ஷிவ்புரி பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காடுகள் ஒரு காலத்தில் முகலாய அரசர்கள் வேட்டையில் ஈடுபட்ட வனப்பகுதியென்று சொல்லப்படுகிறது. தற்போது காட்டுயிர் சுற்றுலாவுக்கு பெயர் பெற்று விளங்கும் கேந்திரமாக இது பிரசித்தி பெற்றுள்ளது. கரேரா பறவைகள் சரணாலயம் மற்றும் பிரம்மாண்டமான ஜார்ஜ் கோட்டையை கொண்டிருக்கும் மாதவ் தேசிய பூங்கா ஆகியவை சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. இயற்கையோடு இயற்கையாய் மக்கள் ஒன்றி வாழும் அற்புத கலாச்சாரத்தை இங்கு பயணிகள் பார்த்து மகிழலாம்.
ஷிவ்புரி: இயற்கை அன்னையின் ஆட்சியில் ஒளிரும் ஒரு எழில்பூமி
மாதவ் தேசிய பூங்காவானது ஒரு அழகிய ஏரியைச்சுற்றிலும் அமைந்துள்ள இயற்கை வளம் நிறைந்த மலைப்பகுதிகள் மற்றும் பசுமைச்சமவெளிகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இது தவிர சாக்யா சாகர் ஏரி, பூரா கோன் நீர்வீழ்ச்சி, பவா நீர்வீழ்ச்சி மற்றும் சோன் சிரையா பறவைகள் சரணாலயம் போன்ற அம்சங்களும் ஷிவ்புரியில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
இயற்கையின் பிரம்மாண்டத்துக்கு முன் மனித இனம் என்பது ஒன்றுமே இல்லை எனும் உண்மையை இந்த ஸ்தலங்களுக்கு விஜயம் செய்யும்போது அனுபவித்து புரிந்துகொள்ளலாம்.
நகரங்களின் கான்கிரீட் காடுகளின் சந்தடியிலும் சூழலிலும் அலுப்புற்று இயற்கையின் ஸ்பரிசத்தை தேடும் மனங்களுக்கு இந்த சிவபுரி மிகவும் ஏற்ற சுற்றுலாத்தலம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஷிவ்புரி மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்
நீண்டதொரு வரலாற்று பின்னணியை கொண்டுள்ள ஷிவ்புரி பல ராஜ வம்சங்களின் கோடை வாசஸ்தல தலைநகரமாக திகழ்ந்து வந்திருக்கிறது. எனவே இங்கு பல கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் புராதன கோயில்கள் போன்ற அம்சங்கள் அமைந்துள்ளன.
நர்வார் கோட்டை, மாதவ் விலாஸ் அரண்மனை மற்றும் மஹுவா சிவன் கோயில் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. உன்னதமான வரலாற்று சின்னங்கள், இயற்கை பூங்காக்கள் மற்றும் பறவைகள் சரணாலயம் போன்றவை நிரம்பியிருப்பதால் ஷிவ்புரி பகுதியில் சுற்றுலா செயல்பாடுகள் மிக தீவிரமாக வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாப்பயண வசதிகள்
ஷிவ்புரி பகுதிக்கு அருகிலுள்ள விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மூலமாக சுலபத்தில் சென்றடையலாம். வருடத்தின் பெரும்பாலான நாட்களில் மிதமான பருவநிலையே இங்கு நிலவுகிறது என்றாலும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்றதாகும்.



Click it and Unblock the Notifications