» »பெங்களூரின் திருவல்லிக்கேணி

பெங்களூரின் திருவல்லிக்கேணி

Written By: Staff

பெங்களூரின் பழமையான இடங்களில் அல்சூருக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அல்சூர் இருக்கும் இடமே ஒரு சுவாரஸ்யமான முரண். அல்சூரை சுற்றி இருக்கும் இடங்கள் எல்லாம் தற்காலத்திற்கு மாறிவிட்ட நிலையல் அல்சூர் மட்டும் இன்னும் 90களிலேயே இருக்கிறது.

ஒரு புறம்: பெங்களூரின் மிகப் புகழ்பெற்ற சாலையான‌ எம்.ஜி. ரோடு- எண்ணற்ற பப்புகள், சினிமா தியேட்டர்கள், காஃபி ஷாப்புகள்; இன்னொரு புறம்: உயர் நடுத்தர வர்க்கத்தினர் வாழும் கேம்ப்ரிஜ் ரோடு. ஆனால், அல்சூர் மட்டுமே இதில் இந்த பாதிப்பும் இல்லாமல் தன் பாரம்பரியத்தை அப்படியே வைத்திருக்கிறது. எப்படி திருவல்லிக்கேணியைச் சுற்றி ராயப்பேட்டை, மவுண்ட் ரோடு, எண்ணற்ற தியேட்டர்கள் இருந்தும் திருவல்லிக்கேணி இன்னும் பெரிதாக மாறவில்லையோ அது போல.

அல்சூரின் சிறப்பு பழமைவாய்ந்த தமிழ்ச் சாய்ல் கொண்ட கோவில்கள் - அல்சூர் சுப்ரமணியன் கோவில், சோழர் காலத்து சோமேஸ்வர் சிவன் கோவில், அம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில். பெங்களூரில் மற்ற இடங்களில் பல கோவில்கள் இருந்தாலும் இங்கிருக்கும் கோவில்களின் நேர்த்தி, சிற்பங்களின் அழகு, பெரிய பிரகாரங்கள் அருகில் வர முடியாது.

Murugan_Temple

அல்சூர், தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி. அதனால்தான் என்னவோ 800 வருடமாக இருக்கிறது அல்சூர் முருகன் கோவில். திருவல்லிக்கேணியைப் போலவே குறுகலான தெருக்கள், நடப்பவர்களுக்குகூட வழியில்லாமல் இரு சக்கர வாகனங்கள், சகட்டு மேனிக்கு பார்க் செய்யப்பட்ட வண்டிகள், குப்பைகளில் உணவைத் தேடி கொண்டிருக்கும் மாடுகள் என கசமுசாவென இருக்கும் இடம்.

தமிழர்க‌ளையடுத்து சமணர்கள் கணிச‌மாக வாழ்கின்றனர். அவர்களின் தொழில் வியாபாரம் - நகை கடைகள், வட்டிக் கடைகள். ஜெயின மக்கள் இருப்பதன் வசதி அல்சூரில் இருக்கும் ஏராளமான சாட் உணவகங்கள். அற்புதமான சமோசாக்கள், கச்சோரிக்கள் கிடைக்கும்.

இது போக மளிகைக் கடைகள், காய்கறி மார்கெட், தட்டச்சு இன்ஸ்டியுட்டுகள், எண்ணை விற்கும் கடைகள், சிறு சிறு துணிக் கடைகள், நகைகள் பாலிஷ் செய்யும் கடைகள், டீக்கடைகள், பூக்கடைகள், வழக்கொழிந்த போன பாட்டு கேஸட் கடை என சிறு நகரத்தின் கடைகள் மொத்தமாய் ஒரே இடத்தில் இருக்கும் பகுதி இந்த அல்சூர். ஒரு தமிழ் வழி பள்ளிகூட இருக்கிறது.

someshwar

Photo Courtesy : Dineshkannambadi

அல்சூரில் தோன்றுவதெல்லாம் ஒன்றுதான் ஆங்கிலத்தில் Full of Life என்று சொல்வார்கள் - என்னதான் நெருக்கடி, குறுகலான தெருக்கள் இருந்தாலும் கடைகள், பஜார்கள், கோவில்கள் என்று மிகவும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு பகுதி.

பேசும்படத்தில் கமல் எப்படி பஜார் போன்ற இடத்திலிருந்துவிட்டு அமைதியான இடத்தில் அவரை பொருத்திக்கொள்ள சிரமப்படுவாரோ அதுபோல் அல்சூரில் இருந்த ஒருவர் பெங்களூரின் மற்ற பகுதியில் எளிதாக இணைத்துக்கொள்ள முடியாது.

Read more about: halasuru, ulsoor, bangalore