எல்லோருக்குமே வெளிநாட்டு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், ஆனால் அதற்கான பணமோ நேரமோ பெரும்பான்மையான மக்களிடம் இருப்பது இல்லை! இருந்தாலும் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்! நம் நாடு பல அதிசயங்கள் நிறைந்த அற்புத பூமியாகும். இந்தியா எண்ணற்ற இயற்கை அதிசயங்களாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட அதிசயங்களாலும் நிறைந்து இருக்கிறது.
பனி மூடிய சிகரங்கள், மலை முகடுகள், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள், கரை புரண்டு ஓடும் நதிகள், வெள்ளைப் போர்வை போற்றிய பனிப் பிரதேசங்கள், பசுமையான பள்ளத்தாக்குகள், பூந்தோட்டங்கள், பழத்தோட்டங்கள், கண்கவர் ஏரிகள் என ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவற்றில் பல இடங்கள் பார்ப்பதற்கு அச்சு அசல் வெளிநாடுகளில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்கள் போலவே இருக்கின்றன! கீழே படித்து பாருங்களேன் நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்!

குல்மார்க் – மேட்டர்ஹார்ன், சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தின் பசுமையான புல்வெளிகளையும், பனி படர்ந்த மலைகளையும் உலகின் வேறு எந்த பகுதியுடனும் நாம் ஒப்பிட முடியாது. ஆனால் இந்தியாவின் காஷ்மீர் எந்தவிதத்திலும் அதற்கு குறைவில்லாத அளவில் அழகுடன் காணப்படுகிறது. பசுமையான பள்ளத்தாக்குகள், சமவெளிகள், பனி படர்ந்த மலைகள், சிகரங்கள் அனைத்தும் அப்படியே சுவிட்சர்லாந்தை பிரதிபலிக்கிறது.

துலிப் கார்டன் – ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
நெதர்லாந்தின் துலிப் கார்டன் உலக அளவில் மிகவும் பிரபலமானது. இங்கு பல்வேறு படங்களும் பாடல்களும் படமாக்கப்பட்டுள்ளன. ஏன் தமிழ் படமான அந்நியனில் 'குமாரி' பாடல் இங்கு தான் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த துலிப் கார்டன் இந்தியாவிலேயே இருக்கிறது. ஆம் ஸ்ரீநகரில் உள்ள இந்திரா காந்தி துலிப் கார்டன், துலிப் மலர்களால் பூத்துக் குலுங்கி நம்மை வரவேற்கிறது.

ஆலி – வால்டாஸ், அலாஸ்கா
உலகின் பல்வேறு இடங்களில் பனிச்சறுக்கு விளையாட்டுகள் மிகவும் பிரபலம் என்றாலும் அலாஸ்கா தான் அதற்கு எல்லாம் தலைநகரம் என்று சொல்லுவார்கள். ஏனெனில் ஆண்டின் பெரும்பான்மையான நாட்களில் இந்த படம் பனியால் மட்டுமே சூழப்பட்டு இருக்கிறது. உத்தரகாண்ட்டின் ஆலி குளிர் காலத்தில் மிகுதியான பனியால் அப்படியே அலாஸ்கா போலவே காட்சியளிக்கிறது. நீங்கள் குளிர் காலத்தில் இங்கு சென்றால், அலாஸ்கா போலவே பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

பூக்கள் பள்ளத்தாக்கு – ஆண்டிலோப் பள்ளத்தாக்கு, அமெரிக்கா
உத்தரகாண்ட்டில் உள்ள தேசிய பூங்கா பூக்கள் பள்ளத்தாக்கு ஆண்டுதோறும் வித்தியாசாமான வண்ணமயமான வெவ்வேறு பூக்களால் பூத்துக் குலுங்கிறது. இந்த பூக்கள் பள்ளத்தாக்கின் அழகு அப்படியே பார்ப்பதற்கு அமெரிக்காவில் உள்ள ஆன்டெலோப் பள்ளத்தாக்கை போலவே இருக்கிறது.

குருடோங்மர் - ஜோகுல்சார்லன் ஏரி, ஐஸ்லாந்து
ஒரு குளிர்கால அதிசயத்தில் அழகிய நிலப்பரப்புகளைப் பார்க்க விரும்புகிறீர்களா? ஐஸ்லாந்துக்கான பயணம் நீண்ட மற்றும் விலை உயர்ந்தது. அதற்குப் பதிலாக, இதேபோன்ற அனுபவத்திற்காக நீங்கள் இந்தியாவின் மிகச் சிறிய மாநிலமான சிக்கிமுக்குச் செல்லலாம். சிக்கிமில் உள்ள குருடோங்மார் ஏரி ஐஸ்லாந்தில் உள்ள அழகிய ஏரிகளை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

லட்சத்தீவு - பிரெஞ்சு பாலினேசியா
பிரஞ்சு பாலினேசியா என்பது அழகிய சிறு சிறு தீவுகளால் சூழப்பட்ட ஒரு தீவுக்கூட்டம் ஆகும். ஹனிமூன் செல்ல, ஓய்வெடுக்க, நண்பர்களுடன் குதுகலிக்க என பற்பல காரணங்களுக்காக பெரும்பாலான மக்கள் கூட்டம் இங்கு படையெடுத்து வருவது வழக்கம். நீங்கள் எப்போதாவது பிரெஞ்சு பாலினேசியாவிற்கு செல்ல வேண்டும் என்று கனவுக் கண்டிருந்தால், அதிக செலவு இல்லாமல் பிரெஞ்சு பாலினேசியாவுக்குச் செல்லும் வாய்ப்பு இங்கே உள்ளது. சிறு பட்ஜெட்டில் பிரெஞ்சு பாலினேஷியாவிற்கு சென்று வரலாம்.

ப்ளோடிங் மார்கெட் – பாங்காக்
எப்பொழுதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கும் ஒரு இடம் தான் பாங்காக். துடிப்பான நகர கலாச்சாரம், வண்ணமயமான ஹோட்டல்கள், பார்க்குகள், மிதவை மார்கெட் என பாங்காக்கில் பல அழகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அதிலும் இந்த மிதவை மார்கெட்டிற்கு செல்லாமல் பாங்காக் பயணம் முழுமையடையாது. நீங்கள் அங்கு செல்ல திட்டமிட்டால் நம் காஷ்மீருக்கு சென்று வாருங்கள், தண்ணீரில் ஷிகாரா சவாரி, மிதக்கும் சந்தையைச் சுற்றி பார்ப்பது என பாங்காங் நினைவுகளை நீங்கள் இங்கேயே உருவாக்கலாம்.

பிரெஞ்சு டவுன் – பிரான்ஸ்
உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களும் பரவலாக சென்று வர வேண்டும் என்று நினைக்கும் இடம் தான் பிரான்ஸ். பிரெஞ்சு அரசின் கீழ் இருந்து தான் பாண்டிச்சேரி சுதந்திரம் பெற்றது எனது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியில் பிரஞ்சுக் காலத்தில் கட்டப்பட்ட பல கட்டிடங்கள், அலுவலங்கள், லைட்ஹவுஸ் ஆகியவை இன்றும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பிரஞ்சு காலனி பார்ப்பதற்கு பிரான்ஸ் போலவே இருக்கிறது.

ஆலப்புழா – வெனிஸ்
ஆலப்புழா கிழக்கின் வெனிஸ் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. நகரத்தைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் வெனிஸைப் போல இருக்கின்றன. ஆலப்புழாவின் உப்பங்கழிகளில் சவாரி செய்வது உங்களை வெனிஸ் போலவே உணரவைக்கும். ஆகவே வெனிஸின் உணர்வைப் பெற நீங்கள் அங்கு தான் செல்ல வேண்டும் என்று அர்த்தம் இல்லை,கேரளாவின் ஆலப்புழாவிற்கு செல்லலாம். ஹவுஸ்போட்டில் இருந்துக் கொண்டு பிரஷ்ஷாக மீன் பிடித்து சமைத்து சாப்பிடுவதே மிகவும் ருசியாக இருக்கும்.

சித்ரகூட் நீர்வீழ்ச்சி – நயாகரா, கனடா
உலக அளவில் பேமஸ் ஆன நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகைப் பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. அது போல தான் சத்தீஸ்கரின் சித்ரகூட் நீர்வீழ்ச்சி சீசன் நேரங்களில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. சித்ரகூட் பார்ப்பதற்கு அச்சு அசல் நயாகரா போலவே இருக்கிறது. அதனால் தான் இது இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது.
நீங்களே பார்த்தீர்களா? இந்தியாவின் எத்தனை இடங்கள் வெளிநாடு போலவே இருக்கின்றது என்று தெரிகிறதா? இதற்காகவா நாம் பாஸ்போர்ட், விசா, வெளிநாட்டு கரன்சி என்று செலவு செய்ய வேண்டும். அழகாக திட்டமிட்டு பட்ஜெட் சுற்றுலா செய்துவிடலாம்! இப்பொழுதே யோசியுங்கள்!



Click it and Unblock the Notifications








