உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்தும் ஏராளமான் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒரு நாளைக்கு விஐபி பிரேக் தரிசனம், திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் மற்றும் பல்வேறு ஆர்ஜித சேவாக்கள் என கிட்டத்தட்ட 65,000 முதல் 70,000 பக்தர்களுக்கு தரிசனம் வழங்கப்படுகிறது. தினமும் இத்தனை பேர் வந்து செல்லும் இந்த இடத்தில் ஒரு பக்தர் மட்டும் சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ளார். நடந்து வந்து திருப்பதி எழுமலையானை 449 முறை தரிசனம் செய்ததால் அவருக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது!
அதிக முறை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நபர்
திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தரான, ஸ்ரீகாகுளம் நகரின் குடி வீதியில் வசிக்கும் மஹந்தி ஸ்ரீனிவாச ராவ், திருமலை மலைக் கோவிலுக்கு அதிகப்பட்சமாக நடந்து சென்றதற்காக ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இருந்து கௌரவத்தைப் பெற்றார். அவர் அதிகபட்சமாக திருமலை மலைக்கு படிக்கட்டுகள் வழியாக நடந்தே சென்றதற்காக ஆசிய புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். ஏழுமலையானின் மேல் இருக்கும் அன்பு காரணமாக தாம் இங்கே தொடர்ந்து வந்துக் கொண்டே இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதுவரை 449 முறை ஏழுமலையானை பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளார்.

ஒரு வருடம் கூட தவறவிட்டது இல்லையாம்
அவர் 1996 ஆம் ஆண்டு அலிபிரி வழியிலிருந்து படிகள் வழியாக (சோபன மார்க்கம்) திருமலை மலைக்கு தனது புனித பயணத்தை தொடங்கினார். 1996 முதல் 2008 வரை, அவர் வருடத்திற்கு ஒரு முறை திருமலைக்கு பாதயாத்திரையாக வந்து சென்றிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு அவர் மாதம் ஒருமுறை அதாவது 12 முறை மலையேறி கோயிலை தரிசனம் செய்தார். 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், அவர் ஒவ்வொரு ஆண்டும் 50 முறை கால் நடையாக புனிதப் பயணம் மேற்கொண்டார், மேலும் மூன்று ஆண்டுகளில் மொத்தம் 150 பயணங்கள். படிக்கவே வியப்பாக இருக்கிறது அல்லவா மக்களே!
449 முறை நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்த ஸ்ரீனிவாச ராவ்
ஸ்ரீனிவாஸ் தனது 28வது வயதில் புனித மலைகளுக்கு மலையேறத் தொடங்கினார். 2020 முதல் இந்த ஆண்டு ஜூன் 26ஆம் தேதி வரை 40 முறை என மொத்தம் இதுவரை 449 முறை பாதயாத்திரையாக நின்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். மொத்தமாக 449 முறை பாதசாரியாக நடந்து வந்து தரிசனம் செய்தது, சாதாரண விஷயம் அல்ல மக்களே. இதற்காக தான் இவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இவருக்கு 'அதிக முறை திருப்பதிக்கு நடந்து சென்றவர்' எனும் கெளரவத்தை வழங்கியுள்ளது.

கௌரவித்த ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்
ஸ்ரீனிவாஸ ராவ், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் தலைவர் செல்வராணி முத்தையாவிடம் இருந்து சமீபத்தில் மரியாதை நகலைப் பெற்றார். ஸ்ரீனிவாஸ் நகரில் ஆயுர்வேத மருந்துக் கடை நடத்தி வருகிறார், மேலும் பக்தர்களுக்கு திருமலை யாத்திரை குறித்த தகவல்களை வழங்குவதற்காக ஸ்ரீகாகுளத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) தகவல் மையத்தில் தினமும் இரண்டு மணி நேரம் சேவை செய்து வருகிறார்.

உடலில் தெம்பு இருக்கும் வரை தொடர்ந்து செல்வேன்
இந்த அற்புதமான பயணத்தில் எனது மனைவி மஹந்தி சரஸ்வதி மற்றும் மகன் மஹந்தி ஆஞ்சநேய ராகேஷ் ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர், மேலும் சாதனை மற்றும் பெருமையைப் பெறுவதற்கு நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று மஹந்தி ஸ்ரீனிவாச ராவ் கூறினார். கடவுள் அருளுடன் எனது உடல்நிலை அனுமதிக்கும் வரை நான் தொடர்ந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்வேன், என்றார்.



Click it and Unblock the Notifications





