கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில், காவேரியின் கரையோரங்களில் அமைந்திருக்கும் துபாரேவின் அடர்ந்த காடுகள் யானைகள் முகாமுக்காக மிகவும் பிரபலம். இங்கு நீங்கள் ராட்சஸ உருவமும், சாந்த ஸ்வரூபமுமாய் காட்சியளிக்கும் எண்ணற்ற யானைகளை நேருக்கு நேராக சந்திக்கலாம்.
இது பாரம்பரியமாக யானைகளுக்கு பயிற்சி கொடுக்கும் தலமாக விளங்கி வருகிறது. இத்த இடத்தில் பயிற்றுவிக்கப்பட்ட யானைகளே, மைசூர் மகாராஜாக்களின் ஆட்சிக் காலத்தில் தசரா பண்டிகைகளின் போது அணிவகுப்புகளில் பயன்படுத்தப்பட்டன.
துபாரேவின் காடுகளில் யானைகள் மட்டுமின்றி புலி, சிறுத்தை, சாம்பார் மான்கள் போன்ற விலங்குகளும் உள்ளன. இங்கு வனத்துறையினரால் பயிற்றுவிக்கப்பட்ட நிறைய யானைகள் மரங்களை தூக்கிச் செல்லவும், இதர பல வேலைகளை செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த யானைகளை கொண்டு நடத்தப்படும் முகாம்கள் பயணிகளுக்கு நல்ல பொழுதுபோக்காக இருப்பதோடு, அவர்களுக்கு இந்த விலங்குகளை பற்றி தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இதன் மூலம் யானைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எவ்வளவு அவசியம் என்பதை முகாம்களில் கலந்துகொள்ளும் மக்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். அதோடு யானைகளை எவ்வாறு பயிற்றுவிக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்ப்பதுடன், பயணிகளே தங்கள் கைகளாலே யானைகளுக்கு உணவும் கொடுக்கலாம். மேலும் வனத்துறையினர் ஏற்பாடு செய்யும் யானை சவாரியிலும், பரிசல் பயணத்திலும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பொழுதை களிக்கலாம்.
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் விடுமுறை நாட்களை இன்பமயமாக கழிக்க துபாரேவும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களும் மிகச் சிறந்த இடங்களாகும். அதோடு கூர்க், மைசூர், பெங்களூர் போன்ற நகரங்களுக்கு துபாரே வெகு அருகில் உள்ளதால் பயணிகள் சுலபமாக துபாரேவை அடைந்து விடலாம்.



Click it and Unblock the Notifications