தாஜ் மஹால், ஆக்ரா

உலகிலுள்ள ஏழு அதிசய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாஜ்மஹால் முகாலயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் அவரது அழகிய மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டுள்ள இது கல்லறை மாளிகையாகும். இந்திய, பர்ஷிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்கள் கலந்து இந்த பிரம்மாண்ட நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

1632ம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை முடிப்பதற்கு 21 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதனை நிர்மாணத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இந்த மாளிகை வளாகத்தின் பிரதான அம்சம் மும்தாஜின் கல்லறை அமைந்திருக்கும் விசாலமான கட்டமைப்பாகும். ஒரு சதுர வடிவ மேடைப்பீடத்தின்மீது அமைக்கப்பட்டிருக்கும் சலவைக்கல்லான கல்லறையை சுற்றி குமிழ் வடிவ கூரை மற்றும் தோரண வாயில்களுடன் இந்த மாளிகை காட்சியளிக்கிறது.

40 மீ உயரம் கொண்ட நான்கு மினாரெட்டுகள் (தூண்கோபுரங்கள்) இந்த பிரதான கல்லறை மாளிகையை சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை பொதுவான இஸ்லாமிய மசூதி கட்டமைப்பை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தூண் கோபுரமும் மூன்று தளங்கள் மற்றும் இரண்டு பலகணிகளுடன் காட்சியளிக்கின்றன.

இந்த மாளிகை அமைப்பை சுற்றிலும் 300 சதுர மீட்டர் பரப்பில் சார்பாக் எனும் பூங்கா அமைந்துள்ளது. மேடை போன்ற நடைபாதைகளால் 16 சதுர புல்வெளி பூத்தரைகளாக இந்த பூங்கா பிரிக்கப்பட்டிருக்கிறது.

Please Wait while comments are loading...