Search
  • Follow NativePlanet
Share
» »திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் கோவில்

திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் கோவில்

ஏழு பேழை சக்தி கோவில்களின் முதன்மையானதும், உலகத்திலேயே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருமலைராயன் பட்டினம் அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் பூசைவிழா வெகு விமர்சியாக கடந்த வாரம் அரங்கேறியது.

புதுவை யூனியன் பிரதேசம் காரைக்காலைச் சேர்ந்த சிறிய ஊரான திருமலைராயன் பட்டினத்தில், பார்க்கும் இடமெங்கும் கோயில்கள், குளங்கள் என 108 கோயில்களும் 108 குளங்களும் கொண்டு அவ்வூர் சிறப்புற விளங்கி வருகிறது. இதில் நடுநாயகமாகக் குடிகொண்டு அனைவருக்கும் நல்லருள் புரிந்து வருபவள் அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் ஆவாள்.

Sree Aayiram Kaaliyamman Temple

அன்னைக்குப் படைக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் ஆயிரமாக படைக்கப்படுவதால் அன்னையின் திருப்பெயர் ஆயிரங்காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது. இந்த காளியம்மனுக்கு எதை காணிக்கையாகத் தந்தாலும் எண்ணிக்கை ஆயிரமாக இருக்க வேண்டும். 999 தந்தால் கூட ஊஹூம் தான் அதனால்தான் இவள் பெயர் ஆயிரங்காளி. அம்பாளை பற்றி மேலும் விரிவாகக் கீழே காண்போம்.

திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் கோவில் வரலாறு:

பலநூறு ஆண்டுகளுக்கு முன் கலிங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் தன்நாடு செழிக்கவும், மக்கள் நலமாக இருக்கவும் என்ன வழி என்று சான்றோர்களையும் சாஸ்திர வல்லுநர்களையும் கேட்டான். அன்னை காளி தேவிக்கு ஓர் ஆலயம் அமைத்து, தினமும் ஆயிரம் பொருட்களால் அர்ச்சனை ஆராதனை செய்ய வேண்டுமென அவர்கள் கூறினர். ஒருநாள் பூ வைத்தால் அடுத்த நாள் பழம், அதற்கு மறுநாள் பலகாரம் இப்படி மாற்றி மாற்றி வைக்க வேண்டும். ஒருநாள் வைத்த பொருளை அடுத்த நாள் வைக்கக் கூடாது.

Sree Aayiram Kaaliyamman Temple

இப்படி தொடர்ந்து பூஜித்தால், அம்பிகை மனம் இரங்குவாள். நீ வேண்டுவதெல்லாம் கிடைக்கும் என்று அவர்கள் கூறியதை அடுத்து கலிங்க தேசத்து அரசனும் அப்படியே அதை செவ்வனே செய்தான். ஒருநாள் இரண்டு நாள் அல்ல, ஐந்து ஆண்டுகள் பொறுமையாக வழிப்பட்டான். அதற்கு அடுத்த நாள் பூஜைக்கான நேரம் நெருங்கியது. அவசர அவசரமாக மன்னனிடம் ஓடி வந்த மந்திரி, "மன்னா, நேற்றுவரை விதவிதமான பொருட்களை காணிக்கையாக வைத்து விட்டோம். ஆனால் இன்று எதை வைத்து பூஜை செய்வது என்றே தெரியவில்லை, எல்லாம் முன்பு வைத்த பொருட்களாகவே இருக்கின்றன" என்று அவர் பதட்டமாக கூறிய அனைத்தும் அரண்மனை முழுக்க எதிரொலித்தது. அச்செய்தி நகரம், நாடு என பரவி எல்லோரையும் தொற்றிக்கொண்டது. என்ன செய்ய போகிறார் மன்னர்? என்று எல்லோரும் பதைபதைத்தார்கள்.

அம்பாளின் மகிமை:

ஏதாவது செய்யத் தவறினால் தெய்வ குற்றம் வந்துவிடுமே என்று தவித்தார் அரசர். அப்போது தான் அவர்கள் வந்தார்கள், மொத்தம் ஆயிரம்பேர். வந்தவர்களில் தலைவர் போலிருந்தவன் "வேந்தே... கவலைப்பட வேண்டாம். நானும் எங்கள் இனத்தவருமாக மொத்தம் ஆயிரம்பேர் இங்கே வந்திருக்கிறோம். எங்களையே காளி தேவிக்கு காணிக்கையாக அர்பணித்து பூஜை செய்யுங்கள்" என்று கூறினான். அரசனும் ஊர்மக்களும் சிலிர்த்துபோய் பரவசப்பட்டனர். அனைவரும் நாட்டுக்காக இப்படி ஓர் அர்ப்பணிப்பா என ஆச்சரியப்பட்டார்கள். அதன்படி, பூஜையை ஆரம்பித்தான் மன்னன். ஆயிரம் பேரும் தயாராக வந்து அம்மன் முன் நின்றார்கள். அப்போது எழுந்த அசரீரி "மன்னா உன் வேண்டுதலை ஏற்றேன். உன் நாடு இனி எந்த பஞ்சமும் இல்லாமல் செழித்து விளங்கும். எனக்கு மனப்பூர்வமாக தங்களை அர்ப்பணிக்க வந்தவர்களை நான் என் மக்களாகவே கருதுகிறேன். நீ பூஜிக்கும் என் திருவடிவை, உன் இறுதி காலத்தில் ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிடு" என்று கூறியது.

Sree Aayiram Kaaliyamman Temple

நாடு செழிப்பாகவே இருந்ததால் மன நிறைவோடு ஆட்சி செய்தான் மன்னன். தன் வாழ்நாள் நிறைவடையும் காலத்தில் அம்மன் திருவடியினை அழகான பேழையில் வைத்து ஆற்றில் விட்டான். அம்மனை சுமந்து கொண்டு தொட்டில் போல் அசைந்து ஆடியபடியே ஆற்றில் மிதந்தது பெட்டி. உள்ளே ஆனந்தமாக உறங்கியபடி வந்த காளி ஓர் இடம் வந்ததும் விழித்தாள். தங்களையே காணிக்கையாக தர முன்வந்த மக்கள் அப்பகுதியில் தான் வசிக்கிறார்கள் என்பது அவளுக்கு தெரியாதா என்ன? அவள் விருப்பம் புரிந்தது போல் அங்கேயே நின்றது பெட்டி. அன்று தன்முன் வந்து நின்றவர்களின் தலைவர் போல் இருந்த பெரியவரின் கனவில் தோன்றினாள் காளிதேவி.! பெட்டிக்குள் தான் இருப்பதை சொன்னாள், அதன்பிறகு தூக்கமாவது ஓய்வாவது! அனைவரும் உரிய மரியாதைகளோடு அம்பிகையை அழைத்து வர ஓடோடி வந்தனர்.

தங்கள் வீட்டு பெண்ணாகவே பாவித்து சகல சீர்களுடன் கூட்டிக் கொண்டு வந்தார்கள். கோயில் கட்டினார்கள். பெட்டியை வைத்து திறக்கப் போனார்கள். இப்போதும் அசரீரி வாக்காக அம்மன் பேசினாள். "ஐந்து ஆண்டுகள் மன்னன் பூஜித்த பின், நீங்கள் என் முன் வந்ததால் அந்த நாளில் மட்டுமே இனி நான் வெளியில் வருவேன். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நான் காட்சியளித்தாலும் என் அருள் என்றென்றும் இங்கே நிலைத்திருக்கும். உங்கள் இனத்தவரே என்னை தொடர்ந்து பூஜித்தாலும் இங்குவரும் அனைவரும் என் பிள்ளைகளே, அன்போடு என்னைக் காண வரும் அனைவருக்கும் நான் என் அருளை வாரி வழங்குவேன்" என கூறினாள்.

Sree Aayiram Kaaliyamman Temple

சிறப்பம்சங்கள்:

அந்த நிகழ்வுக்குப் பிறகு அன்றுமுதல் இன்றுவரை ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை திருப்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோவிலில் பூசை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வருடம் ஆயிரங்காளி எழுந்தருளினாள், 06-06-2022இல் அம்பாளின் திருமேனி பேழையிலிருந்து எழுப்பப்பட்டது. 07-06-2022 மாலை 6 மணிக்கு ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோவிலில் இருந்து வரிசை புறப்பாடு மிக விமர்சியாகக் கொண்டு வரப்பட்டது. 08-06-2022 அதிகாலை மகா தீப ஆராதனையுடன் வழிபாடு செய்யப்பட்டு ஆயிரங்காளி அடுத்த இரு தினங்களுக்கு பக்தக்கோடிகளுக்கு காட்சி கொடுத்தாள். 09-06-2022 அதிகாலை 4.00 மணிக்கு ஆயிரங்காளியம்மன் மீண்டும் பேழையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டாள்.

அன்னையின் ஆசை:

ஐந்து ஆண்டுகளுக்கு முன் அன்னை இருக்கும் பேழையில் வைக்கப்படும் மஞ்சள் பூச்சி பிடிக்காமல் இருப்பதும், எலுமிச்சை கெடாமல் இருப்பதும், தரிசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவில் காளிதேவியில் உருவம் காட்சியளிப்பதும் என எத்தனை எத்தனையோ அதிசயங்களும், ஆச்சரியங்களும் இக்கோவிலில் நிறைந்து இருக்கின்றன. இம்முறை தரிசித்த அனைவருமே பெரும் பாக்கியம் செய்தவரே! தவறவிட்டு அனைவரும் கூட அன்னையின் பிள்ளைகளே! அடுத்த தரிசனம் 2027 பிலவங்க வருடம் வைகாசி வளர்பிறையில் அரங்கேறும். இப்பொழுதே இதை மனதில் நிலைநாட்டிக் கொள்ளுங்கள்.

Sree Aayiram Kaaliyamman Temple

எப்படி இங்கே செல்லலாம்:

காரைக்கால் சாலை மார்க்கமாகவும், ரயில் சேவை மூலமாகவும் நாட்டின் பல்வேறு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருமலைராயன் பட்டினம் காரைக்காலிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இருசக்கர வாகனம், கார் அல்லது பேருந்து மூலமாக திருமலைராயன் பட்டினத்தை எளிதாக அடையலாம். புதுவையிலிருந்து இங்கு வந்து செல்ல நான்கு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு 3 முதல் 4 ஆயிரம் வரை தேவைப்படுகிறது.

அம்பாளை பார்க்க தவறியவர்கள், சாதரணமாக கோவிலுக்கு சென்று அம்பாளின் பேழையை தரிசித்து வரலாம். உள்ளே வீற்றிருக்கும் அம்பாளை நீங்கள் காண முடியாவிட்டாலும், அவள் உள்ளிருந்தே உங்களுக்கு அருபாளிப்பாள். எனவே இங்கு சென்று வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X