தமிழகத்தின் அணைக் கட்டுமானத்தை குறித்து பேசும்போது அது நம்மை 2000 ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்று காலத்துக்கு அழைத்துச் செல்கிறது.
அதாவது நீர்ப்பாசன பொறியியல் துறையில் உலகுக்கே தமிழர்களே முன்னோடியாய் திகழ்வதற்கு காரணமாக கரிகாலன் கட்டிய கல்லணையிலிருந்தே அணைகள் பற்றிய ஆராச்சியை துவங்க வேண்டும்.
இந்தக் கல்லணை கட்டப்படுவதற்கு முன்னர் காவிரி தன் வடகரையை உடைத்துக்கொண்டு கொள்ளிடத்திற்கு வழிந்து விடுவதும், வெள்ளம் வடிந்தபின் உழவர்கள் உடைந்த கரையைச் செப்பனிடுவதும், அடுத்த வெள்ளத்தில் கரை மீண்டும் உடைந்து விடுவதும் மிகச் சாதாரணமாக நடந்துகொண்டிருந்திருக்கிறது.
இவற்றையெல்லாம் நீக்குவிக்கும் நோக்கத்துடன் கரிகாலன் திட்டமிட்டுக் கல்லணையை அமைத்த பொறியியல் ஆற்றல் வியப்பை உண்டுபண்ணுகிறது.
இப்படியாக தொடங்கிய தமிழ்நாட்டின் அணைக் கட்டுமானம் இன்று நவீன தொழிற்நுட்பம் காரணமாக பலவேறு நிலைகளை எட்டியுள்ளது.
அந்த வகையில் இந்த அணைகளை சுற்றித் தோட்டம் அமைப்பது, படகுப் போக்குவரத்து என்று தமிழக அரசு அணைகளை சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றியுள்ளன.

பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை அமைந்திருக்கும் இடம் மலைகள் சூழ இயற்கையழகுடன் காட்சி தருவதால் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பவானிசாகர் அணை இருக்கும் இடத்தில் முன்பு ஒரு அரண்மனை இருந்ததாகவும், இப்போதும் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறையும்போது அந்த புதைந்துபோன அரண்மனையின் மேல் பகுதி கண்ணுக்கு தெரியும் என்றும் ஒரு கதை இப்பகுதியில் சொல்லப்படுகிறது.

கல்லணை
உலகின் மிகப்பழமையான அணையாக கருதப்படும் கல்லணை, தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அணை சோழப்பேரரசர் கரிகாலனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு காவிரிஆற்றின் குறுக்காக கட்டப்பட்டது. இது திருச்சி மற்றும் தஞ்சை பகுதிகளில் வசிக்கும் மக்கள் அல்லது அந்த இடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆகியவர்களுக்கு மிகச் சிறந்த பொழுதுபோக்கு ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.
படம் : drrfqq

மேட்டூர் அணை
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை காவிரி ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகும். இது அணையைக்கட்டிய ஸ்டேன்லிஎன்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணையில் தயாரிக்கப்படும் மின்சாரம் தருமபுரி மாவட்டும் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். அதுமட்டுமல்லாமல் பூங்கா, நீர் மின்சார நிலையங்கள் மற்றும் சுற்றிக் காணப்படும் மலைகள் ஆகியவை மேட்டூர் அணையை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழச்செய்துகொண்டிருக்கின்றன.
படம் : Vvenka1

ஆழியார் அணை
பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும், வால்ப்பாறையிலிருந்து 38 கி.மீ தூரத்திலும் ஆழியார் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 81 அடி உயரத்தோடு, சிறப்பான பொறியியல் தொழில்நுட்பத்துடன் 1959 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டத்தாகும். இங்கு எண்ணற்ற திரைப்படங்கள் படமாகப்பட்டுள்ளன. அவற்றில் முத்துராமன், ரவிச்சந்திரன் நடித்த காதலிக்க நேரமில்லை படம் மிகவும் பிரபலம்.
படம் : Siva301in

வைகை அணை
வைகை அணை தேனி மாவட்டத்தில், ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்வதோடு மதுரையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்த அணையில் படகுச் சவாரி செய்யும் வசதியும் இருப்பதால் பிரசித்திபெற்ற பிக்னிக் ஸ்தலமாகவும் வைகை அணை அறியப்படுகிறது.

கொடிவேரி அணைக்கட்டு
ஈரோட்டிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் கொடிவேரி அணைக்கட்டு அமைந்திருக்கிறது. மைசூர் மகாராஜாவால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு மிகப்பெரிய பரப்பளவில் அழகுற காட்சி தரும் இந்த அணைதான் இந்தப் பகுதி மொத்தமுமே வளமாக இருப்பதற்கு காரணமாகும். இந்த அணையில் பரிசல் சவாரி செய்வது சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். அதோடு எண்ணற்ற திரைப்படங்கள் இந்த அணைப்பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
படம் : Magentic Manifestations

கிருஷ்ணகிரி அணை
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கு இடையில் நீர்த்தேக்கத் திட்டம் தொடங்கும் நோக்குடன் 1958-ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் இயற்கை சூழலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள செயற்கை தோட்டமும் அலுத்துப் போன நகர வாழ்க்கைக்கு மாற்றாக ரம்மியமான அனுபவத்தை தருவதால் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு மழைக்காலம் முடியும் தருவாயில் அணைக்கட்டின் மேல் விளிம்பு வரை நீர் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். எனவே நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்கள் கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்றவையாகும்.
படம் : TheZionView

சோலையார் அணை
வால்பாறையிலிருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் மேல் சோலையார் அணை ஆசியாவிலேயே 2-வது ஆழமான அணையாக கருதப்படுகிறது. இந்த அணையின் பிரம்மாண்டமான தோற்றமும், பீரிட்டு வரும் நீரும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதன் அமைதியான இருப்பிடத்தின் காரணமாக ஆண்டுதோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
படம்

சாத்தனூர் அணை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது சாத்தனூர் அணை. இந்தப் பகுதியில் முதலைப்பண்ணை ஒன்று அமைந்திருப்பதும், அழகான தோட்டம் அமைக்கப்பட்டிருப்பதாலும் சாத்தனூர் அணை சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.
படம் : Jeganila

பேச்சிப்பாறை அணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் பேச்சிப்பாறை அணை அமைந்துள்ளது. கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ அழகுடன் காட்சி தருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
படம் : Infocaster

முக்கொம்பு அணை
திருச்சியிலிருந்து 18 கி.மீ தொலைவில் காவேரி மற்றும் கொள்ளிடம் நதிகளின் குறுக்கே முக்கொம்பு அணை கட்டப்பட்டுள்ளது. இங்கு கேளிக்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மீன்பிடித்தல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. இதன் விளைவாக இந்த இடமானது மிகப்பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், வார இறுதியில் நேரத்தை செலவிடுவதற்கு ஏற்ற பிக்னிக் பகுதியாகவும் திகழ்ந்து வருகிறது.

அமராவதி அணை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமராவதி அணை அமைந்துள்ளது. இங்கு முதலைப் பண்ணை, மீன் பண்ணை, அணையின் முன்பு அமைந்துள்ள அழகிய பூங்கா, சிறுவர்களுக்கான பூங்கா ஆகியவை அமையப்பெற்றுள்ளன. அதோடு எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் அமராவதி அணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படகுப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது.
படம் : Marcus334



Click it and Unblock the Notifications








