கோட்டா – சம்பல் ஆற்றங்கரையில் ஜொலிக்கும் வரலாற்றுகால நாகரிகம்

ராஜஸ்தான் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றான கோட்டா நகரம் சம்பல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்கள் மற்றும் பலவிதமான தொழிற்சாலைகளை கொண்டிருப்பதால் இது ராஜஸ்தான் மாநிலத்தின் ‘தொழில் தலைநகரம்’ என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய உரத்தொழிற்சாலை கோட்டாவில் அமைந்துள்ளது. குஜராத் மற்றும் டெல்லி இவற்றுக்கிடையேயான வணிகக்கேந்திரமாகவும் இது விளங்குகிறது.

மேலும், இங்கு பல பொறியியல் கல்லூரிகளும் கல்வி நிறுவனங்களும் அமைந்திருப்பதால் ராஜஸ்தான் மாநிலத்தின் கல்விக்கேந்திரமாகவும் கோட்டா நகரம் புகழ் பெற்று விளங்குகிறது.

கோட்டாவில் பார்க்க வேண்டிய அம்சங்கள்

ராஜஸ்தான் பிரதெசத்தில் அமைந்திருப்பதால் இது இயல்பாகவே பல ஹவேலிகள், அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் இதர வரலாற்றுச் சின்னங்களை தன்னுள் கொண்டுள்ளது.

இவை தவிர எண்ணற்ற ஆன்மீகத்தலங்களும் இங்கு காணப்படுகின்றன. குருத்வாரா அஸாம்கர் சாஹீப், கோதாவரி தாம் கோயில், கரடியா மஹாதேவ் கோயில் மற்றும் மதுரதீஷ் மந்திர் ஆகியன இங்குள்ள புகழ் வாய்ந்த ஆன்மீகத்தலங்களாகும்.

அஸாம்கர் சாஹீப் குருத்வாரா கோட்டா நகரத்தில் உள்ள மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். இது சீக்கியர்களின் 10வது குருவான குருநானக் அவர்களின் பாதக்குறடுகள் மற்றும் வாளினை கொண்டிருப்பதால் விசேஷமாக கருதப்படுகிறது. மேலும் இந்த நகரம் புகழ் பெற்ற கவிஞரான அயோத்யா சிங் ஹரியவுத் பிறந்த இடமாகவும் சிறப்பு பெற்றுள்ளது.

கோட்டா நகரத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களில் ஜக்மந்திர் பேலஸ் அரண்மனை மிகச்சிறப்பான வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. சிவப்புக்கற்களால் கட்டப்பட்டுள்ள அற்புத அரண்மனையான இது எழில் நிறைந்த செயற்கை ஏரியான கிஷோர் சாஹர் ஏரியின் நடுவில் வீற்றுள்ளது.

படகுகளின் மூலம் பயணிகள் இந்த அரண்மனையை அடையலாம். இவை தவிர, கவர்ன்மெண்ட் மியூசியம் மற்றும் மஹாராவ் மாதோ சிங் மியூசியம் போன்ற அருங்காட்சியகங்களும் கோட்டா நகரத்தில் உள்ளன.

கோட்டா புடவைகள்

‘கோட்டா சாரீஸ்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் கோட்டா புடவைகள் இந்த பிரதேசத்தில் தயாரிக்கப்படுகின்றன. எல்லா இந்தியப்பெண்களால் மட்டுமென்றி உலகெங்கும் இந்த வகை புடவைகள் விரும்பி வாங்கப்படுகின்றன.

இவை கோட்டா தோரியா’ என்றும் அழைக்கப்படுகின்றன. தோரியா என்பதற்கு நூல் என்பது பொருளாகும். இந்த புடவைகளுக்குப்பின்னால் ஒரு சுவராசியமான பின்னணியும் உள்ளது.

அக்காலத்தில் இந்த வகைப்புடவைகள் மைசூரில் நெய்யப்பட்டு வந்தன. ராவ் கிஷோர் சிங் எனும் முகலாய தளபதி இந்த நெசவாளர்களை கோட்டாவுக்கு கொண்டு சென்றுள்ளார்.

எனவே இப்புடவைகள் ‘ மசூரியா’ புடவைகள் என்றே கோட்டா நகரத்தில் அழைக்கப்படுகின்றன. இருப்பினும் நாட்டின் இதர பகுதிகளில் ‘கோட்டா தோரியா’ புடவைகள் என்று பிரபலமாக இவை அழைக்கப்படுகின்றன. ஆறு கஜ நீளத்தில் பருத்தியும் பட்டும் கலந்த ஒரு மாயாஜாலம் என்றே இந்தப் புடவைகளைச் சொல்லலாம்.

பயண வசதிகள்

கோட்டா நகரத்தை மிக சுலபமாக விமானம், ரயில் மற்றும் சாலை போன்ற போக்குவரத்து மார்க்கங்கள் மூலம் அடையலாம். ஜெய்பூர் நகரத்திலுள்ள விமான நிலையம் மற்றும் கோட்டா ரயில் நிலையம் ஆகியவை இந்நகருக்கான விமானத்தளம் மற்றும் ரயில் நிலையங்களாக விளங்குகின்றன.

இது தவிர, அருகிலுள்ள முக்கிய நகரங்களான சித்தோர்கர், ஜெய்பூர், அஜ்மீர், ஜோத்பூர், பிக்கானேர் மற்றும் உதய்பூர் ஆகிய நகரங்களிலிருந்து கோட்டா வருவதற்கு பேருந்து வசதிகளும் நிறைய உள்ளன.

கோட்டா நகரத்தின் பருவம் பருவநிலை

கோட்டா நகரம் வெப்பமான கோடை மற்றும் கடுங்குளிருடன் கூடிய குளிர்காலம் ஆகிவற்றுடன் மிகக்கடுமையான பருவநிலையை பெற்றுள்ளது. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் கோட்டா நகரத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.

Please Wait while comments are loading...