒரு பெரிய அருங்காட்சியகம் உள்ளது. இதில் திப்புசுல்தான் வாரிசுகள் பயன்படுத்திய நாணயங்கள், கிண்ணங்கள், வாள்கள், வட ஆற்காடு மாவட்டத்தில் கிடைத்த தொல்பொருட்கள், ஓடுகள், மண்பானைகள், கல்வெட்டுகள், செப்பு தகடுகள், கத்திகள், பீங்கன் கிண்ணங்கள் போன்றவை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. தமிழக சுற்றுலாத்துறையும் தொல்பொருள் ஆராய்ச்சித்துறையும் சேர்ந்து அகழியில் படகு சவாரியை அறிமுகப்படுத்தியது. தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பயணிகள் படகில் அகழியில் வலம் வரலாம். அது மட்டுமின்றி, பாலாற்றங்கரையில் அமைந்துள்ள முத்து மண்டபம், சிப்பாய் புரட்சியின் போது இறந்த ஒரு தளபதியின் கல்லறை, ஹைதர் மஹால், திப்பு மஹால், பேகம் மஹால், மிட்டாய் மஹால் மற்றும் பாதுஷா மஹால் ஆகிய மஹால்கள் ஆகியவற்றையும் நீங்கள் பார்வையிடலாம்.கோட்டை நேரம்: காலை 8 முதல் மாலை 6 மணி

அருங்காட்சியக நேரம்: பொது விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து நாட்களிலும் காலை 9 - 12.30 மற்றும் பிற்பகல் 2 - மாலை 5 வரை திறந்து இருக்கும்

நுழைவு: ஒரு நபருக்கு ரூ. 5/-

இது சென்னைக்கு அருகிலேயே இருப்பதால் அதிக சுற்றுலாப்பயணிகள் வார இறுதியில் இங்கு செல்கின்றனர். நீங்களும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தை பார்த்து ரசித்துவிட்டு வாருங்களேன்!

Read more about: vellore fort vellore tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X