Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாட்டிலேயே இவ்வளவு அற்புதமான தேனிலவு ஸ்தலங்கள் இருக்கும் போது ஏன் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும்?

தமிழ்நாட்டிலேயே இவ்வளவு அற்புதமான தேனிலவு ஸ்தலங்கள் இருக்கும் போது ஏன் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும்?

புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு என ஒரு தனிப்பட்ட சூழல் நிச்சயம் தேவைப்படுகிறது. ஒருவரிடம் ஒருவர் ஒளிவு மறைவின்றி நன்றாக பேசி மகிழ ஒரு இடம் தேவைப்படுகிறது. அதற்காக தான் தேனிலவு செல்கிறார்கள். திருமணத்திற்கு செலவு செய்ய விரும்பாத தம்பதியினர் கூட தேனிலவிற்கு அதிக செலவு செய்வது இயல்பு தான். மேலும், தேனிலவு என்றால் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், மாலத்தீவுகள் தான் செல்ல வேண்டும் என்று மக்கள் மனதில் ஒரு மாய பிம்பம் உள்ளது. ஆனால் மலிவான பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு உள்ளேயே அழகாக தேனிலவு சென்று வரலாம். தமிழ்நாட்டில் மிகவும் அருமையான குளிர் பிரதேசங்கள் நிறைய உள்ளன. இவற்றை விட்டுவிட்டு வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் தான் செல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லையே! ஆம்! இந்த பதிவை நீங்கள் படித்து பாருங்களேன்! உங்களுக்கே புரியும்!

ஊட்டி

ஊட்டி

இந்த பட்டியலில் முதல் இடம் வகிப்பது 'மலைகளின் ராணியான' ஊட்டி தான். ஆங்கிலேயர் காலத்தில் கோடை தலைநகரமாக இருந்த ஊட்டி இன்னும் காலனித்துவ சாரலை பிரதிபலிக்கிறது. உங்கள் அன்புக்குரியவருடன் சேர்ந்து ஊட்டி மலை ரயிலில் பயணிப்பது, பசுமையான தேயிலை தோட்டங்கள் வழியாக நடந்து செல்வது, தொட்டபெட்டா சிகரத்தின் கீழ் சரிவுகளில் அமைந்து கதை பேசுவது, பைக்காரா நீர்வீழ்ச்சியில் குளிப்பது என தேனிலவை அம்சமாக கழிக்கலாம்.

அவலாஞ்சி ஏரியில் முகாமிடுதல், செயற்கை ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்தல், ட்ரெக்கிங் செய்வது மற்றும் ரோஸ் கார்டன், ஊட்டி அரசு அருங்காட்சியகம், தாவரவியல் பூங்கா, ஊட்டியின் கல் மாளிகை, டைகர் ஹில்ஸ் ஆகியவற்றையும் நீங்கள் பார்வையிட வேண்டும். கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் மற்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் ஆகியவை ஊட்டிக்கு அருகிலுள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையமாகும்.

கொடைக்கானல்

கொடைக்கானல்

ஊட்டிக்கு அடுத்தபடியாக நாம் செல்ல வேண்டிய மலைவாசஸ்தலம் என்றால் அது 'மலைகளின் இளவரசியான' கொடைக்கானல் தானே! தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான தேனிலவு ஸ்பாட்டுகளில் முக்கிய இடம் வகிக்கும் கொடைக்கானலின் இயற்கை அழகால் சுற்றுலாப்பயணிகள் வசீகரிக்கப்படுகின்றனர்.

மாலை நேரத்தில் கோக்கர்ஸ் பூங்காவில் உலா வருவது, கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்துக் கொண்டு பேசி மகிழ்வது, தலையார் நீர்வீழ்ச்சிக்கு ட்ரெக்கிங் செய்வது, அமைதியான வட்டக்கானல் நீர்வீழ்ச்சியை பார்வையிடுவது என தேனிலவை கழிக்கலாம். மேலும் பிரையன்ட் பார்க், கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, சில்வர் கேஸ்கேட் மற்றும் பில்லர் ராக்ஸ் ஆகியவற்றையும் நீங்கள் பார்வையிட வேண்டும்.

குன்னூர்

குன்னூர்

ஊட்டிக்கு மிக அருகில் அமைந்துள்ள குன்னூர் நீங்கள் சந்திக்கப்போகும் மிக அழகான மற்றும் அமைதியான மலைவாசஸ்தலமாகும். மக்கள்தொகை குறைவாக இருப்பதால், மற்ற மலைவாசஸ்தலங்களில் இல்லாத அமைதியான மற்றும் நிம்மதியான சூழலை இது வழங்குகிறது.

தனிமையை விரும்பும் தம்பதிகளுக்கு குன்னூர் தான் சரியான் சாய்ஸ். சிம்ஸ் பார்க், கேத்தரின் நீர்வீழ்ச்சி, ட்ரூக் கோட்டை, மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு, நீலகிரி மலைகள், லேடி கன்னிங்ஸ் சீட், லாம்ப்ஸ் ராக், டால்பின் நோஸ், தாவரவியல் பூங்கா ஆகியவை இங்கே நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

மேகமலை

மேகமலை

குமுளியில் இருந்து 3 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய மேகமலை. பெயருக்கு எற்றர்போல் மேகங்கள் உங்களை தொட்டு செல்வதை நீங்களே உணரலாம். குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் தமிழ்நாட்டில் உள்ள மலைவாசஸ்தலத்தை நீங்கள் பார்வையிட விரும்பினால் நீங்கள் கட்டாயம் மேகமலைக்கு செல்ல வேண்டும்.

ஹைவேவிஸ் டேம், ஹைவேவிஸ் ஏரி, மணலார் அணை, ஆழமான கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் கிராமங்கள், மேல் மணலார் எஸ்டேட், வட்டப்பாறை, வெண்ணியர் தேயிலை எஸ்டேட், இரவாகலார் அணை, மகாராஜா மெட்டு ஆகியவை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

வால்பாறை

வால்பாறை

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வால்பாறை, ஆனைமலை மலைகளில் அமைந்துள்ள ஒரு அழகான மற்றும் அமைதியான மலைவாசஸ்தலமாகும். விஸ்பரிங் நீர்வீழ்ச்சி, சோலையார் அணை, சின்னக்கல்லார், பாலாஜி கோயில், காரமலை அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், குரங்கு அருவி, தொட்டபுர வியூ பாயின்ட், நாலாமுடி பூஞ்சோலை, நீரார் அணை, டாடா காபி எஸ்டேட் ஆகியவை நீங்கள் இங்கு பார்க்க வேண்டிய இடங்களாகும். மூடுபனி வானிலையால் சூழப்பட்ட அழகான மலைப்பாங்கான சாலைகளில் மனதிற்கு பிடித்தவருடன் நடந்து சென்று பாருங்களேன். அலாதியாக இருக்கும்!

ஏற்காடு

ஏற்காடு

சேலம் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஏற்காடு மிகவும் பிரபலமான ஒரு மலைவாசஸ்தலமாகும். அழகிய இயற்கை காட்சிகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் முதல் புத்துணர்ச்சி மற்றும் தூய்மையின் காற்று வரை, ஏற்காடு குறைந்த செலவில் ஒரு அருமையான சுற்றுலாவை வழங்குவதால் இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது.

ஏற்காடு ஏரி, புகழ்பெற்ற 32 கிமீ லூப் சாலை, பகோடா பாயிண்ட், பட்டுப் பண்ணை மற்றும் ரோஜா தோட்டம் ஆகியவற்றை பார்வையிடுவதோடு மான் பூங்கா, தி கிரேஞ்ச், லேடி சீட், அண்ணா பூங்கா, ஆர்கிடேரியம் ஆகியவற்றிற்கும் சென்று வரலாம்.

கொல்லி மலை

கொல்லி மலை

சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமடையாத கொல்லி மலை இயற்கையான மகத்துவத்தை தக்க வைத்திருக்கும் ஒரு அழகிய மலைவாசஸ்தலமாகும். கம்பீரமான கொல்லிமலை என்பது மேற்கு தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர்.

கடல் மட்டத்திலிருந்து 4,265 அடி அடி உயரத்தில் இந்த மலைத்தொடர் அமைந்திருப்பதால் மிகவும் குளிர்ச்சிகரமான வானிலேயே நிலவுகிறது. இதன் மோசமான 'ஹேர்பின் வளைவுகள்' காரணமாக இது 'மௌண்டெயின் ஆஃப் டெத்' என அழைக்கப்படுகிறது. ஆகயா கங்கை நீர்வீழ்ச்சி தொடங்கி, திராவிட பாணி கட்டிடக்கலையுடன் கூடிய அரபளீஸ்வரர் கோயில், தாவரவியல் பூங்கா மற்றும் டாம்கோல் மருத்துவப் பண்ணை வரை இங்கு ஆராய்வதற்கு நிறைய இருக்கிறது.

ஏலகிரி

ஏலகிரி

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏலகிரி ஒரு அழகிய சிறு மலைவாசஸ்தலமாகும். பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இரு பெரு நகரங்களிலிருந்தும் இதை எளிதில் அடையலாம். இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமான ஏலகிரி, சுற்றுலாப் பாதையில் இருந்து முற்றிலும் விலகி, அருகிலுள்ள மற்ற பிரபலமான மலைவாசஸ்தலங்களுடன் ஒப்பிடும்போது அமைதியான ஒரு அதிர்வை வழங்குகிறது. நீங்கள் இருவரும் சாகச பிரியர்கள் என்றால் நீங்கள் கட்டாயம் இங்கு தான் வர வேண்டும்.

ஜோர்பிங், ட்ரெக்கிங், ஜிப்பிங் லைனிங் மற்றும் ராக் க்ளைம்பிங் என ஏராளமான சாகச நடவடிக்கைகளில் நீங்கள் இங்கு ஈடுபடலாம். அது மட்டுமின்றி, அழகிய மலைகள், பள்ளத்தாக்குகள் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, நிலாவூர் ஏரி, தொலைநோக்கி கண்காணிப்பகம் ஆகியவற்றையும் கண்டுகளிக்கலாம்.

மாஞ்சோலை

மாஞ்சோலை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு அழகிய மலைவாழ் கிராமம் தான் மாஞ்சோலை! களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் மேல் கோதையாருக்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 3500 அடி உயரத்தில் இந்த அழகிய சிறு கிராமம் அமைந்துள்ளது! தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், அணைக்கட்டுகள் மற்றும் பசுமை மாறா மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த சிறு கிராமத்திற்கு நீங்கள் சென்று வாருங்களேன், உங்களது தேனிலவு நிச்சயம் மறக்க முடியாத ஒரு அற்புத அனுபவத்தைக் கொடுக்கும்.

டார்சன் குளம், காக்காச்சியில் உள்ள மினி கோல்ப் மைதானம், காக்காச்சி ஏரி, குதிரைவெட்டி, குட்டியார் அணை, மணிமுத்தாறு தேயிலை எஸ்டேட், மாஞ்சோலை தேயிலை எஸ்டேட், மணிமுத்தாறு அருவி, மேல் கோதையார் அணை ஆகியவை மாஞ்சோலை பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடங்கள் ஆகும்.

கொழுக்கு மலை

கொழுக்கு மலை

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் கேரள எல்லையில் அமைந்துள்ள கொழுக்கு மலை ஒரு அழகிய மலைவாசஸ்தலமாகும். கடல் மட்டத்திலிருந்து 7,000 அடி உயரத்தில், உலகின் மிக உயரமான தேயிலைத் தோட்டங்களைக் கொண்டுள்ள கொழுக்கு மலை பயணிகளால் அதிகம் தீண்டப்படாத அழகிய இடமாகும். எங்கு பார்த்தாலும் பசுமை, குளிர்ந்த வானிலை, போதை தரும் இயற்கை அழகு ஆகியவை உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.

தமிழ் நாட்டில் எவ்வளவு அழகான தேனிலவு ஸ்தலங்கள் இருக்கின்றன என்று பாருங்களேன்! இனி தேனிலவுக்காக வெளி ஊர்களுக்கு திட்டமிடுவதற்கு முன் சற்றே யோசித்து திட்டமிடுங்கள்!

Read more about: ooty kodaikanal tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X