திகம்பர ஜைன கோயில், டெல்லி

டெல்லியிலுள்ள மிகப்பழமையான ஜெயின் கோயில்களில் ஒன்றான இந்த திகம்பர ஜைன கோயில் செங்கோட்டைக்கு எதிரே அமைந்துள்ளது. ஸ்ரீ திகம்பர ஜெயின் லால் மந்திர் என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த கோயில் டெல்லியில் மிகப்பிரசித்தமான சாந்தினி சௌக் பகுதியில் வீற்றுள்ளது.

சிவப்பு மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ள இந்த புகழ் பெற்ற திகம்பர் ஜெயின் கோயிலை சாந்தினி சௌக் மற்றும் நேதாஜி சுபாஷ் மார்க் ஆகிய இரண்டு பகுதிகளும் சந்திக்கும் இடத்தில் காணலாம்.

1656ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கும் இந்த ஜெயின் கோயில் டெல்லியிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றாக அறியப்படுகிறது. சிவப்பு கோயில் அல்லது லால் கோயில் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இது ஸ்தாபிக்கப்பட்ட நாளிலிருந்தே பல மாற்றங்களையும் புதுப்பிப்புகளையும் சந்தித்து வந்திருக்கிறது.

ஜைன மார்க்கத்தின் 24 வது தீர்த்தங்கரரான மஹாவீரர் இந்த கோயிலில் குடி கொண்டுள்ளார். ஆதிநாதர் என்றழைக்கப்படும் முதல் தீர்த்தங்கரர் மற்றும் மஹாவீரருக்கு முந்தைய தீர்த்தங்கரரான பர்ஷவநாதர் ஆகியோரது சிலைகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.

8 நூற்றாண்டுகள் இடைவெளிக்கு பின்னர் 1931ம் ஆண்டில் திகம்பர் ஜெயின் குரு இந்த கோயிலுக்கு விஜயம் செய்துள்ளார். இந்த நிகழ்வை குறிப்பிடும்படியாக ஒரு நினைவுச்சின்னம் ஒன்றும் இக்கோயில் வளாகத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த ஜெயின் கோயிலில் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் சிற்பச்சித்தரிப்புகள் காணப்படுகின்றன.

இருப்பினும் இவை யாவும் காலப்போக்கில் பற்பல திருத்தங்களையும் புனரமைப்புகளையும் கண்டு வந்துள்ளது.  19ம் நூற்றாண்டில்தான் இது ஒரு பெரிய கோயில் வளாகமாக விரிவுபடுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...