சென்னை எழும்பூர் மற்றும் சென்னை கடற்கரை இடையேயான 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கவுள்ளதால் சென்னை கடற்கரை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையேயான பறக்கும் ரயில் சேவை ஆகஸ்ட் 27 முதல் ஏழு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சிரமத்திற்கு உள்ளான பயணிகளை கை கொடுத்து காப்பாற்றும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கூடுதல் பேருந்துகளை அனுப்பியுள்ளது!
எழும்பூர் மற்றும் பீச் ஸ்டேஷன் இடையே 4-ஆவது ரயில் பாதை
சென்னை எழும்பூர் மற்றும் சென்னை கடற்கரை இடையே 4 கிமீ தூரத்தில் அமையும் 4-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கவுள்ளன. சுமார் ரூ.280 கோடி மதிப்பில் அமையும் இந்த ரயில் பாதை பணிகளால் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ஏழு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலை, கல்வி மற்றும் பிற காரணங்களால் இரு இடங்களுக்கு இடையே பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் சிரமமடைந்துள்ளனர்.

கடும் இன்னலுக்கு ஆளான பயணிகள்
சென்னையில் பறக்கும் ரயில் சேவை சென்னை கடற்கரை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி, வேலை நிமித்தமாக பயணம் செய்யும் பொது மக்கள் அனைவரும் இந்த ரயில் சேவையை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால், ரயில் சேவை நிறுத்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் காலை, மாலையில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
குறைக்கப்பட்ட ரயில் சேவைகள்
நெரிசல் மிகுந்த நேரங்களில் 25 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். கடற்கரை-வேளச்சேரி இடையே 122 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 80 சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதுபோல கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டிய 59 மின்சார ரயில் சேவைகள் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

கோரிக்கை வைத்த மக்கள்
காலை, மாலையில் நெரிசல் நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. ஆனால், இப்போது, 25 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதனால், கூட்டநெரிசலில் சிக்கி, நாங்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம். எனவே, 10 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயில் இயக்க வேண்டும். இது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்று பொது மக்கள் கூறினர்.

கைகொடுத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம்
பயணிகள் கடற்கரை ரயில் நிலையத்தை அடைய கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குமாறு பெருநகர போக்குவரத்து கழகத்தை (MTC) ரயில்வே, கேட்டுக் கொண்டுள்ளத. அதன்படி சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் முதல் வள்ளலார் நகர் வரையிலான இரு மார்க்கத்திலும் 5 பேருந்துகள் மூலமாக தலா 140 பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளன.
வார நாள்களில் 10 பேருந்துகள் மூலமாக இருமார்க்கங்களில் தலா 280 பேருந்து சேவைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை சென்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, கடற்கரை ரயில் நிலையம், ஸ்டான்லி மருத்துவமனை, மின்ட் வழியாக இயக்கப்படும்.
மேலும் 30 பேருந்துகள் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வழியாகத் திருப்பி விடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.



Click it and Unblock the Notifications





