Search
  • Follow NativePlanet
Share
» »வெறும் 15 ஆயிரம் இருந்தால் போதும் – மினி மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லலாம்!

வெறும் 15 ஆயிரம் இருந்தால் போதும் – மினி மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லலாம்!

என்ன? 15 ஆயிரத்தில் மினி மாலத்தீவு சுற்றுலாவா? சற்று குழப்பமாக உள்ளது அல்லவா. எப்படி மாலத்தீவுக்கு 15 ஆயிரத்தில் செல்ல முடியும் என்று யோசிக்கிறீர்கள் தானே! அதற்கு முன் மினி மாலத்தீவு பற்றி தெரிந்துக் கொள்வோம்! ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கரில் உள்ள ஒரு சிறு பகுதியே அதன் தோற்றம் காரணமாக மினி மாலத்தீவு என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. அந்த இடத்தின் நீல நிற நீர், வெள்ளை மணல், வெள்ளை பளிங்குக் கற்கள் காரணமாக அந்த இடம் பார்ப்பதற்கே மினி மாலத்தீவு போன்று தோற்றமளிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் அந்த இடத்திற்கு சமீபகாலமாக படையெடுத்து வருகின்றனர், அதனைப் பற்றிய மேலும் பல தகவல்கள் கீழே!

அஜ்மீரில் ஒளிந்து இருக்கும் அதிசயம்

அஜ்மீரில் ஒளிந்து இருக்கும் அதிசயம்

தனித்துவமான கலாச்சாரம், பழங்கால கோட்டைகள், வரலாற்று கோயில்கள், அரச கோட்டைகள், அரண்மனைகளுக்கு பெயர் போன ராஜஸ்தானில் இந்த அழகிய இடம் அமைந்துள்ளது. இந்த அழகிய கிஷன்கர் அஜ்மீரிலிருந்து வடமேற்கே 30 கிமீ தொலைவிலும், அரச நகரமான ஜெய்ப்பூரில் இருந்து 90 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. நகரத்தின் செழுமையையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் இந்த இடத்தின் மிக பிரபலமான பானி தானி எனும் ஓவியம் இந்திய அரசாங்கத்தால் தபால் தலைகளில் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் மூன்லேண்ட்

ராஜஸ்தானின் மூன்லேண்ட்

ராஜஸ்தானின் காஷ்மீர், ராஜஸ்தானின் சுவிட்சர்லாந்து, ராஜஸ்தானின் மூன்லேண்ட், ராஜஸ்தானின் மினி மாலத்தீவு என்ற பல செல்லப் பெயர்களைப் பெற்றிருக்கும் கிஷன்கரின் இந்தப் பகுதி உண்மையிலேயே ஒரு குப்பைக் கொட்டும் (Dumping yard) இடமாகும். குப்பை என்றவுடன் நீங்கள் நாம் சராசரியாக கொட்டும் குப்பை என்று எண்ண வேண்டாம். இது வேறு! ஆம், இவையனைத்தும் மனிதனால் கொட்டப்பட்ட பளிங்குக் கழிவினால் உருவான அற்புதம் மட்டுமே!

பளிங்குக் கழிவுகளால் உருவான வெள்ளை நகரம்

பளிங்குக் கழிவுகளால் உருவான வெள்ளை நகரம்

கிஷன்கர் நாட்டின் மிகப்பெரிய பளிங்கு சந்தையுடன் இந்தியாவின் மார்பிள் நகரமாக அறியப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய பளிங்குத் தொழிலைக் கொண்ட கிஷன்கர் பளிங்குக் கற்களால் உருவாக்கப்படும் பளிங்குக் கழிவுகளை இந்த டம்பிங் யார்டில் கொட்டி வருகின்றனர். காலப்போக்கில், டெபாசிட் செய்யப்பட்ட பளிங்கு குழம்பு ஒரு மலையைப் போல சேர்ந்து சேர்ந்து வெள்ளை சிகரங்களாகவும், பீடபூமியாகவும் மாறியது. இந்த பளிங்கு குழம்பின் தோற்றமே பனி படர்ந்த படலமாக நமக்கு காட்சியளிக்கிறது.

ராஜஸ்தானின் மினி மாலத்தீவு

ராஜஸ்தானின் மினி மாலத்தீவு

சுற்றியுள்ள பளிங்கு மலைகளும் நீல நிற நீரும் வெள்ளை சிகரங்களும் கிட்டத்தட்ட மாலத்தீவு போலவே தெரிகிறது. ஆகவே நீங்கள் டம்பிங் யார்டில் காலெடுத்து வைத்த உடனேயே நீங்கள் மாலத்தீவில் இருப்பது போலேயே உணருவீர்கள். இந்த இடத்தின் இயற்கை காட்சிகள் சந்தேகத்திற்கு இடமின்றி உங்களை வசியப்படுத்திவிடும். உங்களைச் சுற்றிலும் பனி மற்றும் பின்புறத்தில் பசுமையான மரங்களைக் காணலாம். டம்பிங் யார்டின் முற்றத்தில் நிறைய சிறிய குளங்கள் உள்ளன, அவற்றில் சேமிக்கப்பட்ட நீர் மிகவும் தெளிவாக உள்ளது, அதன் வழியாக அடிப்பகுதியைப் பார்க்க முடியும்.

படப்பிடிப்பு தளமான டம்பிங் யார்ட்

படப்பிடிப்பு தளமான டம்பிங் யார்ட்

சல்மான் கானின் தபாங் 3 படத்தில் ஒரு பாடல் இங்கு தான் படமாக்கப்பட்டது. இது தவிர கபில் ஷர்மாவின் 'கிஸ்கிஸ்கோபியார் கரூன்', பாகி 3 போன்ற ஹிட் படங்களின் பாடல்களும், 'சயான் ஜி', 'சமந்தர் மே' மற்றும் 'உஸ்கி ஆன்கோன் மே பாடேன்' போன்ற பாடல்களும் இங்கு படமாக்கப்பட்டன. எனினும், காற்று புயல் மற்றும் பளிங்கு தூசி சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்! ஆஸ்துமா உள்ளவர்கள் அல்லது தூசியால் ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த இடத்திற்குச் செல்வது நல்லதல்ல.

புகைப்படக்காரர்களின் ஹாட்ஸ்பாட்

புகைப்படக்காரர்களின் ஹாட்ஸ்பாட்

இந்த இடம் தொழில்முறை புகைப்படம் எடுப்பதற்கும் ப்ரி வெட்டிங் போட்டோஷூட் மற்றும் போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட் செய்வதற்கும் ஏற்றது. தொழில்முறை கேமராக்களுக்கு அவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். உங்கள் துணையுடன் அழகான புகைப்படம் எடுக்க விரும்பினால், இந்த இடம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். திருமண புகைப்படம் எடுப்பதற்கும் இந்த இடம் மிகவும் நல்லது. இங்கு எடுக்கப்படும் ஒவ்வொரு போட்டோவையும் பார்த்து எல்லோரும் உங்களிடம் கேட்பார்கள், நீங்கள் மாலத்தீவுக்குப் சென்று வந்தீர்களா என்று?

15,000 ரூபாயில் மினி மாலத்தீவு சுற்றுலா

15,000 ரூபாயில் மினி மாலத்தீவு சுற்றுலா

ராஜஸ்தானின் அஜ்மீர் நாட்டின் பல முக்கிய நகரங்களுடன் ரயில் மற்றும் பேருந்து வாயிலாக நன்கு இணைப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நீங்கள் சென்னையில் இருந்து கிளம்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், ரயிலில் ஸ்லீப்பர் டிக்கெட்டுக்கான கட்டணம் ரூ. 900, அஜ்மீரிலிருந்து கிஷன்கருக்கு பொதுப் போக்குவரத்தில் செல்ல ரூ. 30 அல்லது டாக்ஸி என்றால் ரூ. 600 செலவாகும்.

கிஷன்கரிலேயே தங்குவதற்கு சிறு சிறு ஹோட்டல்கள் உள்ளன. ரூ. 1000 இல் இருந்தே ரூம்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. ஆகவே ஒரு நான்கு நாட்கள் இந்த மார்பில் சிட்டியில் தங்கியிருந்து கிஷன்கர் கோட்டை, பூல் மஹால் அரண்மனை, சுக் சாகர், கோண்டுலாவ் ஏரி, மோகம் விலாஸ், கோடா கணேஷ் கோவில் மற்றும் அஜ்மீர் ஷெரீப் தர்கா ஆகிய இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு வர நிச்சயம் ரூ. 15000 மேல் ஆகாது.

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

இந்த இடத்தை அடைய சிறப்பு முயற்சி எதுவும் தேவையில்லை. இங்கு செல்ல முதலில் ஜெய்ப்பூரை அடைய வேண்டும். கிஷன்கரை அடைய அஜ்மீரிலிருந்து அரை மணி நேரமும், ஜெய்ப்பூரில் இருந்து 2 மணிநேரமும் ஆகும். அதன் பிறகு நீங்கள் கார் அல்லது டாக்ஸியில் சென்று இந்த இடத்தைப் பார்வையிடலாம். இங்கே நுழைவு இலவசம், ஆனால் உள்ளே செல்ல உங்களுக்கு பாஸ் தேவைப்படும், அதற்காக நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்து அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.

ஆனால் ஒட்டுமொத்தமாக, இந்த இடம் உண்மையில் கற்பனைக்கு அப்பாற்பட்டது மற்றும் பார்வையிடத் தகுந்தது! நீங்கள் இப்போதே திட்டமிடுங்கள்!

Read more about: kishangarh rajasthan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X