திரிபுரா சுற்றுலா – இயற்கையின் உன்னத ஓவியம்!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

இந்தியாவில் கலாச்சாரப்பாரம்பரியம் நிறைந்த மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. இந்தியாவின் பன்முக கலாச்சார அடையாளத்தை நிரூபிக்கும் ஒரு அழகு மாநிலம் என்ற பெருமையை இது கொண்டிருக்கிறது. இந்திய மண்ணிற்குள் கலவையான கலாச்சார அம்சங்கள் வேரூன்றியிருக்கும் அற்புதமான உண்மையை இந்த திரிபுரா மாநிலம் பிரதிபலிக்கிறது.

பல்வேறு தனித்தன்மையான அம்சங்களை பெற்றிருப்பதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி விஜயம் செய்யும் சுற்றுலாப்பிரதேசமாகவும் இம்மாநிலம் பிரசித்தமடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இதன் புவியியல் இருப்பிடமும் வித்தியாசமான ஒன்றாக வாய்க்கப்பெற்றிருக்கிறது.

வடகிழக்கு இந்தியப்பகுதிக்கும் பங்களாதேஷிற்கும் இடையே எல்லைப்பகுதியில் இம்மாநிலம் அமைந்திருக்கிறது. இம்மாநிலத்தில் 19 வகையான இந்திய இன மக்கள் வசிக்கின்றனர்.

இவர்களில் வங்காள இனத்தாரும் அடங்குவர். செழிப்பான வரலாற்றுப்பின்னணி மற்றும் இயற்கை வளம் போன்றவற்றை திரிபுரா மாநிலம் கொண்டுள்ளது.

திரிபுராவின் தோற்றம்

பல வரலாற்று அறிஞர்களும் ஆய்வாளர்களும் திரிபுராவின் பெயர்க்காரணம் குறித்த பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். ராஜ்மலா எனும் அவைக்குறிப்பு நூலில் திரிபுர் எனும் மன்னரால் இப்பகுதி ஆளப்பட்டதால் திரிபுரா என்ற பெயரை பெற்றதாக சொல்லப்பட்டிருக்கிறது.

இருப்பினும் ‘திரிபுரா’ எனும் சொல் சம்ஸ்கிருத மொழியில் ‘திரிபுரம்  (மூன்று நகரங்களை கொண்டது) எனும் பொருளை தெளிவாக உணர்த்துவதையும் மறுக்க முடியாது.

திரிபுர் எனும் அசுர மன்னனை கொன்றழித்த ‘திரிபுர சுந்தரி அம்மன்’ வீற்றிருக்கும் பூமி என்ற ஒரு புராணிக விளக்கமும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள திரிபுரா மாநிலப்பகுதியானது ஆங்கிலேயர்களுக்கு முன்னால் திரிபுரி ராஜவம்சத்தினரால் ஆளப்பட்டிருக்கிறது.

புவியியல் அமைப்பும் பருவநிலையும்

வட கிழக்கு இந்தியாவில் அடுத்தடுத்து அமைந்திருக்கும் ஏழு வட கிழக்கு மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. இம்மாநிலங்கள் ‘ஏழு சகோதரிகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன.

பெரும்பாலும் மலைகள், பள்ளத்தாக்குப்பகுதிகள், சமவெளிகள் ஆகியவற்றை கொண்டுள்ள திரிபுரா மாநிலத்தில் குறுகிய பள்ளத்தாக்குகளால் பிரிக்கப்பட்டுள்ள ஐந்து மலைத்தொடர்கள் வீற்றிருக்கின்றன.

கிழக்கு விளிம்பில் ஜாம்புவி மலைகள் அதற்கடுத்து மேற்கு நோக்கி உனோகோதி – ஷாகந்த்லாங், லாங்தோராய், அதாராமுரா  - கலாஜாரி மற்றும் பராமுரா-தேவ்தாமுரா ஆகிய மலைத்தொடர்கள் இம்மாநிலத்தில் அமைந்துள்ளன.

பருவநிலை

கடல் மட்டத்திலிருந்து உயரமான பகுதியில் அமைந்திருப்பதால் மலைப்பாங்கான பகுதிகளுக்குரிய பருவநிலையை இது கொண்டுள்ளது. வெப்பப்புல்வெளிப்பிரதேச (சவன்னா) பருவநிலை அமைப்பில் இடம்பெற்றுள்ள திரிபுரா மாநிலத்தில் பின்வரும் நான்கு முக்கிய பருவ காலங்கள் நிலவுகின்றன.

கோடைக்காலம்: மார்ச் முதல் ஏப்ரல் வரை

முன்மழைக்காலம்: மே முதல் செப்டம்பர் வரை

மழைக்காலம்: செப்டம்பர் முதல் நவம்பர் வரை

குளிர்காலம்: டிசம்பர் முதல் பிப்ரவரி வரை

குளிர்காலத்தில் குறைந்த பட்சமாக 10 டிகிரியும், கோடைக்காலத்தில் அதிக பட்சமாக 35 டிகிரியும் இங்கு வெப்பநிலை நிலவக்கூடும்.

திரிபுராவின் கலாச்சார செழுமை!

பல்வேறு இனம் மற்றும் மொழிகளை கொண்ட மக்கள் வாழும் மாநிலம் என்பதால் வருடந்தோறும் பயணிகள் பார்த்து ரசிக்கும்படியான பல கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் திரிபுராவில் நடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு இனத்தாரும் அவர்களுக்குரிய பிரத்யேக பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றை பாரம்பரிய அம்சங்களுடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அந்தந்த பருவங்களுக்கேற்ப இங்கு திருவிழா கொண்டாட்டங்களை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.  அக்டோபர் மாதத்தில் துர்க்காபூஜா, அதனை அடுத்து தீபாவளி, ஜூலை மாதத்தில் கராச்சி பூஜா போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இவை தவிர கரியா பூஜா, கேர் பூஜா, அஷோக் அஷ்டமி திருவிழா, புத்த பூர்ணிமா, பௌஸ் – சங்கராந்தி மற்றும் வாஹ் விளக்கு திருவிழா போன்றவையும் இதர முக்கியமான பண்டிகைத்திருநாட்களாகும்.

சடங்கு முறைகளை அதிகமாக கொண்ட திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் மட்டுமல்லாமல், இசை, நடனம் மற்றும் கைவினைப்பொருள் தயாரிப்பு போன்ற அம்சங்களும் திரிபுராவின் அடையாளங்களாக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

வெவ்வேறு இனப்பிரிவுகளுக்குரிய பாரம்பரிய நடனம் மற்றும் இசை வடிவங்கள் இங்கு பின்பற்றப்பட்டு வருகின்றன. கோரியா பூஜா திருநாளின்போது கோரியா நடனம் எனும் நடனநிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம். இது திரிபுரி மற்றும் ஜமாத்தியா இன மக்களால் நிகழ்த்தப்படுகிறது.

ஹோஜாகிரி எனும் நடனவடிவமும் திரிபுராவில் ரசிக்கவேண்டிய ஒரு கலையம்சமாகும். ரேயாங் இனத்தை சேர்ந்த இளம்பெண்கள் மண்குடங்களின் மேல் நின்றபடி நளினமான அசைவுகளுடன் இந்த நடனத்தை நிகழ்த்துகின்றனர்.

இதுதவிர, லெபாங் நடனம், மமிதா நடனம், மொசாக் சுல்மானி நடன, பிழு நடனம் மற்றும் ஹிக்-ஹாக் நடனம் போன்றவையும் திரிபுராவின் முக்கியமான நடனக்கலை வடிவங்களாக புகழ் பெற்றுள்ளன.

திரிபுரா கலைஞர்கள் அவர்களுக்கே உரிய பிரத்யேக இசைக்கருவிகளை தங்களது கலை நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  இவற்றில் சரிந்தா, சோங்பிரேங் மற்றும் சுமுயீ போன்ற வாத்தியக்கருவிகள் குறிப்பிடத்தக்கவை.

பிரம்பு மற்றும் மூங்கில் பொருட்களை பயன்படுத்தி பல்வகையான வீட்டு உபயோகப்பொருட்கள், அழகு கலைப்பொருட்கள்  போன்றவற்றை தயாரிப்பதிலும் திரிபுரா கைவினைக்கலைஞர்கள் தனித்தன்மையான பாரம்பரிய  திறமையை வாய்க்கப்பெற்றுள்ளனர்.

திரிபுராவின் முக்கிய சுற்றுலா அம்சங்கள்!

சுற்றுப்புற மாசுகள் ஏதுமற்ற காற்று, இனிமையான பருவநிலை இவற்றின் பின்னணியில் பார்த்து ரசிக்க வேண்டிய ஏராளமான அழகு அம்சங்கள் திரிபுரா மாநிலத்தில் நிறைந்துள்ளன.

ஆன்மிக வழிபாட்டுத்தலங்கள், இயற்கை எழிற்காட்சி ஸ்தலங்கள், பாரம்பரிய மாளிகைகள் போன்றவை இவற்றுள் அடக்கம். இவை தவிர பசுமையான வனப்பகுதிகள் மற்றும் ஏரிகள் ஆறுகள் போன்ற நீர்வளம் போன்றவற்றையும் இம்மாநிலம் பெற்றிருக்கிறது.

திரிபுராவில் கால் வைத்தவுடனேயே பயணிகளை ரம்மியமான காட்சிகள் வரவேற்க துவங்கிவிடுகின்றன என்பது ஒரு குறிப்பிடத்தக்க உண்மையாகும்.

திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் பல சுவாரசியமான சுற்றுலா அம்சங்கள் நிரம்பியுள்ளன. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ள ஜகந்நாத் கோயில், உமாமஹேஷ்வர் கோயில், பேணுபென் விஹார் எனும் புத்த கோயில் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க ஆன்மீக வழிபாட்டுத்தலங்களாகும்.

செபாஹிஜலா எனும் வனவிலங்கு பூங்காவில் பல அரிய விலங்கினங்களையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் ரோஸ் வேலி அமியூஸ்மெண்ட் பார்க் எனும் உல்லாசப்பொழுதுபோக்கு பூங்காவும் இங்குள்ளது.

அகர்தலா நகரம் மட்டுமல்லாமல்  இதர முக்கியமான சுற்றுலாத்தலங்களையும் திரிபுரா மாநிலம் கொண்டுள்ளது. தலாய், கைலாஷஹார், உனாகோட்டி மற்றும் உதய்பூர் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

உதய்பூரில் திரிபுர சுந்தரி கோயில் மற்றும் புவனேஷ்வரி கோயில் போன்ற முக்கியமான ஆலயங்களை தரிசிக்கலாம். கைலாஷஹார் ஸ்தலத்தில் சௌடூ தேவதார் மந்திர் எனும் முக்கியமான கோயில் உள்ளது. இங்கு அழகிய தேயிலை தோட்டங்களையும் பார்த்து ரசிக்கலாம்.

இவை தவிர உஜ்ஜயந்தா அரண்மனை, திரிபுரா மாநில அருங்காட்சியகம், சுகந்தா அகாடமி, லாங் தராய் மந்திர், மணிப்புரி ராஸ் லீலா, உனாகோட்டி, லட்சுமி நாராயண் கோயில், புராணோ ராஜ்பரி மற்றும் நஸ்ருல் கிரந்தஹார், சிறுத்தை தேசிய பூங்கா, ராஜ்பரி தேசிய பூங்கா போன்ற அம்சங்கள் திரிபுராவில் சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசிப்பதற்காக காத்திருக்கின்றன.

தென்னிந்தியா, வட இந்தியா என்று பார்த்து பழகிப்போன கலாச்சாரம் மற்றும் புவியமைப்புகளால் அலுத்துப்போயிருப்பின் ஒரு மாறுதலுக்காக இந்த வடகிழக்கு நாகரிக மாநிலத்திற்கு ஒரு விஜயம் மேற்கொள்வது நிச்சயம் மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.திரிபுரா சென்று ஊர் திரும்பும்போது பிரிய மனமில்லாமல்தான் திரும்பவேண்டியிருக்கும்.  

Please Wait while comments are loading...