» »பெங்களூரில் பட்ஜெட் சிற்றுண்டி ஹோட்டல்கள்!!

பெங்களூரில் பட்ஜெட் சிற்றுண்டி ஹோட்டல்கள்!!

Written By: Staff

இருபது - முப்பது வருடங்களுக்குமுன் ஹோட்டல்களில் போய் சாப்பிடுவதெல்லாம் அதிகம் நடக்காத ஒன்று. வீட்டில் யாருக்கேனும் உடம்பு சுகமில்லாத போது பிள்ளைகளுக்கு இட்லியையோ தோசையோ ஹோட்டல்களில் வாங்கி கொடுப்பார்கள். இன்றோ (குறிப்பாக நகரங்களில்) வாரத்திற்கு ஒரு முறை ஹோட்டல்களில் குடும்பம் சகிதமாய் போய் சாப்பிடுவதென்பது வாடிக்கையாகிவிட்ட ஒன்று. பீட்சா, பர்கர், போன்ற குப்பைத் தீனிகள் கோவில்பட்டி, நெல்லை போன்ற சிறு நகரங்களில்கூட எளிதாக கிடைக்கும் அளவிற்கு உலகமயம் தன் வேலையைக் காட்டிவிட்டது. மூன்று பேர் கொண்ட ஒரு சிறிய குடும்பம் ஒரு ஹோட்டலுக்குச் சென்றால்கூட 500 ரூபாய் எளிதாக ஆகிவிடுகிறது. ஒரு முழுமையான சாப்பாடு 100ரூபாய்க்கு குறைந்து எங்கும் கிடைப்பதில்லை.

இந்த சூழலில் எல்லாத் தரப்பினரும் சாப்பிடக்கூடிய வகையில், சில நல்ல பட்ஜெட் உணவகங்களைப் பார்க்கலாம்.

masala_dosa

Photo Courtesy : Connie Ma

கணேஷ் தர்ஷன், ஜெயநகர் 3rd Block

ஜெயநகர் 4th Block பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னலான 3rd Block'இல் இருக்கும் புகழ்பெற்ற உணவகம் கணேஷ் தர்ஷன். மதிய வேளைகளில் அதிக கூட்டம் இருக்கும். சிறந்த மசாலா தோசை கிடைக்கும் பெங்களூர் உணவகங்களில், கணேஷ் தர்ஷன் தனித்துவமானது. 35ரூபாய்க்கு நல்ல தரத்தில் இங்கு மசாலா தோசை கிடைக்கிறது. அஜினமோட்டோ, செயற்கை கலர்கள் போன்ற வேதிப் பொருட்களையும் இங்கு கலப்பதில்லை என்பது குறிப்படத்தக்கது. மங்களூர் பன்கள், அக்கி ரோட்டி, கேசரி, காரா பாத் என்று எல்லா உணவகளும் மக்கள் விரும்பி வாங்ககூடியது. இங்கு கிடைக்கும் காபி மிகவும் பிரசித்திபெற்றது. பத்து ரூபாக்கு நல்ல ஃபில்டர் காபி தருகிறார்கள்.

idlyvadai

Photo Courtesy : Manfred Sommer

விஷ்ணு தட்டு இட்லி கடை, டொம்லூர் - 4th Cross Road

டொம்லூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகேவுள்ள டிவீஎஸ் இரு சக்கர வாகன கடைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தெருவின் ஆரம்பத்தில் அமைதியாய் இருக்கிறது இந்த‌ விஷ்ணு தட்டு இட்லிக் கடை. காலை மற்றும் இரவு நேரங்களில் ஆவி பறக்கும் பெரிய இட்லிகள், செட் தோசைகளை, சுள்ளென நாக்கை இழுக்கும் காரச் சட்னியோடு நமக்கு தருகின்றனர். வயிறு நிறைய சாப்பிட்டாலும் 60 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.

சாய் தோசா ஸ்கந்தா கேம்ப்.

கேம்ப்ரிட்ஜ் சாலை, சாய்பாபா கோவிலுக்கு அருகே இருக்கும் இக்கடை, வியாழன் என்று மிக பரபரப்பாய் இயங்கும். சாய்பாபாவைப் பார்த்துவிட்டு நேராக இங்கு மசாலா தோசை சாப்பிட வந்து விடுவார்கள். 30 ரூபாய்க்கு மொறு மொறுவென, கரிய தங்க நிறத்தில் மசாலா தோசையை கையில் ஏந்தியபடி, காரில் வந்தவர்கள் முதல் சாதாரண தொழிலாளிகள் வரை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

இந்தியன் காஃபி ஹவுஸ், சர்ச் சாலை

Indian_Coffee_House

Photo Courtesy : Jason Rufus

பழைய பெங்களூர் ஆசாமிகள் முதல் இளைஞர்கள் வரை பிரபலமான ஒரு சிற்றுண்டி கடை இந்த இந்தியன் காஃபி ஹவுஸ். சுற்றி கருப்பு வெள்ளை புகைப்படங்கள், சீருடை சிப்பந்திகள், பீங்கான் கோப்பைகள், மர இருக்கைகள், அந்தக் காலத்து மின் விசிறிகள் என 70களின் சூழலில் உட்கார்ந்து கொண்டு வெளியே இருக்கும் பப்புகளையும், உலகத்தையும் பார்ப்பது ஒரு சுவாரஸ்யம்தான். இதற்காகவே பலர் வருகின்றனர். பழைய பெங்களூரை திரும்ப பார்ப்பது போன்ற ஒரு உணர்வு. ருசியான பொன்னிற தோசைகள், கட்லெட்டுகள், ஆம்லெட்டுகள், காஃபி என்று எல்லாமே நியாயமான விலையில் அதுவும் சர்ச் சாலையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்