» »இந்தியாவிலுள்ள வினோதமான ஹிந்து கோயில்கள்!

இந்தியாவிலுள்ள வினோதமான ஹிந்து கோயில்கள்!

Written By:

இந்தியாவை நோக்கி வெளிநாட்டவரை இழுக்கச்செய்வதிலும், அவர்கள் நம் நாட்டை குறித்து பெருமையாக கருதுவதற்கும் இந்தியாவில் உள்ள கோயில்களும், அவற்றின் கட்டிடக் கலைகளும் பெரிதும் பங்கு வகிக்கின்றன.

அந்த வகையில் எண்ணற்ற கோயில்கள் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டி இன்றும் நம் கலாச்சாரத்துக்கும், கலைக்கும் எடுத்துக்காட்டாக நின்றுகொண்டிருக்கின்றன.

அப்படி கட்டிடக்கலைக்கு பெயர்போன கோயில்கள் இருக்கும் இதே மண்ணில் சில வினோதமான கோயில்களும் இருக்கின்றன.

அவை ஏன் விநோதமாக பாக்கப்படுகின்றன, அப்படி என்ன வித்தியாசத்தை அந்த கோயில்கள் கொண்டிருக்கின்றன என்று பார்ப்போம்.

புல்லட் பாபா கோயில்

புல்லட் பாபா கோயில்

ஒரு புல்லட் மோட்டார் சைக்கிளை கடவுளாக மக்கள் வணங்கும் அதிசயத்தை காண நீங்கள் ராஜஸ்தானின் ஜோத்பூருக்குத்தான் வரவேண்டும். இந்த வினோதமான ஆலயம் ஜோத்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் சோட்டிலா எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது. அதாவது 1991-ஆம் ஆண்டு ஓம் சிங் ரத்தோர் என்பவர் தன் புல்லட்டில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு மரத்தில் மோதி இறந்துவிட்டார். அதன்பிறகு அந்த வாகனம் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மறுநாள் அது விபத்து நடந்த மரத்தருகே நின்றுகொண்டிருந்ததாம். எனவே அந்த புல்லட் திரும்பவும் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டு சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் மறுநாள் அதே மரத்தருகே சென்றுவிட்டதாம் அந்த புல்லட் வண்டி. அன்றிலிருந்து ஓம் பன்னா அல்லது புல்லட் பாபா ஆலயம் என்று அந்த மரத்தையும், புல்லட்டையும் அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகிறார்கள். யார் இந்த புல்லட் பாபாவை வணங்கினாலும் அவர்கள் பயணம் பாதுகாப்பானதாக அமையும் என்று நம்பப்படுகிறது.

படம் : Sentiments777

ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆலயம்

ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆலயம்

எஸ்.ஜே.சூர்யா காமெடியில வரமாதிரி 'இருக்கு ஆனா இல்லை' அப்படி ஒரு அதிசயமான கோயில் இது. அதாவது அரபிக்கடல் ஓரத்தில் இருக்கும் இந்தக் கோயில் நீர்மட்டம் குறைவாக இருக்கும்போது கண்ணுக்கு தெரிவதோடு பக்தர்களும் கோயிலுக்குள் சென்று தரிசிக்கலாம். அதுவே கடலின் நீர்மட்டம் அதிகரித்தால் பாதி ஆலயம் கடலில் மூழ்கிவிடுவதோடு தரிசனமும் செய்ய முடியாது. இந்தக் கோயில் குஜராத்தின் வதோதரா நகரிலிருந்து 40 மைல் தொலைவிலுள்ள கவி கம்போய் என்ற சிறிய நகரில் அமைந்திருக்கிறது.

படம் : sgbhagwat

காலபைரவநாத் கோயில்

காலபைரவநாத் கோயில்

வருடத்தின் 365 நாளும், நாளின் 24 மணிநேரமும் குடம் குடமாக, லிட்டர் லிட்டராக ஒயின் அருந்தும் கடவுளை எங்காவது பார்த்திருக்கீர்களா?! மத்தியப்பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் நகரின் காவல் தெய்வமாக கருதப்படும் காலபைரவநாத் சுவாமிதான் அப்படி லிட்டர் லிட்டராக ஒயின் அருந்துவது. இங்கு வரும் பக்தர்கள் ஒயினையே கடவுளுக்கு படைப்பதோடு, அந்த ஒயினே பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

படம் : Manjari Shrestha

கர்ணி மாதா கோயில்

கர்ணி மாதா கோயில்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஒரு எலிக்கோயிலில்தான் ராக்கெட்டை கடத்தி வைத்திருப்பார்கள். அதேபோல ராஜஸ்தானின் தேஷ்நோக் கிராமத்தில் அமைந்திருக்கும் கர்ணி மாதா கோயிலும் எலிக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் கபாஸ் என்று அழைக்கப்படும் 20,000-க்கும் மேற்பட்ட எலிகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது. இங்குள்ள எலிகள் அனைத்தும் 'சரண்ஸ்' எனும் பெயர்கொண்ட கர்ணி மாதாவின் எதிர்கால குழந்தைகளின் ஆன்மாக்களை சுமந்து கொண்டு திரிவதாக தேஷ்நோக் கிராமத்தை சேர்ந்த மக்கள் நம்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் பக்தர்களின் கால் பாதங்களில் இந்த எலிகளின் ஸ்பரிசம் படுவது நற்பேற்றின் அடையாளமாக நம்பப்படுகிறது.

படம் : Shakti

சைனீஸ் காளி கோயில்

சைனீஸ் காளி கோயில்

கொல்கத்தாவில் உள்ள இந்த சைனீஸ் காளி கோயிலில் நூடுல்சும், சாப்ஸியுமே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஏனென்றால் சீன தேசத்து மக்கள் குடியிருக்கும் சைனாடவுனில் இந்த கோயில் அமைந்திருக்கிறது. அதோடு புத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில் ஹிந்து தெய்வமான காளிக்கு கோயில் இருப்பதும், அது இவ்வளவு பிரசித்தமாக அறியப்படுவதும் அதிசயம்தான்.

படம் : Sankarrukku (காளிகாட் கோயில், கொல்கத்தா)

பிரம்மா கோயில்

பிரம்மா கோயில்

ராஜஸ்தானின் புனித நகரமான புஷ்கரில் உள்ள இந்த பிரம்மா கோயில்தான் உலகத்திலேயே பிரம்மாவுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலாகும். 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் உள்ள பிரம்மனுடைய சிலை, இடதுபுறம் இளைய மனைவி காயத்ரியுடனும், வலதுபுறத்தில் சாவித்திரியுடனும், நான்கு தலைகளுடன் தாமரை மலரில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

படம் : Vberger