மகாராஷ்டிர மாநிலம் ஔரங்கபாத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில், பிரமிட் வடிவத்தில் காட்சியளிக்கும் குன்றின் மீது தௌலதாபாத் நகரம் அமைந்துள்ளது.
இங்குள்ள புகழ்பெற்ற கோட்டை, யாதவ பேரரசின் மன்னர்களால் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோட்டை நகரம் முகமது பின் துக்ளக்கால், தௌலதாபாத் என்று பெயர் மாற்றம் பெறும் வரை தேவகிரி என்றே அழைக்கப்பட்டு வந்தது. தௌலதாபாத் என்றால் வளமையான நகரம் என்று பெயர்.

தேவகிரி தௌலதாபாத் கோட்டை
தேவகிரி தௌலதாபாத் கோட்டை ஔரங்கபாத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 190 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றிருக்கும் இந்தக் கோட்டை தேவகிரி தௌலதாபாத்தின் புகழுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறது.
படம் : Negikun

வரலாறு
தௌலதாபாத் கோட்டை 1210 மற்றும் 1246-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டாம் ஷிங்கனா மன்னரால் கட்டப்பட்டது. இது 12-ஆம் நூற்றாண்டில் பில்லமா ஐந்தாம் யாதவ மன்னரின் ஆட்சியன் கீழ் இருந்தது. அதன் பின்னர் சாளுக்ய சாமராஜ்யத்தின் வசம் சென்ற இந்தக் கோட்டை, மீண்டும் யாதவ பேரரசால் கைப்பற்றப்பட்டது. இதற்கு பின் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியின் கீழும், முகாலயர்களின் ஆட்சியின் கீழும் இருந்த தௌலதாபாத், ஔரங்கஜிப்பின் இறப்புக்கு பிறகு ஹைதராபாத் நிஜாமின் வசம் சென்றது.
படம் : Aak.jain54

பாதுகாப்பு அரண்கள்
தௌலதாபாத் கோட்டை குன்றின் உச்சியில் கட்டப்பட்டிருக்க, அதை சுற்றியும் பலமான மதிற்சுவர்கள் அசைக்கமுடியாத அரண்களாய் நின்று கொண்டிருக்கின்றன. இந்த கவர்ந்திழுக்கும் பாதுகாப்பு அரண்களும், கொத்தளங்களும் காண்போரை வியப்பில் ஆழ்த்தும்.
படம் : Vu2sga

சுரங்கப் பாதைகள்
இந்தக் கோட்டையில் நிறைய சுரங்கப் பாதைகள் காணப்படுகின்றன. அவை எல்லாம் ஆபத்து காலங்களில் தப்பிச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன.
படம் : Aak.jain54

அகழி
தௌலதாபாத் கோட்டையை சுற்றி 40 அடி ஆழத்தில் அகழி ஒன்று உள்ளது. இந்த அகழியில் பாதுகாப்புக்காக அந்த காலங்களில் நீரை நிரப்பி அதில் முதலைகளை விட்டு வைத்திருப்பார்கள்.
படம் : Danial Chitnis

சந்த் மினார்
தௌலதாபாத் கோட்டையில் உள்ள நினைவுச் சின்னங்களில் முக்கியமானவையாக கருதப்படும் சந்த் மினார் பயணிகளை வெகுவாக கவரும். இந்த சந்த் மினார் கோபுரம் 65 மீட்டர் உயரத்தில், பகட்டான பெர்சிய நாட்டு பளபளப்பான ஓடுகளால் வேயப்பட்டிருக்கிறது.
படம் : Aak.jain54

சினி மஹால்
சந்த் மினாருக்கு அடுத்து முக்கிய நினைவுச் சின்னமான சினி மஹால் அல்லது சின்ன அரண்மனை, கோல்கொண்டாவின் கடைசி குதுப் ஷாஹி மன்னர், அபுல் ஹசான் தானா ஷா 1687-ல் சிறை செல்லும் முன் எழிலே உருவமான கட்டிடமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.
படம் : Jonathanawhite

பிற முக்கிய இடங்கள்
தௌலதாபாத் கோட்டைக்கு அருகிலேயே காணப்படும் ஜம்மா மஸ்ஜித் மற்றும் அதன் பின்னே இருக்கும் மாசன்றி குளமும் முக்கியமான இடங்கள். இவைகளைத் தவிர பராதரி எனும் கட்டிடமும் இப்பகுதியில் மிகவும் பிரபலம்.
படம் : Aarti reddy

தேவகிரி தௌலதாபாத்தை எப்படி அடைவது?
தேவகிரி தௌலதாபாத்திலிருந்து சிக்கல்தானா விமான நிலையம் 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த விமான நிலையம் டெல்லி, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து நகரங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தேவகிரி தௌலதாபாத்திலிருந்து 125 கிலோமீட்டரில் மன்முத் ரயில் நிலையம் உள்ளது. இங்கு வந்த பின்பு பயணிகள் வாடகை கார்கள் மூலம் தேவகிரி தௌலதாபாத்தை அடையலாம். கார் வாடகை ஏறத்தாழ 900 ரூபாய் இருக்கும். மேலும் தேவகிரி தௌலதாபாத் நகரம் ஔரங்கபாத்திலிருந்து மிக அருகில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே ஔரங்கபாத்திலிருந்து, தேவகிரி தௌலதாபாத் நகரத்துக்கு பேருந்துகள் அல்லது வாடகை கார்கள் மூலம் எளிதாக சென்றடையலாம். அதோடு மகாராஷ்டிராவின் மற்ற நகரங்களிலிருந்து ஏராளமான அரசு மற்றும் தனியார் சுற்றுலாப் பேருந்துகள் தேவகிரி தௌலதாபாத் நகருக்கு இயக்கப்படுகின்றன.
படம் : Jonathanawhite

சுற்றிப் பார்க்க சிறந்த காலம்
தேவகிரி தௌலதாபாத்தின் முன் பனிக் காலத்திலும், பனிக் காலத்திலும் மிதமான வானிலையே நிலவும். இதனால் அக்டோபரிலிருந்து, மார்ச் வரையிலான காலங்களில் சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும். மேலும், இந்த காலங்களில் தௌலதாபாத் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, அது ஒரு மறக்க முடியாத அனுபவமாகவும் அமையும்.
படம் : Fouzanshaikhwiki



Click it and Unblock the Notifications




