விடுமுறை என்றாலே குடும்பத்துடன் வெளியில் சென்று ஜாலியாக பொழுதை கழிப்பதே தனி சுகம் தான். அதிலும் குழந்தைகளை கூட்டிச் சென்று அவர்களை சந்தோஷமாக மகிழ்விப்பதுடன், பல விஷயங்களை தெரிய வைத்து அவர்களின் அறிவையும் வளர்க்கும் விதமான இடங்களுக்கு அழைத்துச் செல்வது பெற்றொர்களின் கடமையும் கூட.

அப்படி வரவிருக்கும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்று ஜாலியாக என்ஜாய் செய்து வருவதற்கு ஏற்ற சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள உள்ள டாப் 6 இடங்களை பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம். 2025ம் ஆண்டில் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமையில் வேறு வருகிறது. சனி,ஞாயிறு இரண்டு நாட்கள் ஜாலியாக சுற்றி பார்த்து விட்டு வருவதற்கு ஏற்ற இடங்கள் இதோ...
சென்னையில் குழந்தைகளுடன் என்ஜாய் பண்ண ஏற்ற டாப் 6 இடங்கள் :
1. விஜிபி கோல்டன் பீச்
சென்னையின் மிக அழகான இடங்களில் ஒன்று விஜிபி கோல்டன் பீச். சென்னையில் இருந்து 18 கி.மீ., தொலைவில் ஈசிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது விஜிபி யுனிவர்செல் கிங்டம். கடல் அலைகளின் இயற்கையான அழகை ரசிக்க சுத்தமான கடற்கரை, குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு அம்சங்கள், நீச்சல் குளம், த்ரில்லிங் அனுபவத்தை தரும் சாகச பயணங்கள் என ஏராளமான விஷயங்கள் இங்கு உள்ளது. பெரும்பாலும் தண்ணீருக்குள் பயணிக்கும் ரைடர்களே இங்கு உள்ளதால் ஒரு நாள் முழுவதும் குழந்தைகள் ஜாலியாக என்ஜாய் பண்ண ஏற்ற இடமாக விஜிபி கோல்டன் பீச் இருக்கும்.

2. வண்டலூர் விலங்கியல் பூங்கா
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் ரசித்து மகிழ ஏற்ற இடமாக இருக்கும். தென் கிழக்க ஆசியாவின் மிகப் பெரிய விலங்கியல் பூங்காவான இதில் கரடி, சிங்கம், புலி, யானை, கோப்ரா என டிஸ்கவரி சேனலில் மட்டுமே பார்த்து ரசித்த பலவிதமான விலங்குகளை நேரிலேயே இங்கு கண்டு ரசிக்க முடியும். நிஜமாகவே ஒரு காட்டுக்குள் சென்று விட்டு வந்த உணர்வு ஏற்படும். குழந்தைகள் யானை மீது சவாரி செய்யும் வாய்ப்பும் இங்கு உள்ளது. இங்கு மியூசியம் ஒன்றும் உள்ளது. குழந்தைகள் பல அரிய விஷயங்களை தெரிந்து கொள்ள இது ஏற்றதாக இருக்கும்.
3. வேடந்தாங்கல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் குழந்தைகள் அவசியம் காண வேண்டிய ஒரு அழகான இடமாகும். கிட்டதட்ட 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 30,000 பறவைகளாவது வந்து செல்லும். இவற்றில் நாம் இதுவரை பார்க்காத அரிய வகை வெளிநாட்டு பறவைகளும் உண்டு. இயற்கை அழகு மாறாமல் பராமரிக்கப்பட்டு வரும் மிக பழமையான இந்த பறவைகள் சரணாலயம் காண்போரை நிச்சயம் பரவசமடைய செய்யும்.
4. மாமல்லபுரம்
சென்னையில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடங்களில் ஒன்று மாமல்லபுரம் கடற்கரை குகை கோவில். பல்லவர் கால கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் இங்குள்ள வித்தியாசமான சிற்பங்கள், எந்த விதமான பிடியும் இல்லாமல் நிற்கும் பிரம்மாண்ட பாறை, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பகங்கள், கடற்கரை, பாரம்பரியத்தை விளக்கும் நிகழ்ச்சிகள், மியூசியம் ஆகியவை பார்க்க, பார்க்க நம்மை கவர்ந்து கொண்டே இருக்கும். நேரம் போவதே தெரியாமல் சுற்றி பார்க்க, அழகாக போட்டோக்கள் எடுத்து மகிழ ஏற்ற இடம் மாமல்லபுரம். உற்சாகத்துடன் நம்முடைய கலாச்சாரத்தையும் குழந்தைகளுக்கு எடுத்து காட்ட ஏற்ற இடம்.
5. தடா நீர்வீழ்ச்சி
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் வழியில் அமைந்துள்ள தடா நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் உப்பலமடுகு நீர்வீழ்ச்சி சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சமீப காலமாக மிக பிரபலமாகி வரும் சென்னையின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. நகர சூழலிலேயே வாழ்ந்து பழகிய குழந்தைகளுக்கு இங்குள்ள நீர்வீழ்ச்சி புதிய அனுபவத்தையும், உற்சாகத்தையும் தருவதாக இருக்கும். டிரக்கிங் செல்வதற்கும் ஏற்ற இடம் இதுவாகும். சுற்றுலாப் பயணிகளை நிச்சயம் அதிகம் ஈர்க்கும் இடம் இதுவாகும். சென்னையை விட்டு சற்று தொலைவான, புதிய இடத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல திட்டமிடுபவர்களுக்கு ஏற்ற இடம் இந்த தடா நீர்வீழ்ச்சியாகும்.
6. நாகலாபுரம் நீர்வீழ்ச்சி
சென்னையில் இருந்து 74 கி.மீ., தொலைவில் ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது நாகலாபுரம். கடந்த ஆண்டுகளில் சென்னைவாசிகளை அதிகம் ஈர்க்கும் இயற்கை சூழல் நிறைந்த சுற்றுலா தலம் என்றால் அது நாகலாபுரம் நீர்வீழ்ச்சி தான். நண்பர்கள், குழந்தைகள், குடும்பத்துடன் செல்வதற்கு ஏற்ற பிக்னிக் ஸ்பாட் இதுவாகும். இங்குள்ள நாகலா மலைகள், அங்குள்ள நீர்வீழ்ச்சி ஆகியவை மிகவும் பிரபலம். சினிமாக்களில் மட்டுமே பார்த்து வியந்த அழகிய நீர்வீழ்ச்சியை, இயற்கை அழகை இங்கு நாம் நேரடியாக கண்டு, அதன் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். இங்கு டிரக்கிங் செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. மூன்று நீர்வீழ்ச்சிகள் ஒரே இடத்தில் இருப்பதை காண்பதே உற்சாகத்தின் உச்சகத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் விஷயம் ஆகும்.
மறக்காமல் ஒரு முறையாவது மிஸ் பண்ணாமல் இந்த இடங்களுக்கு சென்று பார்த்து விட்டு வாருங்கள். வாழ்நாளில் மறக்க முடியாத புதிய அனுபவமாக உங்கள் டிரிப் இருக்கும்.



Click it and Unblock the Notifications






