பிஸியான சிட்டியான சென்னையில் மால்கள், சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், கடற்கரைகள், கோவில்கள், பாரம்பரிய கட்டிடங்கள் என பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் இயற்கை சார்ந்த இடங்கள் என்னவோ குறைவு என்று தான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருப்போம்! ஆனால் அது உண்மையல்ல! ஆம்! அழகான வனவிலங்குகளையும், அரிய வகை பறவை இனங்களையும், இயற்கையின் மடியிலேயே ரசிக்க சென்னையில் பல இடங்கள் உண்டு. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேடந்தாங்கல் சரணாலயம் முதல் புலிகாட் ஏரி வரை இயற்கையோடு இணைந்து வன விலங்குகளை நீங்கள் ரசித்து மகிழலாம். உங்களுக்கான டிராவல் கைடு இதோ!

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
பெரும்பாலான சென்னை மக்களால் வண்டலூர் உயிரியல் பூங்கா என்றழைக்கப்படும் இந்த பூங்காவில், மயில், கொரில்லா, காட்டு மாடுகள், புலிகள், சிங்கங்கள், குரங்குகள், கரடி, சிறுத்தை, மலைப்பாம்பு, ராஜ நாகம் உட்பட 138 வெவ்வேறு வகையான உயிரினங்களையும், அரிய வகை தாவரங்களையும் கண்டு மகிழலாம். 1260 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் வண்டலூர் பூங்கா தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாகும்.
சென்னையில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அறிஞர் உயிரியல் பூங்கா, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் பிடித்த வார இறுதி இடமாகும். குழந்தைகளுக்கான கட்டணம் ரூ. 30 ஆகவும், பெரியவர்களுக்கான கட்டண, ரூ. 90 ஆகவும் வசூலிக்கப்படுகிறது. இங்கே ஜீப் ரைடு, சைக்கிள் ரைடுகளும் உள்ளன. நீங்கள் புக் பண்ணி சுற்றிப் பார்க்கலாம்.

சென்னை ஸ்நேக் பார்க்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள பாம்புப் பூங்கா சென்னை மக்களுக்கு மிகவும் பரிச்சயமான இடமாகும். 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பூங்காவில் கொடிய ராஜநாகம் முதல் மலைப்பாம்புகள், விரியன் பாம்புகள் மற்றும் பிற ஊர்வன வரை பரந்த அளவிலான பாம்புகள் உள்ளன. நாட்டில் அழியும் நிலையில் உள்ள மலைப்பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக பாம்பு பூங்கா மாறியுள்ளது.
பாம்பு பூங்காவை ஒட்டி, பறவைகள் மற்றும் விலங்குகளின் தொகுப்புடன் சிறுவர் பூங்கா உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் குழந்தைகள் யானை மற்றும் குதிரை சவாரி செய்யலாம். குழந்தைகளுக்கான கட்டணம் ரூ. 5 ஆகவும், பெரியவர்களுக்கான கட்டண, ரூ. 1 ஆகவும் வசூலிக்கப்படுகிறது.

முதலை பூங்கா
மகாபலிபுரத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முதலை வங்கி 1976 ஆம் ஆண்டில் ஹெர்பெட்டாலஜிஸ்ட் ரோமுலஸ் விட்டேக்கரால் நிறுவப்பட்டது. இங்கே நீங்கள் திறந்த குளங்களில் கிடக்கும் பல்வேறு வகையான இந்திய மற்றும் ஆப்பிரிக்க முதலைகளை காணலாம். இந்த இடத்தில் பாம்பு பண்ணை ஒன்றும் உள்ளது. இங்குள்ள ஆய்வகங்களில் ஆன்டி-வெனம் தயாரிக்கப்படுகிறது. பாம்பு விஷத்தை பிரித்தெடுக்கும் செயல்முறையையும் நீங்கள் இங்கே பார்க்கலாம். இதற்கான நுழைவுக்கட்டணம் ரூ. 35 ஆகும்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
காஞ்சிபுரத்தில் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அழகிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 40,000 வெவ்வேறு வகையான பறவைகளுக்கு பிரபலமான இடம்பெயர்வு இல்லமாகும். பாரிங்டோனியா சதுப்புநிலங்கள், செழுமையான மிதக்கும் வாழ்விடங்கள், பரந்த நெல் வயல் போன்ற அழகிய சூழலுக்கு இடையே அமர்ந்து, திரிந்து, பறந்துக் கொண்டிருக்கும் வண்ணமயமான பறவைகளை கண்டு ரசிக்க நீங்கள் இங்கே வருகை தர வேண்டும்.

கிண்டி தேசிய பூங்கா
இந்தியாவின் எட்டாவது சிறிய தேசிய பூங்காவாக தரவரிசையில் உள்ள கிண்டி தேசியப் பூங்கா நீங்கள் கட்டாயம் சென்னையில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். பல அழிந்து வரும் வனவிலங்குகளையும் தாவரங்களையும் இங்கே நீங்கள் பார்க்கலாம். அதோடு மட்டுமில்லாமல் பாம்பு பூங்கா, குழந்தைகள் பூங்கா போன்றவையும் உள்ளன.

புலிகாட் ஏரி
759 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள புலிகாட் ஏரி பறவைகள் சரணாலயம் தென்னிந்தியாவில் ஒரு பிரபலமான பறவைகள் தலமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் பறவைகளை வழங்குகிறது. சாம்பல் பெலிகன்கள், ஃபிளமிங்கோக்கள், வர்ணம் பூசப்பட்ட நாரைகள், திறந்த நாரைகள் ஆகியவற்றை இங்கே நீங்கள் கண்டு ரசிக்கலாம். சென்னையிலிருந்து ஒரு மணி நேர பயண நேரத்தில் அமைந்துள்ள புலிகாட் ஏரி இயற்கை சார்ந்த ஒரு அழகிய இடமாகும்.
இந்த வார இறுதியில் நீங்கள் இந்த அழகிய இடங்களில் எந்த இடத்திற்கு செல்லப் போகிறீர்கள்? பிளான் பண்ணிவிட்டீர்களா?



Click it and Unblock the Notifications





