ராஜஸ்தான் சுற்றுப்பயணம் - பிரம்மாண்ட பாலைவனத்தில், கம்பீர ஒட்டகப்பயணம்!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

ராஜஸ்தான் என்று சொன்ன மாத்திரத்திலே அதன் கவின் கொஞ்சும் அரண்மனைகளும், சிறப்புமிக்க ஒட்டக சவாரிகளும், காதல் மற்றும் வீர காவியங்களும், வசீகரிக்கும் பாரம்பரியமும், கலாச்சாரமும் நம் சிந்தையில் சத்தமிடாமல் நகர்ந்து செல்லும்.

இந்தியாவின் வடமேற்கில்  வியக்கத்தக்க பேரழகுடன் இயற்கையின் இணையில்லா படைப்பாய் காட்சியளித்துக்கொண்டிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை தாகம் கொண்ட பயணிகள் கண்டிப்பாக தவற விட்டுவிடக்கூடாது.  

இந்த பாரம்பரிய பெருமை வாய்ந்த பூமியில் இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கட்டிடக்கலை அற்புதங்கோடு, ராஜஸ்தானின் செல்வச் செழிப்பிற்கும், வரலாற்று பெருமைக்கும் சாட்சிகளாக ஏராளம் இந்த மாநிலம் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. எனவே வாருங்கள்  சிறிது காலம் இந்த எழில் சிந்தும் மாநிலத்தில் சஞ்சரித்து அதன் சிறப்புகளை கண்டறிவோம். . .

ராஜஸ்தானின் இட அமைப்பியல்

இந்தியாவின் வடமேற்கு திசையில் அமைந்திருக்கும் ராஜஸ்தான் மாநிலம் குடியரசு இந்தியாவின் மாநிலங்களில் பரப்பளவில் மிகப் பெரியதாக கொள்ளப்படுகிறது. இந்த மாநிலம் இந்தியாவின் 10.4  சதவிகித நிலங்களையும், 342,269 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ளது.

இதன் தலைநகரமாக 'பிங்க் சிட்டி' என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் நகரமும், இதன் ஒரே மலைவாசஸ்தலமாக மவுண்ட் அபு நகரமும் இருந்து வருகின்றன. மேலும் ராஜஸ்தானின் பெரும்பான்மையான வடமேற்கு பகுதிகள் வறண்ட தார் பாலைவனத்தால் கவரப்பட்டிருக்கின்றன.

ராஜஸ்தானின் வானிலை

ராஜஸ்தானில் மழைக் காலத்தை தவிர மற்ற பருவங்களில் மிகவும் வறண்ட வானிலையே காணப்படும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் ராஜஸ்தானின் வெப்பநிலை அதிகபட்சமாக 48 டிகிரி அளவுக்கு கூட சென்று விடும். எனினும் ராஜஸ்தானின் மவுண்ட் அபு நகரம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இதமான வானிலையை கொண்டிருக்கும்.

ராஜஸ்தானில் பேசப்படும் மொழிகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மையான மக்களால் ராஜஸ்தானி மொழியே பேசப்பட்டாலும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இதுதவிர முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்கள் சிந்தி என்ற மொழியில் உரையாடிக் கொள்வதையும் நீங்கள் ராஜஸ்தானில் கேட்கலாம்.

வண்ணமிகு கலாச்சாரமும், நாக்கில் எச்சில் ஊறவைக்கும் உணவுப் பதார்த்தங்களும்!

ராஜஸ்தானின் சுற்றுலா சிறப்புகளை பற்றி பேசுகையில் அதன் கலாச்சாரத்தையும், அற்புதமான சமையல் வகைகளை குறித்தும் பேசாமல்  இருக்க முடியாது. ராஜஸ்தான் மாநிலம் பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்டது.

அதேவேளையில் ராஜஸ்தானின் பூர்வ குடிகளின் இசையும், நடனமும், மாநிலம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் கலை வேலைப்பாடுகளும் குறிப்பிடத்தக்க கவர்ந்திழுக்கும் அம்சங்கள்.

மேலும் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆடைகள் பல வண்ணங்களில், கலைநயத்துடன் கண்ணாடிகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் விதம் அலாதியானது. எந்த வகையில் பார்த்தாலும் ராஜஸ்தான் மாநிலம் கலா ரசிகர்களின் சொர்க்க பூமியாகவே திகழ்ந்து வருகிறது.

ராஜஸ்தானில் ஹோலி, தீஜ், தீபாவளி, தேவநாராயணன் ஜெயந்தி, சங்கராந்தி, ஜன்மாஷ்டமி போன்ற பண்டிகைகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அதோடு வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும் ராஜஸ்தானிய பாலைவனத்திருவிழா, ஒட்டகத் திருவிழா, கால்நடை சந்தை உள்ளிட்ட விழாக்களும் ராஜஸ்தானில் வேகுப்பிரபலம்.

ராஜஸ்தானின் நிரந்தர தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அதன் உணவு வகைகள் நீர்ப்பசையற்று, உலர்ந்த நிலையிலேயே காணப்படும். எனினும் அதன் ருசியும், சுவையும் என்றென்றைக்கும் நம் அடிநாக்கில் இனித்துக் கொண்டே இருக்கும்.

அதிலும் குறிப்பாக தால் பாத்தி, பைல்-கட்டே, ராப்டி, பஜ்ரே கி ரொட்டி (தானிய ரொட்டிகள்), லஷுன் கி சட்னி, மாவா கச்சோரி, பிக்கனேரின் ரசகுல்லா போன்ற பதார்த்தங்களின் ருசியில் நீங்கள் கரைந்தே போய் விடுவீர்கள். எனவே நீங்கள் ராஜஸ்தான் சுற்றுலாச் செல்லும் போது இந்த இன்சுவை உணவுகளை சுவைக்க மறக்காதீர்கள்.

ராஜஸ்தானில் பார்க்க வேண்டிய இடங்கள்

ராஜஸ்தானின் புவியியல், வானிலை, கலாச்சாரம் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளும் அதேவேளையில், இந்த மாநிலத்தில் எங்கெங்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதை பற்றியும்  நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.  

ராஜஸ்தானின் ஒவ்வொரு இடமுமே எழிலாகவும், வளமிக்கதாகவும், சுற்றுலாவுக்கு ஏற்றதாகவுமே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதைப்பூர், ஜெய்சல்மேர் போன்ற நகரங்கள் நாடு முழுவதும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்.

ஆனால் ராஜஸ்தானில் பன்ஸ்வாரா, கோட்டா, பரத்பூர், பூந்தி, விராட் நகர், சரிஸ்கா, ஷேக்ஹாவதி போன்ற புதுமையான நகரங்களும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களை போன்றே சுவாரசியமும், முக்கியத்துவமும் வாய்ந்தவைகள்.

ராஜஸ்தானில் காட்டுயிர் பிரியர்களின் வருகைக்காக ரன்தம்போர் தேசிய பூங்கா, சரிஸ்கா புலிகள் பாதுகாக்கப்பட்ட காடுகள், தர்ராஹ் வனவிலங்கு சரணாலயம், கும்பல்கர் வனவிலங்கு சரணாலயம் போன்ற இடங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.

அதோடு பக்தர்கள் மற்றும் புனித யாத்ரிகர்களின் கூட்டத்தை எப்போதும் ராஜஸ்தானில் உள்ள எண்ணற்ற ஹிந்து, ஜெயின் கோயில்களில் பார்க்கலாம். மேலும்  கலாச்சார மற்றும் வரலாற்று காதலர்களின் தீராத தாகத்தை தீர்க்கக் கூடிய பாரம்பரிய கோட்டைகள், அரண்மனைகள், ஹவேலிகள் ராஜஸ்தானில் ஏராளமாக இருக்கின்றன.

செயின்ட் அகஸ்டின் என்ற உலகப்புகழ்பெற்ற பிஷப் மற்றும் லத்தீன் தத்துவவாதி பயணம் குறித்து கூறுகையில், ''உலகம் என்பது ஒரு புத்தகம், எனவே இதுவரை பயணம் செய்யாமல் இருக்கிறவர்கள் அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தையாவது படியுங்கள்" என்று மேற்கோள் காட்டியிருக்கிறார்.

அவருடைய கருத்தின்படி பார்க்கையில் ராஜஸ்தான் மாநிலம் அந்த புத்தகத்தின் அருமையான பக்கங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. எனவே வாழ்கையில் ஒரு முறையாவது இந்தப் பக்கங்களை புரட்டிப் பாருங்கள்.     

Please Wait while comments are loading...