டெல்லி ரிட்ஜ், டெல்லி

டெல்லி ரிட்ஜ் அல்லது பொதுவாக ரிட்ஜ் என்று அழைக்கப்படும் இவை ஒரு மலை போன்ற குன்றுப்பகுதி என்று சொல்லலாம். இவை ஆரவல்லி மலைத்தொடரின் நீட்சியாக டெல்லி பகுதியில் வீற்றிருக்கின்றன.

இந்த ரிட்ஜ் அமைப்பில் காணப்படும் பசுமை வனப்பகுதியானது டெல்லியின் நுரையூரல் போன்று இயங்குவதுடன் ராஜஸ்தான் பகுதியிலிருந்து வீசும் அனல் காற்றுகள் டெல்லியை தாக்காதவாறு பாதுகாப்பு அரணாகவும் அமைந்துள்ளது.

மேலும் இந்த ரிட்ஜ் வனப்பகுதி டெல்லி நகரத்தை பறவைகள் அதிகம் வசிக்கும் நகரமாகவும் அறியச்செய்துள்ளது. கென்யாவிலுள்ள நைரோபிக்கு அடுத்தபடியாக டெல்லி நகரம் பறவைகள் அதிகம் வசிக்கும் நகரமாக பிரசித்தி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரிட்ஜ் பகுதியில் குவார்ட்சைட் பாறைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், நிர்வாக வசதிக்காக இந்த ரிட்ஜ் அமைப்பு நான்கு மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

பழைய டெல்லி அல்லது வடக்கு ரிட்ஜ், புது டெல்லி அல்லது மத்திய ரிட்ஜ், மெஹ்ராலி அல்லது தென் மத்திய ரிட்ஜ் மற்றும் துக்ளக்காபாத் அல்லது தெற்கு ரிட்ஜ் என்பவையே அந்த நான்கு மண்டலங்கள்.

தென் மத்திய ரிட்ஜ் பகுதியில் ஆரவல்லி பல்லுயிர்ச்சூழல் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வடக்கு ரிட்ஜ் பகுதியில் ஏராளாமான சுவாரசியம் அம்சங்களும் நிரம்பியுள்ளன. இந்த அம்சங்களைப்பற்றி விரிவாக பார்க்கலாம்:

ஆரவல்லி பயோடைவர்சிட்டி : 692 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஆரவல்லி பயோடைவர்சிட்டி பார்க் எனப்படும் பல்லுயிர்ச்சூழல் பூங்காவானது மெஹ்ராலி – மஹிபால்பூர் ரோடு, ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி, பாலம் ரோடு, என்.எச் – 8  தேசிய நெடுஞ்சாலை மற்றும் வசந்த் விஹார் ஆகியவற்றுக்கு நடுவே வீற்றுள்ளது.

டெல்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் டெல்லி யுனிவர்சிட்டி  மூலம் பராமரிக்கப்படும் இந்த இயற்கைப்பூங்காவை பாதுகாப்பதற்கும், வளர்ச்சிக்கும் கணிசமான நிதி செலவிடப்பட்டுள்ளது.

அசோகா பில்லர்: அசோகா பில்லர் எனப்படும் நினைவுத்தூண்கள் வரலாற்றுகாலத்தில் வட இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் அசோகரது பொன்மொழிகள் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளன. 

ஒரு மஹோன்னத ராஜ்ஜியத்தின் இருப்பையும், தார்மீக கீர்த்தியுடன் விளங்கிய ஒரு பேரரசரின் அறப்பார்வையையும் எடுத்துரைக்கும் காலச்சான்றுகளாக இந்த அசோகத் தூண்கள் பல நூற்றாண்டுகளை கடந்து நீடித்து நிற்கின்றன.

அப்படி 19 அசோகத்தூண்கள் வட இந்திய பிரதேசம் முழுமையும் விரவி காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு தூண்கள் இந்த டெல்லி வடக்கு ரிட்ஜ் பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இவை மீரட் மற்றும் ஹரியானாவிலுள்ள தொப்ரா பகுதியில் இருந்ததாகவும் பெரோஸ் ஷா துக்ளக் இவற்றை 1356ம் ஆண்டு இந்த ரிட்ஜ் பகுதிக்கு கொண்டுவந்து ஸ்தாபித்ததாகவும் சொல்லப்படுகிறது.

கொடிக்கம்ப கோபுரம் (ஃப்ளாக்-ஸ்டாஃப் டவர்): இந்த கொடிக்கம்ப கோபுர அமைப்பு டெல்லி யுனிவர்சிட்டி வளாகத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் கால இந்திய ராணுவத்தால் 1828ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கோபுர அமைப்பு ஒரு சமிக்ஞை மையமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

1857ம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகம் மற்றும் டெல்லி முற்றுகையின்போது இந்த கொடிக்கம்ப கோபுரத்தில் பல ஆங்கிலேயக் குடும்பங்கள் தஞ்சமடைந்திருந்ததாக சொல்லப்படுகிறது.

பிர் கரீப்: இது அந்நாளில் ஒரு வானோக்கு ஆய்வு மையமாக செயல்பட்டிருக்கிறது. 14ம் நூற்றாண்டில் ஒரு வேட்டை மாளிகையாகவும் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெரோஸ் ஷா துக்ளக் மன்னரால் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை டெல்லி வடக்கு ரிட்ஜ் பகுதியில் பார்க்கலாம்.

Please Wait while comments are loading...