பூந்தி – காலத்தில் உறைந்துபோன பழமையின் மேன்மை

ராஜஸ்தான் மாநிலத்தின் ஹடோதி பிரதேசத்தில் அமைந்துள்ள பூந்தி மாவட்டம் கோட்டா நகரத்திலிருந்து 36 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலங்காரமான கோட்டைகள், அற்புதமான அரண்மனைகள் ஆகியவற்றுடன் ராஜபுதன கட்டிடக்கலை அம்சங்களை தாங்கி நிற்கும் தூண்கள், சாரங்கள் போன்ற நுணுக்கமான அமைப்புகளும் இந்த இடத்தின் வசீகரங்களாக திகழ்கின்றன. இவை தவிர ஜொலிக்கும் ஆறுகள், ஏரிகள் மற்றும் சொக்க வைக்கும் நீர்வீழ்ச்சிகள் போன்ற அம்சங்கள் இப்பிரதேசத்தின் அழகைக் கூட்டுகின்றன. 

பூந்தி மாவட்டத்தின் பெரும்பகுதியானது பசுமையான வனம் போன்ற இயற்கை அமைப்பை பெற்றுள்ளதால் பலவித தாவர வகைககள் மற்றும் உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன. புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஓவியர்கள் மற்றும் கலைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்த ஸ்தலமாகவும் பூந்தி மாவட்டம் புகழ் பெற்றுள்ளது. ருட்யார்டு கிப்ளிங் தனது ‘கிம்’ எனும் படைப்புக்கான ஊக்கத்தை இப்பிரதேசத்தில் வசித்தபோது பெற்றதாக சொல்லப்படுகிறது.

5550 சதுர கி.மீ பரப்பில் பரந்து விரிந்திருக்கும் பூந்தி மாவட்டம் 2001ம் ஆண்டு சென்சஸ் கணக்கெடுப்பின்படி 88000 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பூந்தி மாவட்டமானது ஐந்து தாலுக்காக்கள், ஆறு நகரங்கள், நான்கு பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் 890 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.

பூந்தி நகரமே இம்மாவட்டத்தில் தலைநகரமாக விளங்குகிறது. இந்நகரில் கம்பீரமான கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் பாவ்ரி எனப்படும் பிரம்மாண்ட கிணறுகள் காணப்படுகின்றன.

பல்வேறு பழங்குடி இனத்தார் இப்பிரதேசத்தில் ஆதி காலத்திலிருந்து வசித்துள்ளனர். இவர்களில் மிக முக்கியமாக ‘பரிஹார் மீணா’ எனும் வம்சத்தினர் முக்கியமான வம்சாவளியினராக குறிப்பிடப்படுகின்றனர்.

இந்த வம்சத்தை சேர்ந்த பூந்தா மீனா எனும் மன்னரின் பெயரைச் சார்ந்தே இந்த பூந்தி எனும் பெயர் வந்ததாக நம்பப்படுகிறது. 1342ம் ஆண்டு ராவ் தேவா ஹடா என்பவர் ஜைதா மீனா எனும் மன்னரிடமிருந்து பூந்தி பிரதேசத்தை கைப்பற்றி ஹடாவதி அல்லது ஹடோதி என்று பெயர் மாற்றம் செய்ததாக சொல்லப்படுகிறது.

அதன்பின் ஹடா ராஜபுத்திர வம்சத்தினர் 200 ஆண்டுகளுக்கு இப்பகுதியை ஆண்டுள்ளனர். 1533ம் ஆண்டு முகலாய பேரரசர் அக்பர் இப்பகுதியை வென்றபின்னர் அவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

பூந்தி மாவட்டத்தில் பெரும்பாலும் வீரத்துக்கு புகழ்பெற்ற ராஜபுத்திர இனத்தை சேர்ந்தவர்களே வசிக்கின்றனர். பெரும்பாலான பூந்தி பழங்குடி மக்கள் ராஜஸ்தானிய பாரம்பரிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றும் இயல்பை கொண்டுள்ளனர். ஹிந்தி மற்றும் ராஜஸ்தானிய மொழி இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

காளி தீஜ் எனும் பிரசித்தமான திருவிழா பூந்தி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹிந்து பஞ்சாங்கத்தின் பத்ரா மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) மூன்றாவது நாளில் தொடங்கி இரண்டு நாட்களுக்கு இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

பூந்தி கலாச்சாரத்தில் இசை மற்றும் ஓவியம் ஆகிய இரண்டும் பிரதான அம்சங்களாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. ஆகவே அதிக அளவில் இசைப்பாடகர்களையும் இசைக்கலைஞர்களையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது. இங்குள்ள பூந்தி ஓவியக்கல்லூரியில் முகலாய மற்றும் ராகமாலா பாணி ஓவியப்பாரம்பரியத்தை ஆதாரமாக கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது.

இங்கு தாராகர் கோட்டை, பூந்தி அரண்மனை, ராணிஜி- கி – பாவ்ரி மற்றும் நவால் சாஹர் போன்ற பிரசித்தமான சுற்றுலா அம்சங்கள் அமைந்துள்ளன. இவை தவிர சுக் மஹால், சௌராஸி கம்போன் கி சாத்ரி, ஜெயித் சாஹர் ஏரி மற்றும் ஃப்பூல் சாஹர் போன்ற இதர சுற்றுலா அம்சங்களையும் இங்கு காணலாம்.

பூந்தி நகர ரயில் நிலையம் பழைய நகரத்திலிருந்து தெற்கே 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஜெய்பூர், ஆக்ரா, வாரணாசி, டெஹ்ராடூன் போன்ற நகரங்களிலிருந்து வரும் ரயில்கள் இந்நிலையத்தின் வழியே செல்கின்றன.

பூந்தி நகரத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் பல நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் பேருந்து சேவைகள் உள்ளன. மாதவ்பூர், பிக்கானேர், ஜெய்பூர், கோட்டா போன்ற பல நகரங்களுக்கு பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

பிஜோலியா, உதய்பூர், அஜ்மீர் மற்றும் ஜோத்பூர் போன்ற நகரங்களிலிருந்தும் பூந்திக்கு பேருந்துச்சேவைகள் உள்ளன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட பருவம் இப்பிரதேசத்தில்  சுற்றுலா மேற்கொள்ள உகந்தது.

Please Wait while comments are loading...