» »அபூர்வமான பாறை வடிவங்கள்!!!

அபூர்வமான பாறை வடிவங்கள்!!!

Written By: Staff

கனிமங்கள் அல்லது கனிமப்போலிகளின் சேர்க்கையின் போது உருவாவையே பாறைகள் ஆகும். இவற்றில் அடங்கியுள்ள கனிமங்கள், வேதியியல் சேர்க்கை, பரப்புத் தோற்றம் மற்றும் அவை உருவாகும் முறை என்பவற்றின் அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை தீப்பாறைகள், படிவுப் பாறைகள், உருமாறிய பாறைகள் என்பவையாகும்.

தீப்பாறைகள் உருகிய கற்குழம்பிலிருந்து உருவாவதோடு பாதாளப் பாறை, எரிமலைப்பாறை என இரு பிரிவுகளாக அறியப்படுகின்றன.

பாறைத் துகள்கள், கரிமப்பொருட் துணிக்கைகள், வேதிப்பொருள் வீழ்படிவுகள் (chemical precipitates) என்பவை படிப்படியாக ஓரிடத்தில் சேர்ந்து, பின்னர் அழுத்தப்படுவதன் மூலம் ஒன்று சேர்ந்து உருவாவதே படிவுப் பாறைகள் எனப்படுகின்றன.

தீப் பாறைகள், படிவுப் பாறைகள் உருவானபோது இருந்ததிலும் வேறான வெப்பநிலை மற்றும் அழுத்தச் சூழ்நிலைகளில் மாறுபடும்போது உருமாறிய பாறைகள் என்றாகின்றன.

இப்படியாக வெவ்வேறு வகைகளில் உள்ள பாறைகள் இயற்கையாகவே சில வடிவங்களை பெற்றுவிடுகின்றன. அந்த வகையில் தவளை, ஆமை போன்ற வடிவங்களில் ஆச்சரியப்படத்தக்க உருவங்களை கொண்ட பாறைகள் சிலவற்றை இங்கு காண்போம்.

டோட் ராக் (தவளைப்பாறை), மௌண்ட் அபு

டோட் ராக் (தவளைப்பாறை), மௌண்ட் அபு

ராஜஸ்தானின் மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தில் பிரசித்தமான சுற்றுலா அம்சமாக அறியப்படும் இந்த ‘டோட் ராக்' எனப்படும் தவளைப்பாறை ஸ்தலம் நக்கி ஏரிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஒரு தவளையைப்போன்று காட்சியளிக்கும் பிரம்மாண்ட பாறை அமைப்பு இங்கு அமைந்திருப்பதால இந்த இடத்திற்கு டோட் ராக் (தவளைப்பாறை) எனும் பெயர் வந்துள்ளது. டோட் ராக் தவிர இந்த இடத்தில் இதர பாறை அமைப்புகளான ஒட்டகப்பாறை, நந்திப்பாறை மற்றும் செவிலிப்பாறை போன்ற பாறை அமைப்புகளும் அமைந்துள்ளன. இந்தப்பாறை அமைப்புகளில் மலையேற்றம் போன்ற சாகசப் பொழுதுபோக்குகளிலும் பயணிகள் ஈடுபடலாம்.

படம் : Kondephy

ஆமைப்பாறை, ராய்சன்

ஆமைப்பாறை, ராய்சன்

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ராய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பீம்பேட்கா குகைகளின் பகுதியாக இந்தஆமைப்பாறை விளங்குகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக காற்றிலும், மழையிலும் கிடந்து இயற்கையாக ஒரு ஆமையின் வடிவத்தில் காட்சி தருகிறது இந்தப் பாறை.

படம் : Surohit

யானா

யானா

யானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சஹயாத்ரி மலைப் பகுதிகளில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த தனித்துவமான யானா பாறைகள் கர்நாடகாவின் கும்டாவிலிருந்து 29 கி.மீ தொலைவிலும், சிர்சியிலிருந்து 55 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

படம் : Doc.aneesh

பளிங்குக்கல் பாறைகள், ஜபல்பூர்

பளிங்குக்கல் பாறைகள், ஜபல்பூர்

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரின் பேடகாட் எனும் பகுதியில் இந்த பளிங்குக்கல் பாறைகள் காணப்படுகின்றன. இப்பளிங்குக்கல் பாறைகள், நர்மதா நதியின் இருமருங்கிலும் சுமார் 100 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கின்றன. சூரியனின் மின்னும் பொற்கதிர்கள் இந்த வெள்ளை மற்றும் பழுப்பு நிறப் பாறைகளின் மீது படும்போது இவை நதி நீரில் ஒரு நிழலுருவைப் படரச்செய்கின்றன. இக்காட்சி காணத் தெவிட்டாத எழில்மிகு காட்சியாகும். தண்ணென்ற நிலவொளி பாறைகள் மேல் விழும் அதே சமயத்தில் நதியிலும் பட்டு ஜொலிக்கும் போது பேடகாட் மற்றும் அதன் பளிங்குப் பாறைகள், பல மடங்கு அழகுடன் காணப்படுகின்றன.

அச்சமயத்தில் இங்கு படகுச் சவாரி செய்வது வாழ்வின் பொற்கணமாகும்.

படம் : Sandyadav080

கில்பர்ட் ஹில், மும்பை

கில்பர்ட் ஹில், மும்பை

மும்பையின் அந்தேரி பகுதியில் அமைந்திருக்கும் கில்பர்ட் ஹில் 200 அடி உயரம் கொண்டது. இந்தக் குன்று 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்து வெடித்து கிளம்பிய எரிமலைக் குழம்பிலிருந்து உருவானதாகும்.

படம் : Madhav Pai

ஃபாண்டம் ராக், வயநாடு

ஃபாண்டம் ராக், வயநாடு

ஃபாண்டம் ராக் என்பது இயற்கையாகவே மண்டையோட்டு வடிவத்தில் உருவாகியிருக்கும் ஒரு பாறை அமைப்பாகும். உள்ளூர் மக்கள் இதனை ‘சீங்கேரி மலா' அல்லது ‘தலைப்பாறை' என்று அழைக்கின்றனர். தத்ரூபமான ஒரு மனித மண்டையோடு நம்மை உற்று பார்ப்பது போன்று உருவாகியிருக்கும் இந்த மலைப்பாறை அமைப்பானது கேரளாவின் வயநாடு பகுதியில் அமைந்துள்ளது.

படம் : Vinayaraj

எரிமலைப்பாறைகள், செயிண்ட் மேரி தீவு

எரிமலைப்பாறைகள், செயிண்ட் மேரி தீவு

கர்நாடகாவின் மங்களூர் நகரிலிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள செயிண்ட் மேரி தீவில் தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை பாறைகள் ஏராளம் காணக்கிடைக்கின்றன. இதன் காரணமாக இந்தியாவில் இருக்கக் கூடிய 26 புவியியல் நினைவுச் சின்னங்களில் செயிண்ட் மேரி தீவும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

படம் : Man On Mission

தூண்பாறை, கொடைக்கானல்

தூண்பாறை, கொடைக்கானல்

தூண்பாறை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 400 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த தூண்களின் உச்சியில் இருந்து பார்த்தால் இயற்கை வனப்புடைய நிலங்களைக் கண்டு மகிழலாம். தூண் போன்ற வடிவமைப்பை கொண்டதால் இப்பெயர் பெற்ற இந்தத் தூண்களுக்குள்ள இடுக்குகள் மிகவும் ஆழமானது. எனவே இது மிக ஆபத்தான இடமாக கருதப்படுகிறது.

படம் : Dhanil K

மாமல்லபுரம் சமநிலை பாறை

மாமல்லபுரம் சமநிலை பாறை

மாமல்லபுரத்தில் காணப்படும் இந்த சமநிலை பாறை 'கிருஷ்ணாவின் வெண்ணைப்பந்து' என்று அழைக்கப்படுகிறது. பைசாவின் சாய்ந்த கோபுரம் போலவே எப்படா விழப்போகுது என்பது போன்றே தோற்றமளித்து கொண்டிருக்கிறது இந்தப் பாறை. இதே போன்ற பாறைகள் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரிலும், கன்ஹா தேசிய பூங்காவிலும் காணப்படுகின்றன.

படம் : Procsilas Moscas

தோரணவாயில் பாறை, திருமலா

தோரணவாயில் பாறை, திருமலா

ஆந்திரப்பிரதேசத்தின் திருப்பதி திருமலா பகுதியில் அமைந்துள்ள இந்தப் பாறை இயற்கையாகவே தோரணவாயில் அல்லது நுழைவாயில் போன்றதொரு தோற்றத்தை கொண்டது. இது உலகிலுள்ள மிகப்பழமையான தோரணவாயில் பாறைகளில் ஒன்றாகும்.

படம் : B.Sridhar Raju

சமநிலை பாறை, ஜபல்பூர்

சமநிலை பாறை, ஜபல்பூர்

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள சமநிலைப் பாறைகள் நிஜத்தில் ஒரு உன்னதமான புவியியல் அற்புதமாகும். இது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் உண்டான எரிமலைக் குழம்பிலிருந்து வெடித்து சிதறிய மேடுபள்ளமான பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் மற்றும் புவியியல் ஆய்வாளர்களால் எவ்வாறு இப்பாறைகள் பல நூறு ஆண்டுகள் எந்தவொரு அசைவுமின்றி நிலைத்திருக்கின்றன என்று தெளிவாகக் கூற முடியவில்லை. ஆனால், இவற்றின் எடை, இட அமைப்பு ஆகியவற்றுடன், 1997-ஆம் ஆண்டில் ஜபல்பூரை உலுக்கிய நிலநடுக்கத்தைக் கூட தாங்கி நிற்கக்கூடிய திறனை இப்பாறைகளுக்கு அளித்த புவியீர்ப்பு சக்தியும் சேர்வதனாலேயே இவை இதே இடத்தில் நிலைபெற்றிருக்கலாம் என்று அனுமானித்துள்ளனர்.

படம் : Mityrocks

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்