» »ஊட்டியை சுற்றிப் பார்ப்போம் வாருங்கள்!!!

ஊட்டியை சுற்றிப் பார்ப்போம் வாருங்கள்!!!

Written By: Staff

12 வருடங்களுக்கு ஒரு முறைப் பூக்கும் நீல நிறம் கொண்ட குறிஞ்சிப் பூ, நீலகிரி மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் போது, மலை முழுதும் நீல நிறமாக காட்சி அளிப்பதால் நீலகிரி என்ற பெயர் வந்தது.

அந்த நீலகிரி மலையில் எல்லையில்லாமல் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்களில் வைரக்கல்லாய் ஜொலித்துக்கொண்டிருக்கிறது ஊட்டி என்று அழைக்கப்படும் உதகமண்டலம்.

ஊட்டியின் அழகில் மயங்கிய ஆங்கிலேயர், 'மலைப்பிரதேசங்களின் ராணி' என்று ஊட்டிக்கு பெயர் சூட்டினார்கள்.

அதோடு ஆங்கிலேயர்களின் கோடைகால வாசஸ்தலமாக ஊட்டி திகழ்ந்து வந்த காரணமாகவோ இல்லை வேறு காரணமோ, இன்றும் ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கிலாந்து நாட்டின் ஒரு கிராமத்தைப் போல ஊட்டி தோற்றமளிப்பதாக கருதுகின்றனர்.

படித்துப் பாருங்கள் : அறியப்படாத அழகிய மலைவாசஸ்தலங்கள்!

கொஞ்சம் வரலாறு!

கொஞ்சம் வரலாறு!

12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையில் ஹொய்சாளர்களின் ஆட்சி புரிந்தனர். பின்னர், திப்பு சுல்தானின் மைசூர் அரசுப் பகுதி ஆன உதகமண்டலம் 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வசம் சென்றது. அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆளுனராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி இங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் முதலிய பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கினார் என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலேயரின் ஆட்சியில் ஊட்டி நல்ல வளர்ச்சியைக் கண்டதுடன், வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், நீலகிரி மலை இரயில் பாதையும் அமைக்கப்பட்டது.

படம் : Premkudva

நீலகிரி மலை ரயில்

நீலகிரி மலை ரயில்

மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை நீராவி இஞ்சினும், பின்னர் டீசல் இஞ்சினும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர். இந்த ரயில் 208 வளைவுகள், 16 குகைகள் மற்றும் 250 பாலங்களை கடந்துசெல்வதால் பயணதூரம் 46 கி.மீ.தான் என்றாலும் பயண நேரம் சுமார் ஐந்தரைமணி நேரமாகும். மேலும் செல்லும் வழியெங்கும் பசுமையான காடுகளும், சத்தமிடும் பட்சிகளும், கடந்தோடும் நீரோடைகளும், காட்டு மிருகங்களும் என இனிமையான பயண அனுபமாக இருக்கும்.

மலையேற்றம்

மலையேற்றம்

ஊட்டியின் வடமேற்காக மலையேற்றம் செய்வது பார்சன் பள்ளத்தாக்கின் வசீகரிக்கும் அற்புத தோற்றத்தை நம் கண் முன்னே படம்பிடித்து காட்டும். இந்த சாகச பாதை நம்மை போர்த்திமுண்ட் எனும் நீலகிரியின் அடி ஆழத்தில் இருக்கும் அழகிய சிறு கிராமத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு ஒரு இரவு தங்கிப் பாருங்கள் அதன் பருவநிலை தரும் குளிர் ஸ்பரிசம் உங்களுக்கு உங்கள் காதலருடன் இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும். அதோடு போர்த்திமுண்ட் கிராமத்திற்கு அருகே உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சிறுத்தை, யானை, ஆபத்தான தாஹ்ர் ஆடு போன்ற விலங்குகளை கண்டு ரசிக்கலாம். அதற்கு அடுத்த நாள் பாண்டியர் குன்றுகளிலிருந்து மலையேற்றத்தை துவங்கினால் பைக்காரா அருவி, முதுமலை தேசிய பூங்கா வழியாக உங்களை மீண்டும் ஊட்டிக்கு அழைத்து வந்து விடும். அப்போது வரும் வழியில் முதுமலை தேசிய பூங்காவில் காணப்படும் எக்கச்சக்கமான சந்தன மரங்கள், தேக்கு மரங்கள், மூங்கில்கள் எல்லாம் நம்முடனேயே பயணிப்பது போல் பயணத்தை இனிமையானதாக ஆக்கும்.

படம் : NatarajanA

ஊட்டி கேரட்டுகள்

ஊட்டி கேரட்டுகள்

ஊட்டி சென்றால் கேரட் சாப்பிட மறந்துவிடாதீர்கள். சாலையோரங்களில் விற்கப்படும் இந்த வகை கேரட்டுகள் புத்தம் புதிதாக இருப்பதுடன், இதன் சுவையை நீங்கள் நகரங்களில் காணப்படும் கேரட்டுகளில் காண முடியாது.

படம் : Navaneeth Krishnan S

குதிரைச் சவாரி

குதிரைச் சவாரி

ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் குதிரைச் சவாரி செய்யாமல் ஊர் திரும்புவது முழுமையான பயணமாக அமையாது. எனவே நீங்கள் ஊட்டி வரும்போது குதிரையில் அமர்ந்து சவாரி செய்து ஊட்டியின் அழகை ரசிக்க மறக்காதீர்கள்.


படம் : Ramkumar

தோடர் குடிசை

தோடர் குடிசை

நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் பழங்குடியின மக்களின் குடிசை.

படம் : Pratheepps

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

ஊட்டியின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக அவலஞ்சி, பொட்டானிக்கல் கார்டன், ஊட்டி ஏரி, தொட்டபெட்டா, க்ளென்மார்கன், பைக்காரா ஏரி ஆகியவை அறியப்படுகின்றன.

படம் : SELVA KUMAR.L - DHARMAPURI

பனிச்சரிவு ஏரி (avalanche)

பனிச்சரிவு ஏரி (avalanche)

நீலகிரி மலையில் அமைந்துள்ள பனிச்சரிவு ஏரி ஊட்டியில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் உள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் போது இந்தப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவின் காரணமாக இது பனிச்சரிவு ஏரி என்று பொருள்படும்படி ஆங்கிலத்தில் அவலஞ்சி என அழைக்கப்படுகிறது.

பொட்டானிக்கல் கார்டன்

பொட்டானிக்கல் கார்டன்

பொட்டானிக்கல் கார்டன் எனப்படும் அரசு தாவரவியல் பூங்கா, 22 ஹெக்டேர் பரப்பளவில், ஊட்டியில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா மலைச் சரிவுகளில் விரிந்துள்ள இந்தப் பூங்காக்கள், பசுமையான கம்பளம் போன்று காட்சியளிக்கும். இங்கு உள்ள 20 மில்லியன் ஆண்டு பழமையானது என்று நம்பப்படுகிற ஒரு மரத்தின் தண்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.


படம் : Adam63

ஊட்டி ஏரி, ஊட்டி

ஊட்டி ஏரி, ஊட்டி

ஊட்டிக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது ஊட்டி ஏரி. பல்வேறு புவியியல் காரணங்களாலும் பஸ் ஸ்டாண்ட், ரேஸ் கோர்ஸ் மற்றும் ஏரிப்பூங்கா போன்றவற்றாலும் ஏரி அதன் உண்மையான அளவில் இருந்து இன்று சுருங்கி விட்டது. இந்த ஏரியில் படகுப்பயணம் செய்வது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இதன் மூலம் ஏரியின் கண்ணுக்கினிய அழகை அனுபவிக்க முடியும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் போது மாநில அரசு இரண்டு நாட்கள் நீடிக்கும் படகு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறது.

படம் : Navaneeth Krishnan S

பெர்ன்ஹில்ஸ் பேலஸ்

பெர்ன்ஹில்ஸ் பேலஸ்

1844-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெர்ன்ஹில்ஸ் பேலஸ் அந்தக் காலங்களில் மைசூர் மகாராஜாவின் கோடைக் கால வசிப்பிடமாக இருந்து வந்தது. ஊட்டியில் அமைந்துள்ள இந்த அரண்மனை தற்போது பச்சை புல்வெளிகள், அடர்ந்த காடுகள், பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அழகாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

படம் : Ascidian

தொட்டபெட்டா

தொட்டபெட்டா

தொட்டபெட்டா மலைச் சிகரம் நீலகிரி மலையின் மிக உயர்ந்த மலை சிகரம். தொட்டபெட்டா என்ற சொல் கன்னட மொழியில் 'பெரிய மலை' என்று குறிக்கிறது. இந்த மலை 8650 அடி உயரத்தில், ஊட்டி நகரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், ஊட்டி-கோத்தகிரி சாலையில் உள்ளது.

படம் : Ananth BS

மலர் கண்காட்சி

மலர் கண்காட்சி

ஊட்டியில் மலர் கண் காட்சி, வருடா வருடம் மே மாதம் பொட்டானிக்கல் கார்டனில் நடைபெறும். இதில் பல்வேறு வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்படுவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இதைக் காண வருகின்றனர்.

க்ளென்மார்கன்

க்ளென்மார்கன்

ஊட்டியிலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ள கண்ணுக்கினிய கிராமமான க்ளென்மார்கன், பச்சை பசேல் தேயிலைத் தோட்டங்களுக்காக பிரபலமாக அறியப்படுகிறது. இங்கு சிங்காரா என்ற இடத்தில் உள்ள மின் நிலையத்திலிருந்து, க்ளென்மார்கன் கிராமத்திற்கு செல்லும் கயிற்றுப்பாதை சுற்றுலாப் பயணிகளிடையே வெகுப் பிரசித்தம். 3 கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாதை 980 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் போக்குவரத்துக் கடினமாக இருப்பதுடன் சாகச உணர்வையும் ஏற்படுத்தும்.

படம் : Vinrox

டெலஸ்கோப் ஹவுஸ்

டெலஸ்கோப் ஹவுஸ்

தொட்டபெட்டா சிகரத்தின் உச்சியில் அமைந்திருக்கும் டெலஸ்கோப் ஹவுஸில் 2 டெலஸ்கோப்கள் உள்ளன. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் ஒட்டுமொத்த நீலகிரி மலைப்பகுதியின் பரந்து விரிந்த அழகிய தோற்றத்தை பரிபூரணமாக பார்த்து ரசிக்கலாம். இந்த டெலஸ்கோப் ஹவுஸ் 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலாத் துறையால் தொட்டபெட்டா சிகரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.

படம் : AMALAN619

கவர்ன்மெண்ட் ரோஸ் கார்டன்

கவர்ன்மெண்ட் ரோஸ் கார்டன்

எல்க் குன்றின் சரிவுகளில் வீற்றிருக்கும் கவர்ன்மெண்ட் ரோஸ் கார்டன்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோஜாத் தோட்டமாக அறியப்படுகிறது. இந்த ரோஜாத் தோட்டம் 1995-அம ஆண்டு ஊட்டி பொட்டானிக்கல் கார்டனின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டதாகும்.

படம் : Rojypala

முக்கூர்த்தி தேசியப் பூங்கா

முக்கூர்த்தி தேசியப் பூங்கா

தமிழ்நாட்டின் மாநில விலங்கான, அழிந்து வரும் இனமான வரையாட்டினை பாதுக்காப்பதற்காக முக்கூர்த்தி தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இது நீலகிரி மேட்டுநிலத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு வரையாடு மட்டுமின்றி வங்காளப் புலி, ஆசிய யானை போன்ற பல அழியும் தருவாயில் உள்ள விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன.

படம் : N. A. Naseer

பைக்காரா ஏரி

பைக்காரா ஏரி

முதுமலை தேசிய பூங்காவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைக்காரா ஏரி, இயற்கையின் அளவில்லா அழகுக்கு ஒரு சிறந்த உதாரணம். நீலகிரி மாவட்டத்தின் பெரிய ஏரியான பைக்காராவை தோடர் இன மக்கள் புனிதமாக கருதுகின்றனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏரியில் ஒரு படகு இல்லத்தைப் பராமரிக்கிறது. உள்ளே ஒரு உணவகம் கொண்ட இந்த படகு இல்லம், பார்வையாளர்கள் ஏரியைச் சுற்றிப் பயணம் செய்ய உதவுகிறது.

படம் : Gauri Wur Sem

செயின்ட் ஸ்டீஃபன்ஸ் சர்ச்

செயின்ட் ஸ்டீஃபன்ஸ் சர்ச்

ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் செயின்ட் ஸ்டீஃபன்ஸ் சர்ச் அமைந்துள்ளது. 1831-ஆம் ஆண்டு மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட இந்த தேவாலயம் நீலகிரியின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும்.

படம் : Shyamal

வென்லாக் டவுன்ஸ்

வென்லாக் டவுன்ஸ்

வென்லாக் டவுன்ஸ், ஊட்டியின் அருகில் படப்பிடிப்புகளுக்குப் பெயர் போன ஒரு அழகான இடம். திரண்டிருக்கும் மலைகள், பச்சைப் பசேல் வயல்கள், திறந்த வெளிகள் என முடிவில்லாமல் பரந்திருக்கும் பசுமை உங்கள் இதயத்தை நிரப்பும்.

படம் : L.vivian.richard

மான் பூங்கா

மான் பூங்கா

ஊட்டி ஏரியின் ஒரு மூலையில் இந்த மான் பூங்கா அமைந்துள்ளது. இந்தியாவில் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் விலங்கியல் பூங்காக்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

படம் : Navaneeth Krishnan S

தேயிலைத் தோட்டங்கள்

தேயிலைத் தோட்டங்கள்

நீல மலைகளின் நடுவே பச்சை வண்ணத்தில் காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் அற்புதங்கள். இந்தத் தேயிலைத் தோட்டங்கள் என்றுமே சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க தவறியதில்லை.

படம் : Rohit.fnds1

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்