» »சோழர்கள் பெங்களூர் வந்த கதை

சோழர்கள் பெங்களூர் வந்த கதை

Written By: Staff

டொம்லூர், பெங்களூர் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு முக்கிய இடம். எட்டு வருடங்களுக்கு முன்பு, அதாவது, புதிய பன்னாட்டு விமான‌ நிலையம் திறக்கப்படாத காலத்தில், (பழைய) விமான நிலையம் செல்லும் முக்கிய சாலையில் இருந்த‌ இடம் இந்த டொம்லூர். இப்போது விமான நிலையம் ஊரை விட்டு வெளியே போய்விட்டாலும், டொம்லூர், சில காரணங்களுக்காக‌ முக்கியத்துவம் பெறுகிறது.

முதலாவது: இந்திய விமானப் படை பிரிவு, ASC(Army Service Corps) - ராணுவ சேவைப் பட்டாளம், ராணுவத்தின் கமேண்டோ மருத்துவமனை என்று இந்திய பாதுகாப்பு படையின் பல பிரிவுகள் இங்கு இருக்கின்றன.

இரண்டாவது : டொம்லூருக்கு அருகில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.

இதைத் தாண்டி ஒரு சுற்றுலா பார்வையாளராக பார்க்கும்போது ஆயிரம் வருடத்திற்கு முன் நம் சோழர்கள் கட்டிய ஒரு பெருமாள் கோவில் இன்றும் டொம்லூருக்கு பெருமை சேர்க்கிறது.

சொக்கநாதசுவாமி கோவில்.

Chokkanathaswamy

Photo Courtesy : Eshwar.om

பெங்களூரில் மிகப் பழமையான கோவில்களில் ஒன்று இந்தக் கோவில். சோழர்களால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. டொம்லூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகேவுள்ள டிவீஎஸ் இரு சக்கர வாகன கடைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தெருவின் கடைசியில் சத்தமேயில்லாமல் இருக்கிறது இந்த ஆயிரம் வருட பழமையான கோவில். அதிகாரப்பூர்வமான தரவுகள் இல்லாததால் சோழர்களில் யார் கட்டியது என்று சரியாக கூறமுடியவில்லை. இருந்தும் ராஜ ராஜ சோழன் கட்டிய கோவில் என்று கோவிலை நிர்வகிக்கும் ட்ரஸ்ட் அமைப்பினர் கூறுகின்றனர்.

சோழர்கள், கிபி 10-12'ஆம் நூற்றாண்டில் தங்கள் சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விஸ்தரித்த போது பெங்களூரும் அதில் சேர்ந்தது. இப்போதுள்ள Yelahanka, அப்போது யெலஹன்க‌ நாடு என்று அழைக்கப்பட்டது. அந்த சமயத்தில் கட்டிய கோவில்தான் டொம்லூரில் உள்ள சொக்கநாதசுவாமி கோவில். சுவாரஸ்யமாக, சொக்கநாதசுவாமி என்று அழைக்கப்பட்டாலும் மூலஸ்தானத்தில் உள்ள கடவுள் விஷ்ணு.

inscription

Photo Courtesy : Eshwar.Om

கோவிலின் புறச்சுவரை சுற்றி வரும்போது ஆயிரம் வருட பழமையான தமிழ் கல்வெட்டுக்களை நீங்கள் காணலாம். டொம்லூர், அப்போது தோம்பலூர், தேசிமாணிக்கபட்டினம் என்று இரு பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது.

1992 ஆண்டில்தான் இந்த கோவிலின் பழமையான பெருமையறிந்து மறுசீரமைப்பு செய்திருக்கின்றனர். கோவிலின் சில குறிப்பிட்ட முனைகளில் தியானம் செய்தால் பிராண ஓட்டத்தை(Pranic Healing) குணப்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெருமாள் கோவில் என்பதால் சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகம் இருக்கும். மன அமைதிக்காக வர விரும்புவோர், கோவிலின் கட்டமைப்பை, கல்வெட்டுகளை ரசிக்க‌ விரும்பும் நபர்கள் ஞாயிறன்று வரலாம். ஆயிரம் வருட பழமையான நினைவுச் சின்னம், ஊருக்குள் இருந்தாலும், கோவிலுக்குள் இருக்கும் அமைதி, கல்வெட்டுகள் என எல்லாம் உங்களை தன்வசப்படுத்திவிடும்.

விஷ்ணு தட்டு இட்லிக் கடை.

கோவில் இருக்கும் தெருவின் ஆரம்பப் பகுதியில் இருக்கிறது விஷ்ணு தட்டு இட்லிக் கடை. காலை மற்றும் இரவு நேரங்களில் ஆவி பறக்கும் பெரிய இட்லிகள், சுள்ளென நாக்கை இழுக்கும் காரச் சட்னியோடு நமக்கு தருகின்றனர். இந்தக் கோவிலுக்கு செல்வதால் மனம் மற்றும் வயிறு இரண்டுமே திருப்தி அடையும் பாக்கியம் உங்களுக்கு இருக்கிறது.

டொம்லூருக்கு வர‌.

பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து மாரத்தஹள்ளி, ஒய்ட்ஃபீல்டு போகும் அனைத்து பஸ்களும் டொம்லூர் வழியாகத்தான் செல்லும்.