உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

வயநாடு - கன்னிமை மாறா மலைப்பூமியின் இயற்கைப்பூரிப்பு!

கேரளாவின் 12 மாவட்டங்களில் ஒன்றான இந்த வயநாடு மாவட்டம் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கிடையே அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க எழில் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இயற்கை அமைப்பு காரணமாக இது ஒரு பிரசித்தமான சுற்றுலாப்பிரதேசமாக அறியப்படுகிறது.

வயநாடு புகைப்படங்கள் - பனசுரா சாகர் அணை - பயணிகளுக்காக காத்திருக்கும் படகுகள் 
Image source: www.wikipedia.org
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பிரதேசமானது ‘இயற்கை’ என்பது இதுதான் என்று பயணிகளுக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் கன்னிமை மாறாத எழில் காட்சிகளுடன் அமைதியாக வீற்றிருக்கிறது.

எங்கு திரும்பி நோக்கினாலும் கண்களுக்கு அலுக்காத காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் இங்கு தரிசிக்கலாம். வெகு தொலைவிலிருந்து கூட சுற்றுலாப்பயணிகள் ஒவ்வொரு வருடமும் இந்த வயநாடு பகுதிக்கு விஜயம் செய்கின்றனர்.

உங்கள் அன்றாட வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினைகளில் நீங்கள் மூழ்கியிருந்தாலும் சரி, இந்த பகுதிக்கு விஜயம் செய்தால் அவை யாவும் மறைந்து சாந்தமும், நிறைவும் மனதில் நிரம்பியிருப்பதை ஊர் திரும்பும்போது உங்களால் உணரமுடியும்.

வயநாடு பகுதியின் வரலாற்றுப்பின்னணி

1980ம் ஆண்டில் நவம்பர் 1ம் தேதி கேரள மாநிலத்தின்12வது மாவட்டமாக இந்திய வரைபடத்தில் வயநாடு இடம் பெற்றது. ஆதிகாலத்தில் மாயஷேத்ரா என்று இப்பகுதி அழைக்கப்பட்டுள்ளது. அதுவே பின்னாளில் ‘மயநாடு’ என்று மாறி இறுதியில் வயநாடு என்று பேச்சு வழக்காக நிலைபெற்றுவிட்டது.

இப்பகுதி முழுவதும் வயல்கள் நிரம்பி காணப்படுவதால் வயநாடு என்று அழைக்கப்படுவதாக மற்றொரு உள்ளூர் கருத்தும் நிலவுகிறது.

கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இந்த வயநாடு பகுதியானது மழைக்காலத்தின்போது விஜயம் செய்யும் வெளியூர் பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்திவிடுகிறது.

பேசவும் தோன்றாது மலைப்புடன் சுற்றிப்பார்த்து பரவசமடையும் சுற்றுலாப்பயணிகளில் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும். மரங்களிலும் தாவரங்களிலும் ஒட்டியிருந்த மாசு மழையால் கழுவப்பட்டு, வயநாடு பகுதி ஒரு பிரம்மாண்ட மரகதக்கல் போன்று பிரகாசத்துடன் மழைக்கால முடிவில் ஒளிர்கிறது.

இக்காலத்தில் இங்கு விஜயம் செய்யும்போது தன்னிலை மறந்து உங்கள் சொந்த கற்பனைகளில் மூழ்கி இயற்கையோடு இயற்கையாக்க ஒன்றிப்போவீர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயநாடு பகுதியில் மனித நாகரிகம் தழைத்திருந்தது என்பதை தொல்லியல் சான்றுகள் நிரூபிக்கின்றன. மனிதச்சமூகமும் காட்டுயிர் அம்சங்களும் இங்கு அமைதியான ஒற்றுமையுடன் செழித்து விளங்கியிருக்கின்றன.

கிறிஸ்து பிறப்பதற்கு 10 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த காட்டுப்பகுதி உயிர்வளத்தால் நிரம்பி வழிந்திருக்கிறது. ஆதி நாகரிகத்தில் உருவாக்கப்பட்ட பலவிதமான பாறைக்கிறுக்கல் ஓவியங்கள் மற்றும் கற்குடைவுகள் இந்த உண்மைக்கான ஆதாரங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

எனவே வயநாடு பிரதேசம் பல நூற்றாண்டு கால பாரம்பரிய கலாச்சாரத்தின் வேர்களைக்கொண்டுள்ளது என்பது இப்பகுதியின்ன் குறிப்பிடத்தக்க ஒரு பரிமாணமாகும்.

18ம் நூற்றாண்டில் ஹைதர் அலி இப்பகுதியை ஊடுறுவியதற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் பின் கோட்டயம் ராஜவம்சத்தாரின் ஆளுகைக்குள் இப்பகுதி இருந்துள்ளது.

அவர்களை அடுத்து ஆங்கிலேயர்கள் 100 வருடங்களுக்கு இப்பகுதியை ஆண்டுள்ளனர். அவர்கள் காலத்தில் தான் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமல்லாமல் சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்புகளையும் ஆங்கிலேய அதிகாரிகள் வயநாடு பிரதேசத்தில் உருவாக்கியுள்ளனர். இது போன்ற செயல்பாடுகள் வளர்ச்சியை மட்டுமல்லாமல் குடியேறிகளையும் இப்பகுதியில் அதிக அளவில் குவித்துள்ளது.

புதிய வாய்ப்புகளை நாடி வந்த அனைவருக்கும் அவர்கள் கண்ட கனவை வஞ்சம் இல்லாமல் வாரி வழங்கியிருக்கிறது இந்த வயநாட் பூமி.

வயநாடு ஸ்தலத்தின் இயற்கை பொக்கிஷங்கள்

இந்தியாவின் தொல் பழங்குடி இனமக்களை வயநாடு பகுதியின் பசுமையான மலைகள் இன்றும் பாதுகாத்து வருகின்றன. இவர்கள் பெரும்பான்மை நாகரிக சமூகத்தோடு கலக்க விரும்பவில்லை.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையே அவர்களுக்கு ஏற்றதாகவும் பிடித்தமானதாகவும் உள்ளது. அது ஏன் என்பதை வயநாடு பகுதிக்கு விஜயம் செய்யும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள். ஏனெனில் இப்பகுதியை விட்டுப்பிரிய உங்களுக்கே மனம் வராது.

இங்குள்ள மலைக்குகைகளில் கற்கால சுவர் ஓவியங்கள் (கீறல் ஓவியங்கள்) காணப்படுவதால் தொல்லியல் ஆர்வலர்களுக்கும் பிடித்த ஸ்தலமாக இது திகழ்கிறது. கற்காலத் துவக்கத்திலேயே இப்பகுதியில் ஆதி மனித நாகரிகம் செழித்திருந்ததற்கு இந்த பாறைச்சித்திரங்கள் சான்றுகளாக விளங்குகின்றன.

தற்காலத்தில் வயநாடு பிரதேசமானது அழகிய இயற்கை காட்சிகளுடனும், வளைந்து நெளிந்து காணப்படும் பச்சை பஞ்சுப்பொதி போன்ற ரம்மியமான மலைகளுடனும், செழுமையான பாரம்பரியத்துடனும் காட்சியளிக்கும் நவநாகரிக இயற்கைப்பூமி எனும் புகழுடன் விளங்குகிறது.

காலப்போக்கில் நவநாகரீக நவீன மாற்றங்கள் ஒவ்வொன்றையும் வரவேற்று தன்னுள் இந்த இயற்கைப்பிரதேசம் பொதிந்துகொண்டு விட்டது. இங்குள்ள பல சொகுசு ரிசார்ட் விடுதிகள் பாரம்பரிய ஆயுர்வேத மசாஜ் சிகிச்சைகள் மற்றும் ஆவிக்குளியல் அம்சங்கள் போன்ற வசதிகளுடன் விருந்தினர்களை உபசரிக்கின்றன.

உடலையும் மனதையும் சுத்திகரிப்பு செய்யும் இந்த விடுமுறை வாசஸ்தலங்களுக்கு வருகை தரும் பயணிகள் புத்துணர்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவித்த பரவசத்தோடும் ஊர் திரும்புகின்றனர்.

இயற்கையோடு இயைந்த பாரம்பரிய கலாச்சாரத்தையும் நவீன வசதிகளையும் சேர்த்து வழங்கும் இந்த வயநாடு மறக்க முடியாத சுற்றுலா அனுபவத்தை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Please Wait while comments are loading...