பொதுவாக திருப்பதி செல்லும் பக்தர்கள் என்ன செய்வார்கள்? நேரே திருமலைக்கு சென்று திருவேங்கடமுடையானை மட்டும் தரிசித்து விட்டு வீட்டிற்கு திரும்பி விடுவார்கள். ஆனால் அவரை தரிசித்துவிட்டு வருவதற்குள் நாம் எப்படியும் மிகவும் சோர்ந்து விடுவோம். அதனாலையே, திருப்பதியை சுற்றியுள்ள முக்கிய கோவில்களுக்கு நாம் செல்வதில்லை. இன்னும் சிலருக்கு அது என்னென்ன கோவில்கள் என்றே தெரிவது இல்லை!
ஆனால் திருமலைக்கு செல்லும் முன், அரை நாள் இருந்தால் போதும். இந்த முக்கிய ஸ்தலங்கள் அனைத்தையும் நாம் தரிசித்து விடலாம்! அவை என்னென்ன என்று கீழே படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில், நாராயணவனம்
திருப்பதியில் இருந்து 38 கிமீ தொலைவில் நாராயணவனத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ வெங்கடேசப் பெருமான் ஸ்ரீ பத்மாவதி தேவியை இந்த கோவிலில் தான் மணந்துக் கொண்டாராம். அவர்கள் திருமணத்தின் போது மாவு அரைத்த இயந்திரத்தைக் கூட இங்கு நீங்கள் காணலாம்.
கோயில் வளாகத்தில் ஸ்ரீ பத்மாவதி கோயில், ஸ்ரீ ஆண்டாள் கோயில், ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண கோயில் மற்றும் ஸ்ரீ ரங்கநாயக்குலா கோயில் ஆகியவற்றுக்கான தனி சன்னதிகளும் உள்ளன. புதிதாக திருமணம் ஆனவர்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள், ஏன் அனைவரும் இந்த கோவிலுக்கு சென்று வரவேண்டும்.

பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில், அப்பளயகுண்டா
திருப்பதியில் இருந்து 18 கிமீ தொலைவில், அதாவது நாராயணவனம் சென்று வரும் வழியில் அப்பளயகுண்டாவில் இந்த பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. அபய ஹஸ்த தோரணையில் நின்று காட்சி கொடுக்கும் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமியின் அழகில் நாம் நம்மை தொலைப்பது உறுதி.
இந்த பழமையான கோவிலில் பத்மாவதி தேவி, ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளும் உள்ளன. இந்த கோயிலில் உள்ள பிரத்யேகமான காற்றுக் கடவுளை வழிபட்டு சென்றால், நாள்பட்ட நோய்களில் இருந்தும் கூட நிவாரணம் கிடைக்குமாம்.

ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமி திருக்கோயில், திருப்பதி
திருப்பதி நகரில் இருந்து 2 கிமீ தொலைவில், அதாவது திருப்பதி ரயில் நிலையம் மற்றும் விஷ்ணுநிவாசம் காம்ப்ளக்ஸ்க்கு நேர் எதிரே ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கட்டிடக்கலையின் அழகைக் காணவே இங்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். நுழைவாயிலில் இருந்து அதன் உள் முற்றங்கள் வரை, இந்த கட்டமைப்பின் அனைத்து அம்சங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த கோவில் பல நூற்றாண்டுக் கால வரலாற்றையும் கொண்டுள்ளது. தமிழ் திரைப்படம் தசாவதாரத்தில் வருவது போல, சோழ மன்னன் சிதம்பரத்தின் திவ்ய தேச பெருமானான ஸ்ரீ கோவிந்தராஜரைக் கடலில் கரைத்தார். அவர் நினைவாக அவ்வாலய உத்சவமூர்த்தியை சில வைணவர்கள் ராமானுஜர் உதவியுடன் இங்கு நிர்மாணம் செய்தனர்.

ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், ஸ்ரீநிவாச மங்காபுரம்
திருப்பதியில் இருந்து 11 கிமீ தொலைவில் ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் இந்த புகழ்பெற்ற ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எப்போதோ கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோவில் கலியுகத்தில் நல்லிணக்கத்தை மீட்டெடுக்கப் பிறந்த இந்துக் கடவுளான விஷ்ணுவின் அவதாரமான வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
திருமலை மலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானை தரிசிக்க முயலும் எவரும் ஏதோ ஒரு காரணத்தினால் அவரை தரிசிக்க முடியாமல் போகலாம். தான் திருமலையில் மட்டுமல்ல எங்கும் இருப்பேன் என்று உணர்த்துவதற்காக ஸ்ரீநிவாச மங்காபுரத்தை திருவேங்கடமுடையான் தன் திருக்கரங்களால் தொட்டு ஆசீர்வதித்ததாக சொல்லப்படுகிறது. இங்கு சென்று வந்தால் திருமலை சென்று வந்ததற்கான புண்ணியமும் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீ கோதண்டராமர் சன்னதி, திருப்பதி
திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இருந்து திருப்பதி நகரின் மையப்பகுதியில் இந்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கே ராமர், லட்சுமணர், சீதா தேவி மற்றும் ஹுனுமனுடன் காட்சி தருகிறார்.
10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில் ஸ்ரீ ராமர் திருப்பதிக்கு விஜயம் செய்ததை நினைவுபடுத்துகிறது. அதனால் இங்கு உகாதி மற்றும் ஸ்ரீராமநவமி விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

ஸ்ரீ கபிலேஸ்வர் கோயில், கபில தீர்த்தம்
திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவில், திருப்பதியில் ஷேஷாத்ரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கபிலேஸ்வர சுவாமி கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். திருப்பதி அருகில் உள்ள பெரிய சிவன் ஆலயம் இது ஒன்று மட்டுமே.
துறவி கபில மகரிஷி இங்கு வாழ்ந்ததாகவும், சிவபெருமானின் சிலைக்கு முன்னால் உள்ள குகையில் வழிபாடு மற்றும் தியானம் செய்ததாகவும் கூறப்படுகிறது, எனவே இந்த துறவியின் பெயரில் கபில தீர்த்தம் என்று பெயரிடப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள ஒரு பெரிய குளத்தில் 100 அடிக்கும் மேல் உயரத்தில் இருந்து கீழே விழும் ஒரு தனித்துவமான நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

ஸ்ரீ பத்மாவதி திருக்கோயில், திருச்சானூர்
உங்கள் திருப்பதி பயணம் அம்பாளை காணாமல் நிச்சயம் முழுமையடையாது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் முதலில் தாயாரை தரிசித்து விட்டு தான் திருமலைக்கு பயணிக்க வேண்டும். திருப்பதியில் இருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருச்சானூருக்கு ஏராளமான பேருந்துகளும், டாக்ஸிகளும் இயக்கப்படுகின்றன.
பத்மாவதி தேவி தங்கத் தாமரை மலராகத் தோன்றியதாகக் கூறப்படும் இந்த ஏரியில் முழு பக்தியுடன் நீராடுவது தெய்வீகமாகக் கருதப்படுகிறது. சிறப்பு திருவிழாக்கள் மற்றும் பிரமாண்டமான கொண்டாட்டங்களில், பத்ம சரோவரத்தின் பழைய நீரில் நீராடவும் பிரார்த்தனை செய்யவும் பெரும் கூட்டம் கூடுகிறது.



Click it and Unblock the Notifications





