பந்திபூர் – காட்டுயிர் அம்சங்களுடன் ஒரு சந்திப்பு

பந்திபூர்  வனப்பாதுகாப்பு சரகம் இந்தியாவிலேயே பிரசித்தமான புலிகள் சரணாலயமாக அறியப்படுகிறது. இங்குள்ள புலிகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏறக்குறைய 900 ச.கி.மீ பரப்பளவுக்கு பரவி காணப்படும் இந்த ‘புலிகள் பாதுகாப்புத்திட்ட வனப்பகுதி’ கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மைசூரிலிருந்து 80 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 220 கி.மீ தூரத்திலும் உள்ளது. இந்த இரு நகரங்களிலிருந்து வாகனங்கள் மூலம் பந்திபூருக்கு  பயணம் மேற்கொள்ளலாம்.

வனம், காட்டுயிர் மற்றும் இயற்கை அம்சங்கள்

இந்த பந்திபூர் வனப்பகுதி கர்நாடகாவின் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்று கேரளா மாநிலங்களிலும் பரவி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் முதுமலை என்றும், கேரளாவில் வயநாட் என்றும் இந்த வனப்பகுதி அழைக்கப்படுகிறது.

பண்டிபூர், முதுமலை, வயநாட் ஆகிய இம்மூன்றும் சேர்ந்த வனப்பகுதி தென்னிந்தியாவிலேயே ஒரு மிகப்பெரிய காட்டுயிர் வனப்பிரதேசமாக அமைந்துள்ளது. இதில் உலகப்புகழ் பெற்ற ‘அமைதிப் பள்ளத்தாக்கு’ அமைந்துள்ள நீலகிரி உயிரியல் பாதுகாப்புப்பகுதியும் அடங்கும்.

கபினி ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த பண்டிபூர் வனப்பகுதி பல காட்டுவிலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. சிறுத்தை, காட்டெருமை, பல வகை மான்கள், காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள், குள்ளநரி போன்றவை இங்கு வாழ்கின்றன.

கபினி ஆற்றின் பல துணை ஒடைகளும் அவற்றை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களும் இந்த காட்டில் வசிக்கும் விலங்குகளுக்கான உணவுக்கேந்திரமாக விளங்குகின்றன.

சில அரிய வகை பறவைகளான கரிச்சான் குருவிகள், காட்டுக்கோழிகள், கௌதாரி, மயில், மயிற்கோழி மற்றும் புறாக்களுடன் பருந்து, வல்லூறு, போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.

தாவர வகைகளில் சந்தன மரம் (இந்த காட்டின் விசேஷ அம்சம்), கருங்காலி மரம் மற்றும் தேக்கு மரங்கள் இந்த வனப்பகுதியில் மிகுதியாக காணப்படுகின்றன.

பெரிய மரங்களும் புதர்க்காடுகளும் நிறைந்து காணப்படும் இந்த வனப்பகுதி இங்குள்ள விலங்குகளுக்கு இயற்கையான வாழ்விடமாய் அமைந்துள்ளது. ஊர்வன விலங்குகளில் கரு நாகம் (ராஜ நாகம்), விரியன், சாரை, கட்டு விரியன் மற்றும் பலவிதமான பல்லி வகைகள், பச்சோந்திகள் பண்டிபூர் வனப்பகுதியில்  பெருமளவில் வசிக்கின்றன.

பந்திபூரின் காட்டுச்சுற்றுலா வசதிகள்

இங்குள்ள வனச்சரக அலுவலக வளாகப்பகுதியிலிருந்து காட்டுச்சுற்றுலா பேருந்து மூலமாக அல்லது சஃபாரி ஜீப் மூலமாக பயணிகள் காட்டுச்சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.

வனவிலங்குகள் நீர்நிலைகளுக்கு வருகை தரும் விடியல் நேரம் மற்றும் அந்தி நேரம் இவ்விரண்டும் காட்டுச்சுற்றுலாவுக்கு உகந்ததாக உள்ளன. இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

தங்குமிடங்கள், ரிசார்ட்டுகள் (விடுமுறை விடுதிகள்), ஹோட்டல்கள் போன்றவை இப்பகுதியில் நிறைந்துள்ளதால் இயற்கையை ரசிக்க வரும் பயணிகளுக்கு வசதிக்குறைவு ஏதுமில்லை.

மேலும் பண்டிபூருக்கு அருகாமையிலுள்ள கோபாலஸ்வாமி பேட்டா கோயில் மற்றும் கபினி அணைக்கும் பயணிகள் விஜயம் செய்து மகிழலாம்.

காட்டுப்பகுதியின் நிசப்தம் மற்றும் இயற்கை அழகு இவற்றோடு நீங்கள் ஒரு விடுமுறைக்காலத்தை கழிக்க விரும்பினால் அதற்கான சரியான தேர்வு  இந்த பண்டிபூர் வனப்பகுதி என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் இந்த புகழ் பெற்ற தென்னிந்திய வனப்பகுதிக்கு ஒரு முறையாவது விஜயம் செய்வது நன்று.

Please Wait while comments are loading...