கோடை இன்னும் ஆரம்பிக்கவில்லை, குளிரும் சற்று குறைந்து விட்டது. பெரிதாக வெயில், குளிர், மழை எதுவும் இல்லை, இந்த நேரம் தான் தமிழ்நாட்டில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருவதற்கான சரியான நேரம். ஏனென்றால் கோடை ஆரம்பித்தால் அந்த இடங்களில் எல்லாம் வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாகவே இருக்கும்.

அதில் மாட்டிக் கொள்ளாமல் தமிழ்நாட்டின் இந்த அழகிய சுற்றுலாத் தலங்களை கோடை வெயில் வருவதற்கு முன்னரே பார்த்து விட்டு வரலாமே! உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பம் அல்லது பெற்றோர்களுடன் சீக்கிரம் ஒரு ட்ரிப் பிளான் பண்ணி கீழ்க்கண்ட இடங்களுக்கு சென்று விட்டு வாருங்கள்!

சென்னை
பண்பாட்டுச் செழுமையான தலைநகரமான சென்னை, கலாச்சார வரலாறு, மரபுகள் மற்றும் கலைப் படைப்புகளில் ஆழமான இடமாக உள்ளது. பழங்கால கோவில்கள் முதல் நவீன மால்கள் வரை, கடற்கரைகள் முதல் பரபரப்பான வீதிகள் வரை, கட்டிடக்கலை அற்புதங்கள் முதல் வகை வகையான உணவுகள் வரை சென்னை சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. நீங்கள் வெயிலில் சிக்கி கொள்ளாமல் சென்னையின் மரினா பீச், மியூசியம், வள்ளுவர் கோட்டம், தக்ஷினசித்ரா, வண்டலூர் உயிரியல் பூங்கா, பிர்லா பிளானெட்டோரியோம், கபாலீஸ்வரர் கோயில் உட்பட பல கோயில்களைக் கண்டு களித்துவிட்டு வாருங்கள்.

மதுரை
தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரான மதுரை, இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இந்த "தாமரை நகரத்தின்" பண்பாடும் கலாச்சாரமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கோடை நேரத்தில் மதுரை சுற்றுலா செல்வது சரியான யோசனை இல்லை. ஆதலால் இந்த மாதமே ட்ரிப் பிளான் பண்ணி உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோயில், திருமலை நாயக்கர் மஹால், அழகர் கோயில், சமணர் மலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, பல்வேறு நீர்வீழ்ச்சிகளை பார்த்து ரசித்திடுங்கள். முக்கியமாக மதுரை பேமஸ் ஜிகிர்தண்டா, பரோட்டா உள்ளிட்டவரை சுவைக்க மறக்காதீர்கள்.

தூத்துக்குடி
அழகான கடற்கரை, கண்கவர் வனவிலங்கு சரணாலயம் முதல் ஏராளமான கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் வரை, எல்லாவற்றையும் வழங்குவதால் தூத்துக்குடி தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. பைசிலிக்கா ஆஃப் மாலேடி ஆஃப் ஸ்னோஸ், ஹரே தீவு, முத்து நகர் கடற்கரை, திருச்செந்தூர் முருகன் கோவில், கழுகுமலை, கட்டபொம்மன் நினைவாலயம், எட்டயபுரம் அரண்மனை, தூத்துக்குடியின் உள்ளூர் சந்தைகள் ஆகியவை கட்டாயம் பார்வையிட வேண்டிய இடங்களாகும்.

திருச்சி
திருச்சி தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர, வேகமாக வளர்ந்து வரும் நகரம் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். திருச்சி மிகவும் தூய்மையாக இடமாக பல கண்கவர் சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. இந்த இடங்கள் ஒவ்வொன்றும் அவற்றுடன் கொண்டு வரும் அற்புதமான தனித்துவத்தாலும் உங்களைக் கவர்கிறது. 2,000 வருடங்கள் பழமையான கல்லணை, உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில், முக்கொம்பு ஆகியவற்றை நீங்கள் இங்கே கட்டாயம் பார்வையிட வேண்டும்.

மகாபலிபுரம்
சிக்கலான செதுக்கப்பட்ட கோவில்கள் மற்றும் பாறை வெட்டப்பட்ட குகைகளுக்கு பிரபலமான மகாபலிபுரம் தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகும். கிட்டத்தட்ட 1400 வருடங்களாக கடற்கரையோரத்தில் பெருமிதமாக நின்று கொண்டிருக்கும் இந்த கட்டிடக்கலை படைப்புகளை ஒவ்வொருவரும் கட்டாயம் கண்டு ரசிக்க வேண்டும். கடற்கரை கோயில், ஐந்து ரதம், கிருஷ்ணா பட்டர்பால், மியூசியம், அமைதியான கடற்கரை ஆகியவற்றை பார்வையிடுவதற்கு இதுவே சரியான நேரம். முக்கியமாக மகாபலிபுரத்தில் சுடச்சுட கிடைக்கும் கடல் உணவுகளை ருசிக்க மறக்காதீர்கள்.

தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம்
இந்தியாவின் கடைகோடி பகுதி தான் இந்த தனுஷ்கோடி, இது சிறிய அளவிலான மக்கள் தொகை கொண்ட ஒரு சின்ன ஊராகும். 1964ல், இந்தியா கண்டிராத மிக மோசமான புயல்களில் ஒன்று தனுஷ்கோடியை தாக்கியது. அதில் தனுஷ்கோடி முற்றிலுமாக அழிந்தது என்றே சொல்ல வேண்டும். இந்த நகரம் வரலாற்றில் உறைந்து நிற்கிறது, அதன் பெருமையையும் அழகையும் பிரதிபலிக்கிறது. தனுஷ்கோடி கடற்கரை, மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்கா ஆகியவற்றை இங்கே நீங்கள் பார்க்கலாம். ராமேஸ்வரம் வந்து தான் நீங்கள் தனுஷ்கோடியை அடைய முடியும். முன்னதாக ராமேஸ்வரம் கோயில், தீர்த்தங்கள், பாம்பன் பாலம் ஆகியவற்றை பார்த்துவிட்டு இங்கே வாருங்கள்.

தஞ்சாவூர்
சோழ இராச்சியத்தின் பண்டைய தலைநகரமாக செழித்து வளர்ந்த தஞ்சாவூர் உலகிற்கு தமிழனின் வீரத்தையும், ஞானத்தையும், கட்டிடக்கலை நுணுக்கத்தையும் பிரதிபலிக்கிறது. உலகப்புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், சிவகங்கை பூங்கா, மராத்தா அரண்மனை, மணிக்கூடு, மியூசியம் ஆகியவை இங்கே கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். கோடையில் செல்வதை விட இப்போதே இங்கே சென்றால் வெயிலின் தாக்கம் இன்றி சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்.
இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே போகும், இதே போல இந்த பட்டியலில் பல இடங்கள் உண்டு. அவற்றை அடுத்தடுத்து பார்க்கலாம்!



Click it and Unblock the Notifications







