சௌராஷ்டிரா என்பது தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதிதான வார்த்தை கிடையாது. நூற்றாண்டுகளுக்கு முன் குஜராத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறிய மக்களை சௌராஷ்டிரர்கள் என்று அழைக்கின்றனர். ஆனால் இன்று, குஜராத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான கலாச்சார முக்கியத்துவத்தையும், பிணைப்பையும், ஒற்றுமையையும் பறை சாற்றும் விதமாக குஜராத்தில் 'சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்' துவங்கியுள்ளது. இந்த சங்கமத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து 3000 பேர் சிறப்பு ரயில் மூலம் குஜராத் செல்கின்றனர். இந்த இரண்டு வார கால நிகழ்வு ஏப்ரல் 17 முதல் 30 வரை சோம்நாத்தில் நடைபெறும். இதனால் நமக்கு என்ன பலன் என்று தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

காசி தமிழ் சங்கமத்தைத் தொடர்ந்து சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்
தமிழகத்துக்கும், உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசு காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தியது. அதே போல தமிழகத்துக்கும், குஜராத்துக்கும் இடையேயான கலாச்சார தொடர்புகளை கொண்டாடும் வகையில் 'சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்துகிறது. தமிழ்நாட்டிலிருந்து 3,000 மக்கள் 'கலாசாரப் பரிமாற்றத்திற்காக' பிரதமர் மோடியின் சொந்த மண்ணான குஜராத் செல்லவிருக்கின்றனர்.
தமிழகத்திற்கு வருகை தந்த சௌராஷ்டிரர்கள்
600 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பு படையெடுப்புகளின் விளைவாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராவிலிருந்து இடம்பெயர்ந்து, மதுரையைச் சுற்றியுள்ள தமிழ்நாட்டின் பகுதிகளில் புதிய குடியேற்றங்களை உருவாக்க நிர்பந்திக்கப்பட்டனர், இப்போது தமிழ் சௌராஷ்டிரியன் என்று அவர்கள் அழைக்கப்படுகின்றனர். மக்கள் தங்கள் மூதாதையர் தாயகத்துடன் மீண்டும் இணையவும், தொழில், கைவினைப் பொருட்கள், கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட தலைப்புகளை ஆராயவும் ஒரு சிறப்பு நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாதித்த சௌராஷ்டிரர்கள்
2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 20 லட்சம் சௌராஷ்டிர மக்கள் வாழ்கின்றனர். இந்தச் சமூகத்தினரைத் தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்திருக்கிறது. திருக்குறளை சௌராஷ்டிராவில் மொழிபெயர்த்த கவிஞர் சங்குராம் கூட மதுரையில் வாழ்ந்தவர் தானாம். வெங்கட ரமண பாகவதர், பாடகர் T.M.சௌந்தரராஜன், நடிகை - வெண்ணிற ஆடை நிர்மலா உட்பட பல கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இது மட்டுமின்றி அவர்கள் அரசியல், கல்வி, சினிமா, விளையாட்டு என பல துறைகளில் சாதித்து வருகின்றனர்.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் என்ற பெயரில் இரு வேறுபட்ட தேசங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் ஒன்றிணைக்கும் அழகான நிகழ்வை குஜராத் நடத்தவுள்ளது. இந்த இரண்டு வார கால நிகழ்வு ஏப்ரல் 17 முதல் 30 வரை சோம்நாத்தில் நடைபெறும். இந்த விழா தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிராவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இரு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களிடையே வழக்கமான மற்றும் மேம்பட்ட தகவல்தொடர்புகளை ஊக்குவிக்கும் ஒரு சிறப்புச் செயலாகும்.
மதுரையில் இருந்து தினமும் சிறப்பு ரயில்கள்
இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் குஜராத்துக்கு வரும் என்று மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் ருஷிகேஷ் படேல் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 14ம் தேதி முதல் மதுரையில் இருந்து தினமும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட விருந்தினர்கள் சுமார் 3000 பேரை இது ஏற்றிச் செல்கிறது. அதே போல நேற்று தொடங்கிய இந்த விழாவில் கலந்துக் கொள்ள தமிழகத்தில் இருந்து சௌராஷ்டிர மக்கள் குஜராத்திற்கு சென்றனர்.

பிராமாண்டமாக துவங்கிய விழா
நேற்று தொடங்கிய இதன் தொடக்க விழாவில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலாச்சார பாதுகாப்பு, கல்வி, சேவை, வரலாறு ஆகியவை குறித்து இந்த நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
இலவச சுற்றுலா
ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தொடங்கி தினமும் 288 பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு குழுவாக தங்கள் பயணத்தை மேற்கொள்வார்கள். இரண்டு நாள்கள் ரயில் பயணத்திற்குப் பின், சோம்நாத், துவாரகா, ஏக்தா நகர், வதோரா போன்ற இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கிருக்கும் கோவில்கள், வரலாற்றுத் தளங்கள், உலகின் மிக உயரமான சா்தார் வல்லபாய் படேல் - ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity), இயற்கைச் சூழல்கள் மற்றும் கலாசாரங்களை மக்கள் பார்வையிடுவார்கள். இதுதவிர சில சிறப்பு நிகழ்ச்சிகளையும் குஜராத் அரசாங்கம் சௌராஷ்டிர மக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கும் இந்த பயணத்தில் கலந்துக் கொண்டு தமிழ் சங்கமத்தை பார்வையிட வேண்டும் என்று ஆசையாக உள்ளதா?



Click it and Unblock the Notifications






