சென்னை பூமத்திய ரேகைக்கு அருகிலேயும், கடலோரமாகவும் அமைந்துள்ளதால் வருடத்தின் பெரும்பாலான நாட்களில் வெப்பமாகவே இருக்கிறது. அதுவும் கோடை என்றால் சொல்லவே வேண்டாம். கத்தரி வெயில் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, ஆனால் அதற்குள்ளேயே சென்னையின் வெப்பத்தை நம்மால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் ஒரு ட்ரிப் சென்றால் நன்றாக இருக்கும், ஆனால் அதிக தூரமும் செல்ல முடியாத சூழலில் இருக்கிறீர்களா? சென்னைக்கு பக்கத்திலேயே ஒரு நாளில் சுற்றிப் பார்த்துவிடக் கூடிய குளிர்ச்சியான இடங்களின் லிஸ்ட் இதோ!

சென்னைக்கு அருகிலுள்ள குளிர்ச்சியான இடங்கள்
சென்னை வெப்பமண்டல கடலோர பகுதியாக இருப்பதால் எப்பொழுதுமே சூடாகத்தான் இருக்கும். இந்து கொளுதுக்கின்ற வெயிலில் இருந்து விடுப்பு எடுத்து சென்னைக்கு அருகில் இருக்கும் அழகிய குளிர்ச்சியான இடங்களுக்கு சென்று வந்தால் சூப்பராக இருக்கும் அல்லவா! இவையாவும் சிம்லா ஊட்டி போன்ற மலை வாசஸ்தலம் அல்ல. ஆனால் வனப்பகுதிகளுடன் அருவி, காடுகள் நிறைந்த அழகான பகுதிகள். இந்த இடங்களுக்கு காலையில் சென்றால் மாலை வீட்டிற்கு வந்து விடலாம். எந்தெந்த இடங்கள் என்று தெரிந்துக் கொள்வோமா?

மாமண்டூர் காடுகள்
எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனாந்திரம், பச்சை நிற அழகிய தெளிவான நீர், கூழாங்கற்கள் பாதை என இந்த இடம் பார்ப்பதற்கு ஏதோ நாம் அந்தமானில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. ஆனால் இந்த இடம் சென்னையில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் சென்னை - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இது சரியான சாய்ஸ் ஆகும். இந்த வசீகரமான காடுகள் ஆந்திர பிரதேச வனத்துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு பாதுக்காக்கப்பட்டு வருகிறது. சிறு சிறு ஓடைகள், குளங்கள், நீர்வீழ்ச்சி, இனிமையான வானிலை என இந்த இடம் மிகவும் குளுமையாக இருக்கிறது.

உப்பலமடுகு/ தடா
அடிக்கிற வெயிலுக்கு இதமா ஒரு பைக் ரைடு சென்று, ஜில்லுன்னு மேலே இருந்து விழுற அருவியில ஆனந்தமா நீந்தி குளிச்சு, ஓய்வெடுத்துட்டு வந்தா ரொம்பவும் நல்லா இருக்கும் இல்லையா! தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி சென்னையில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி ஒரு அடர்ந்த காட்டில் அமைந்துள்ளதால் இங்கு ட்ரெக்கிங் செய்வது மிகவும் பேமஸ். மொத்த மலையேற்றம் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் ஆகும், வழியில் பல குளங்கள், சுற்றிலும் நல்ல பசுமை போர்வையுடன் அந்த காட்சிகள் யாவும் மனதிற்கு ஒரு வித இதமான உணர்வை தரும்.

காஞ்சனகிரி மலைகள்
சென்னையிலிருந்து வெறும் 100 கிமீ தொலைவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அழகிய இடம் சென்னை வாசிகளிடையே அதிகம் பிரபலம் ஆகாத இடம் என்று தான் சொல்ல வேண்டும். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று சமவெளிகளும், குன்றுகளும், மலைகளும் நாம் ஏதோ ஒரு ஹில் ஸ்டேஷனில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. இந்த மலையில் எங்கு நின்றாலும் அழகிய காட்சிகளே கண்களுக்கு தென்படுகிறது. சாலையில் உங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு நீங்கள் மலையேற்றம் செய்யலாம். மலை உச்சியை அடைந்த பிறகு, நீங்கள் மலை ஏறிய களைப்பே தெரியாமல் போகும் அளவுக்கு அழகிய காட்சிகள் உங்கள் மனதை மயக்கிவிடும். இந்த இடம் ஒரு சரியான பிக்னிக் ஸ்பாட் ஆகும்.

கைலாசகோணா நீர்வீழ்ச்சி
சென்னையிலிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள கைலாசகோணா நீர்வீழ்ச்சி திருப்பதிக்கு அருகிலுள்ள நகரி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. கைலாசகோனா நீர்வீழ்ச்சியில் உள்ள நீர் படிகத் தெளிவானது, மேலும் தாதுக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் இருந்து மேலே பார்க்கும் போது ஒரு பிரமிக்க வைக்கும் உணர்வு ஏற்படுகிறது. சென்னையிலிருந்து பூந்தமல்லி ஹைவே வழியாகவும், திருவள்ளூர் ஹைவே வழியாகவும் கைலாசகோணாவை அடையலாம்.

நாகலாபுரம் மலைகள்
சென்னையிலிருந்து 90 கிமீ தொலைவிலும் ஊத்துக்கோட்டையில் இருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள நாகலாபுரம் நீர்வீழ்ச்சி சென்னைக்கு அருகில் இருக்கும் அழகிய குட்டி ஹில் ஸ்டேஷன் என்றே சொல்லலாம். பேருந்து, ரயில் போன்ற வசதிகள் எல்லாமும் மிக தூரத்தில் இருப்பதால் நீங்கள் உங்கள் சொந்த வாகனங்களில் வருவது மிக நல்லது. 5 அருவிகள் கொண்ட நாகலாபுரம் நீர்வீழ்ச்சிகள் ஒவ்வொன்றை அடைவதற்கும் குறைந்தபட்சம் 20 முதல் 25 நிமிடங்கள் ஆகிறது.

ஏலகிரி
மற்ற இடங்களை விட இந்த இடம் சென்னையிலிருந்து அதிக தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 220 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தை அடைய குறைந்தது 3 மணி நேரம் ஆகும். ஜலகம்பாரல் நீர்வீழ்ச்சி, நிலவூர் ஏரி, தாவரவியல் மற்றும் ரோஸ் கார்டன்கள் ஆகியவை எல்லாம் மிகவும் ரம்மியமாக இருக்கின்றது. ஏலகிரிக்கு நீங்கள் பொது பேருந்து அல்லது ரயிலில் அணுகலாம்.
சதாசிவகோணா நீர்வீழ்ச்சி
சென்னையிலிருந்து 106 கிமீ தொலைவில் அமைந்துள்ள சதாசிவகோணா நீர்வீழ்ச்சி சென்னைக்கு அருகிலுள்ள மற்றுமொரு அழகிய இடமாகும். உயரமான மலைச் சிகரங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் அழகிய நீர்வீழ்ச்சி ஆகியவற்றைக் கொண்ட இந்த இடம் அதன் தனித்துவமான அழகில் நம் மனதைக் கொள்ளையடிக்கிறது.
மேற்கூறிய இடங்கள் எவற்றிற்கும் பொது போக்குவரத்தில் செல்வதை விட உங்கள் சொந்த பைக் அல்லது காரில் சென்றால் பயணம் சுலபமாக இருக்கும். மாற்றுத்துணி, உணவு, தின்பண்டம், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்!



Click it and Unblock the Notifications





