ஷில்ப்கிராம், கஜுராஹோ

புராதன வரலாற்று நகரமான கஜுராஹோவில் உள்ள ஒரு முக்கியமான அம்சம் இந்த ஷில்ப்கிராம் ஆகும். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் உன்னதங்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த மையத்தை இந்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

1998ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த ஷில்ப்கிராம் மையம் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. உலகெங்கிலிருந்தும் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்திற்கு விஜயம் செய்யும் கலாரசிகர்களுக்கும் இந்திய கலைப்பாரம்பரியத்தை காட்சிப்படுத்தவேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கம்.

பத்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் இரவு நேரத்தில் பல்வேறு நாட்டுப்புற மற்றும் சாஸ்திரிய நிகழ்த்துகலை அரங்கேற்றங்கள் நடத்தப்படுகின்றன.

நட்சத்திரங்கள் மின்னும்  வானக்கூரையின் கீழ் இந்த பிரம்மாண்டமான திறந்த வெளி அரங்கில் அமர்ந்து வண்ணமயமான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ரசிக்கும் அனுபவம் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மற்றுமொரு இனிய ஞாபகமாக அமையக்கூடும்.

மேலும் இந்த மையத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கிய கைவினைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற பொருட்களை சுற்றுலாப்பயணிகள் விலை கொடுத்து வாங்க வசதியாக ஒரு பிரத்யேக அங்காடியும் இந்த வளாகத்திலேயே உள்ளது. 

Please Wait while comments are loading...