புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் திருமணம் முடித்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வருவது மிகவும் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு சம்பிரதாயமாகும். இல்லற வாழக்கையை இறைவனின் ஆசீர்வாதத்துடன் துவங்குவது நல்ல விஷயம் தானே. ஆனால் திருப்பதி கோவிலில், புதிய திருமண தம்பதிகளுக்காக சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. அந்த டிக்கெட்டில் நீங்கள் உங்கள் துணையுடன் மிக அருகில் நின்று திருப்பதி ஏழுமலையானை தரிசித்து மகிழலாம்!
திருப்பதியில் புதுமண தம்பதிகளுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானின் தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெறுவதை நீங்கள் பலமுறை பார்த்து இருப்பீர்கள். தற்போது திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், புதுமணத் தம்பதிகளுக்கு சிறப்பு வாய்ப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கியுள்ளது. வெங்கடேசப் பெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற அவர்கள் சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட்டுகளை புக் செய்யலாம் என்று TTD தேவஸ்தானம் கூறியுள்ளது.

புதுமண தம்பதிகளாக ஏழுமலையானை தரிசிப்பது விசேஷம்
திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்பதால், புதிய பயணம் தொடங்கும் முன் வெங்கடேசப் பெருமானின் அருளைப் பெறுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. திருமணமான உடனேயே தம்பதிகள் திருமலை கோயிலுக்குச் செல்வது ஒரு முக்கிய பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது. அலங்காரம் செய்து, திருமண ஆடைகளை அணிந்து கொண்டு நேரே சென்று ஏழுமலையானை தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.
ஸ்ரீவாரி கல்யாணோத்ஸவத்தில் புதுமண தம்பதிகளுக்கு முக்கியத்துவம்
பலமுறை நீங்கள் ஸ்ரீவாரி கல்யாணோத்ஸவம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள், அதில் பல பக்தர்கள் கலந்து கொள்வதையும் நீங்கள் கண்டு இருப்பீர்கள். உண்மையில் இது திருமணமான தம்பதிகள் ஒன்றாக சேர்ந்து பார்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று. அதனால் இப்போதும் இந்த ஸ்ரீவாரி கல்யாணோத்ஸவத்தில் புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு 20 டிக்கெட்டுகள்
திருமலையில் நடைபெறும் கல்யாணோத்ஸவம் சேவையில் கலந்து கொள்ள ஒரு வாரத்திற்கு முன் திருமணம் செய்து கொண்ட புதிய தம்பதிகள் விண்ணப்பிக்கலாம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு நாளைக்கு 20 டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டிக்கெட்டின் விலை ரூபாய் 1000 ஆகும். ஸ்ரீவாரி கல்யாணோத்ஸவம் மற்றும் ஏழுமலையான் சிறப்பு தரிசனம் ஆகிய இரண்டிற்கும் டிக்கெட் செல்லுபடியாகும்.
அர்ஜிதா சேவா லக்கி டிப் கவுண்டருக்குச் செல்லுங்கள்
இந்த டிக்கெட்டைப் பெறுவதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். முதலாவதாக, புதுமணத் தம்பதிகள் CRO அலுவலகத்தில் உள்ள அர்ஜிதா சேவா லக்கி டிப் கவுண்டருக்குச் செல்ல வேண்டும், அங்கு மணமகனும், மணமகளும் தங்கள் திருமணப் படங்களை ஆதாரத்திற்காக சமர்ப்பிக்க வேண்டும். இவற்றுடன், அவர்களின் ஆதார் அட்டையையும் அடையாளச் சான்றாகச் சமர்ப்பிக்க வேண்டும். செயல்முறை முடிந்ததும், புதுமணத் தம்பதிகள் நேரடியாக கல்யாணோத்ஸவம் டிக்கெட்டைப் பெறலாம்.
திருமணம் ஆன ஒரே வாரத்திற்குள் செல்லுங்கள்
ஏழுமலையானை தரிசிப்பது புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம், அன்பு, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது. எந்தவொரு நல்ல செயலையும் செய்வதற்கு முன்னர் தெய்வ வழிபாடு என்பது வேண்டும். அதிலும் திருப்பதி எழுமலையான் என்றால் கூடுதல் சிறப்பு தானே. நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ திருமணம் ஆன ஒரு வாரத்திற்குள் இந்த சேவையைப் பயன்படுத்தி ஏழுமலையானை மிக அருகில் நின்று தரிசித்து மகிழுங்கள்!



Click it and Unblock the Notifications





