கர்நாடகா சுற்றுப்பயணம் - ஒரு சிறப்பு முன்னோட்டம்

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

உலக சுற்றுலாப் பயணிகளை தன் வசம் சுண்டி இழுக்கும் சிறப்பு வாய்ந்த கர்நாடகா மாநிலம், இந்தியாவின் தென் மேற்கு திசையில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலா மையமாகும். அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில் பெருகி வரும் உல்லாச நகரங்களும், சொகுசு விடுதிகளும் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.

இந்தியாவின் தகவல் தொழிற்நுட்ப மையமாக வேகமாக வளர்ந்து வரும் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூர் நகரத்தின் மதிப்பு, அதை சுற்றியுள்ள எண்ணற்ற சுற்றுலா தலங்களின் காரணமாக நாளுக்குள் நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

கர்நாடக மாநிலம் அதன் நில அமைப்பு சார்ந்து மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் கடற்கரை சார்ந்த பகுதிகள் , கரவலி என்றும், மேற்கு தொடர்ச்சி மலைகளை சூழ்ந்து அமைந்திருக்கும் பகுதிகள் மலநாடு என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் அதுனுடைய சமவெளிகள் பயலுசீமே என்றும் அதன் உட்பிரிவுகள் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளாகவும் அறியப்படுகிறது.

தட்ப வெப்ப நிலை

கர்நாடகாவின் முன்பனிக் காலமான அக்டோபரிலிருந்து, டிசம்பர் வரையோ, அல்லது பனிக்காலமான ஜனவரியிலிருந்து, பிப்ரவரி வரையிலான காலங்களிலோ சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும். கர்நாடகாவின் கோடை காலத்தையோ, மழை காலத்தையோ சுற்றுலாப் பயணிகள்  தவிர்ப்பது நல்லது.

மொழிகள்

கர்நாடகாவின் அதிகாரப் பூர்வமான மொழியாக கன்னடம் இருந்து வருகிறது. இதைத் தவிர துளு, கொங்கனி, கொடவா போன்ற பழங்குடி மக்களின் மொழிகளும் புழக்கத்தில் உள்ளன. அதுமட்டுமல்லாமல் தேசிய மொழி ஹிந்தியும் கர்நாடகாவில் பேசப்பட்டு வருகிறது.

கர்நாடகாவின் தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வருபவர்கள் பேசும் மொழிகளாக  தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் இருந்து வருகின்றன. அதோடு ஆங்கிலமும் பரவலாக கர்நாடகாவில் பேசப்பட்டு வருகிறது.

கர்நாடக சுற்றுப் பயணம்

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அதிலும் பயணத்தில் தீராத தாகம் கொண்ட சாகசப் பிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையின் அற்புதங்கள் மீது அமரக் காதல் கொண்டவர்களுக்கும் பிரத்யேகமாக எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கர்நாடகாவை சுற்றி அமைந்துள்ளன.

கூர்க் மாவட்டம் அதன் பச்சை புல்வெளிகளை கொண்ட கவின் கொஞ்சும் பள்ளத்தாக்குகளால் இந்தியாவின் ஸ்காட்லேண்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த எழில் நகரம் கர்நாடகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

கர்நாடகாவின் காப்பித் தோட்டமான சிக்மகளூர் மாவட்டமும், அம்மாவட்டத்தின் அழகிய அருவிகளுக்கு சொந்தமான கெம்மனகுண்டியும், பசுமையான குதுரேமுக்கும்  பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள்.

கர்நாடகாவில் பரந்து விரிந்து கிடக்கும் எண்ணற்ற கடற்கரையோர சுற்றுலா தலங்களை தன்னகத்தே கொண்ட பெருமை மங்களூருக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் கொல்லூர் மூகாம்பிகை கோயில், உடுப்பி கிருஷ்ணா கோயில், ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோயில், ஸ்ருங்கேரி சாரதா கோயில், குக்கே சுப்பிரமணிய கோயில், தர்மஸ்தாலா உள்ளிட்ட ஆன்மீக ஸ்தலங்களும் மங்களூரை சுற்றி உள்ளன.கர்நாடகாவின் சொக்க வைக்கும் கடற்கரை தேசமாக மரவந்தே கடற்கரை திகழ்ந்து வருகிறது.

அதுபோலவே மால்பே, பைந்தூர், கார்வார் போன்ற கடற்கரை நகரங்களும் கர்நாடகாவின் வசீகரமிக்க கடற்கரைகளாகும்.கர்நாடகாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரங்கள் ஒவ்வொன்றும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

குறிப்பாக மைசூர், பாதாமி, பேலூர்  , ஹல்லேபிட், ஹம்பி, சரவணபெலகோலா போன்ற நகரங்களில் காணப்படும் எழில் பொங்கும் ஓவியங்களும், கவின் கொஞ்சும் சிற்பங்களும், எண்ணிலடங்கா கல்வெட்டுகளும் சரித்திரத்தை நம் கண் முன்னே நிறுத்தி நம்மை ஆதி காலத்துக்கே பயணிக்க செய்யும் அற்புதங்கள்.

கர்நாடகாவை தேடி வரும் சாகசப் பிரியர்களுக்கு, எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் விருந்தளிக்க காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் காவேரி மீன்பிடி முகாம், பீமேஸ்வரி, கலிபோரே, தொட்டம்கலி உள்ளிட்ட இடங்களில் மீன்பிடிக்கும் அனுபவமே மிகவும் அலாதியானது.

அதேபோல் மலை ஏறும் ஆர்வமுள்ளவர்களை அதிக அளவில் ஈர்க்கும் இடங்களாக சவன்துர்கா, சிவகிரி, ராமநகரம், அந்தர்கங்கே போன்ற இடங்கள் விளங்கி வருகின்றன.

அதோடு ஹொன்னேமரடும், சிவகங்கேவும், சிவனசமுத்திரமும் , சங்கமமும் பரிசல் பயணத்துக்கும், படகு சவாரிக்கும் பிரபலமானவை.கர்நாடகாவில் உள்ள பசுமையான காடுகளுக்காகவும், அதில் வாழும் மிருகங்கள் மற்றும் பறவைகளை காணும் ஆர்வத்தோடும் நிறைய சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் கர்நாடகாவுக்கு வருகின்றனர்.

அதிலும் பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு காடுகள், யானை கூட்டங்கள் அதிகமாக உள்ள கபினி மற்றும் நாகர்ஹோல் காடுகள், தண்டேலி,பிலிகிரி ரங்கா குன்று மற்றும் பத்ரா வனவிலங்கு சரணாலயம் போன்ற பகுதிகள் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

மேற்குறிப்பிட்ட சுற்றுலா மையங்களை தவிர கர்நாடகாவின் பெருநகரங்களான பெங்களூர், மைசூர், மங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் பயணிகள் ஆர்வத்தோடு வந்து செல்கின்றனர்.

பெங்களூர் நகரின் வேறுபட்ட கலாச்சாரமும், தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களும், அடுக்குமாடி கட்டிடங்களும் சேர்ந்து அதை இந்தியாவின்  முக்கியமான பெருநகரங்களில் ஒன்றாக திகழச் செய்துகொண்டிருக்கிறது. கர்நாடகாவின் மற்ற நகரங்களும் அதை போலவே வேகமாக வளர்ந்து வருகின்றன.

Please Wait while comments are loading...