இந்திரா காந்தி மியூசியம், டெல்லி

முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » இந்திரா காந்தி மியூசியம்

டெல்லியில் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் இந்திரா காந்தி மியூசியமும் ஒன்றாக திகழ்கிறது. மறைந்த இந்தியப்பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரின் அதிகாரபூர்வ இருப்பிடமாக விளங்கிய இந்த இல்லம் தற்போது அவரது ஞாபகார்த்தப்பொருட்களை தாங்கி நிற்கும் நினைவு அருங்காட்சியகமாக மாறியுள்ளது.

தேசிய சுதந்திர போராட்ட காலத்திலிருந்து துவங்கும் பல அற்புதமான புகைப்படங்கள், இந்திரா காந்தி அம்மையார் பயன்படுத்திய பொருட்கள், நேரு மற்றும் இந்திரா காந்தி குடும்பத்தாரின் அபூர்வ புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த மியூசியம் பார்வையாளர்களை வசீகரிக்கும் இயல்போடு வீற்றிருக்கிறது.  

டெல்லியில் புகழ்பெற்ற சஃப்தர்ஜங் சாலையில் இந்த இந்திரா காந்தி மியூசியம் அமைந்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஞாபகார்த்த அரும்பொருட்கள் மட்டுமல்லாமல்,  இந்த ஸ்தலத்தில்தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவரது பாதுகாவலர்களான சத்வத் சிங் மற்றும் பீன்ட் சிங் ஆகியோரால் 1984 ம் ஆண்டு அக்டோபர் 31ம் நாள் கொல்லப்பட்டார் என்பதால், கூடுதல் முக்கியத்துவத்தையும் இது பெற்றுள்ளது.

ஒரு சரித்திர சோகம் நிகழ்ந்த இந்த ஸ்தலத்தை பார்க்க வேண்டும் என்பது பலரது ஆத்மார்த்த விருப்பமாக உள்ளது.

மேலும் படுகொலை நடந்த தினத்தன்று இந்திரா அம்மையார் உடுத்தியிருந்த புடவை, காலில் அணிந்திருந்த செருப்பு, தோள் பை போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

அறிவுக்கூர்மையும் தேசப்பற்றும் மிகுந்த முன்னாள் பிரதமர் இந்திரா அம்மையார் பயன்படுத்திய சொந்த நூலகம், அவரது குழந்தைப்பருவ புகைப்படங்கள், மஹாத்மா காந்தியோடு அவர் இருக்கும் படங்கள், மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் அவர் சந்தோஷமாக முகம் மலர்ந்திருக்கும் புகைப்படங்கள், அவரது கண்ணாடிகள், கண் தானம் செய்ய எழுதிக்கொடுத்த பத்திரம் மற்றும் ஏராளமான ஞாபகப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பத்திரமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மற்றொரு சோகச்சரித்திரத்தின் அடையாளமாக,  இந்திரா அம்மையாரின் மகன் திரு ராஜீவ் காந்திக்கான ஞாபகார்த்தப் பொருட்களுக்காகவும் இங்கு சில அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. தாயாரைப்போன்றே ராஜீவ் காந்தியும் 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்ததுதான்.

வெகுசமீபத்திய இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான ஆளுமையாக இயங்கிய அரசியல் தலைவருக்கான இந்த நினைவு இல்லம் பார்வையாளர்களை கனத்த இதயத்தோடு திரும்பவைக்கிறது.

இந்த நினைவு இல்லம் அல்லது அருங்காட்சியகம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படுகிறது. திங்கள் கிழமைகளில் இது மூடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...