Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில்

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில், டெல்லி

7

இந்திய மண்ணில் இந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அற்புத கலைப்படைப்பாக இந்த ‘அக்ஷர்தாம் கோயில்’ கம்பீரமாக வீற்றிருக்கிறது. என்னதான் நாம் நவீன உபகரணங்களையும் தொழில் நுட்ப உத்திகளையும் பயன்படுத்தி வானுயர்ந்த கட்டிடங்களை நகர்ப்பகுதிகளில் உருவாக்கியுள்ளபோதிலும் நம் முன்னோர்களின் ரசனைக்கும் கட்டிடக்கலை நுணுக்கங்களுக்கும் இணையாக ஒரு கட்டுமானப்படைப்பை - மனித அறிவும் ஜனநாயகமும் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்ட கடந்த அரை நூற்றாண்டுக்காலத்தில் - உருவாக்கவேயில்லை என்பதுதான் உண்மை.

அந்த உண்மைக்கான நிகழ்காலத்தின் பதிலாகத்தான் இந்த ‘அக்ஷர்தாம் கோயில்’ உருவாகியிருக்கிறது என்றால் மிகையில்லை. வெகு தூரம் கடந்து போய்விட்ட இந்திய மண்ணின் மஹோன்னத கோயிற்கலை பாரம்பரியத்தை நினைவூட்டுவதுபோல், இந்த பிரம்மாண்ட ஆலய வளாகம் இந்தியாவின் தலைநகரில் எழுப்பப்பட்டிருக்கிறது. இது அரசாங்க அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒரு சாதனை என்பதும் வியப்பூட்டும் மற்றொரு அதிசயமாகும்.

இந்திய மண்ணின் பாரம்பரிய கோயிற்கலை மரபையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் இந்த மஹோன்னத கோயில் வளாகத்தை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் பிடித்துள்ளன.

‘போச்சனஸ்வாமி ஷீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா’ எனும் ஆன்மீக மடத்தின் குருவான ‘பிரமுக் ஸ்வாமி மஹராஜ்’ என்பவரது நோக்கம் மற்றும் வழிகாட்டலில் இந்த கோயில் உருவாகியிருக்கிறது.

3000 தன்னார்வ கரசேவகர்களையும் உள்ளடக்கிய 11000 கலைஞர்களின் கூட்டு உழைப்பில் இந்த ‘அக்ஷர்தாம் கோயில் வளாகம்’ உருவாக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு நவம்பர் 6ம் நாள் இக்கோயில் திறக்கப்பட்டிருக்கிறது.

வாஸ்து சாஸ்திரம் மற்றும் பஞ்சரத்ர சாஸ்திரம் போன்ற பாரம்பரிய இந்திய கட்டிடக்கலை தத்துவ மரபுகளை பின்பற்றி இந்த கோயில் வடிவமைப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் ஒட்டுமொத்த வளாகமும் 5 முக்கியமான தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தின் நடுவே இதன் பிரதான அமைப்பு வீற்றிருக்கிறது. 141 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இந்த கோயில் வளாகமானது அலங்கார நுணுக்கங்கள் கொண்ட 234 தூண்கள், 9 அலங்கார மாடகோபுரங்கள், 20 நாற்கர விமானக்கூரைகள், ஒரு பிரம்மாண்ட கஜேந்திர பீடம் மற்றும் தெய்வங்கள், ரிஷிகள், பக்தர்கள், யோகிகள் ஆகியோரை குறிக்கும் 20000 சிற்பங்கள் மற்றும் சிலைகள் போன்றவற்றை தன்னுள் கொண்டுள்ளது.

இளஞ்சிவப்பு மணற்பாறைகள் மற்றும் வெள்ளை சலவைக்கல் இரண்டையும் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் உலோகக்கட்டமைப்புகளோ கான்கிரீட் கலவையோ பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முழுக்க முழுக்க நம் முன்னோர்களின் படைப்பைப்போன்றே உருவாக்க வேண்டும் எனும் நோக்கத்தில் நமது சம கால கலைஞர்கள் ஜெயித்தார்களா என்பது பற்றி நீங்கள் நேரில் இந்த கோயிலைப்பார்த்தபின் ஒரு முடிவுக்கு வரலாம்.

கோயில் வளாகத்தில் உள்ள ‘சஹஜாநாத் பிரதர்ஷன்’ எனும் கூடத்தில் இயந்திரபொம்மைகள், தத்ரூப காட்சி மாதிரிகள் போன்றவற்றை பயன்படுத்தி ஸ்வாமிநாராயணனின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகசமாதானம், ஒற்றுமை, கருணை, தொண்டு போன்ற மானுட அம்சங்களை வலியுறுத்துவதுடன் ஒப்பற்ற மஹாசக்தியை (கடவுள்) முன்னிலைப்படுத்துவதாகவும் இந்த சித்தரிப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த கோயில் வளாகத்தில் ‘நீலகண்ட கல்யாண யாத்ரா’ எனும் விசேஷமான ஆவணப்படம் ஒரு பிரம்மாண்ட திரையில் (85’ X 65’) பக்தர்களுக்காக திரையிடப்படுகிறது.

இமாலயம் தொடங்கி கேரளக்கடற்கரை வரை இந்தியாவிலுள்ள முக்கிய ஆன்மீக புனித்தலங்கள், சடங்குகள் மற்றும் மரபுகள், கலாச்சாரம், திருவிழாக்கள் போன்றவற்றை படம் பிடித்து தொகுத்து இந்த சிறப்பான ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. விரிவான உள்ளடக்கத்துடன் இதே படத்தின் சர்வதேச திரைவடிவமும் ‘மிஸ்டிக் இந்தியா’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

அக்ஷர்தாம் கோயிலில் படகுச்சவாரி எனும் புதுமையான அனுபவத்திற்கான ஒரு உன்னத வளாகம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதி அற்புதமான கற்பனையில் உதித்த ஒரு படைப்பாக்கம் என்றே இந்த வளாகத்தை சொல்லலாம்.

இந்த வளாக அமைப்பில் பார்வையாளர்கள் படகில் நகர்ந்தபடியே  நிஜக்காட்சியை பார்ப்பது போன்று தத்ரூபமான காட்சித்தோற்ற அமைப்புகளை கரைப்பகுதியில் பார்த்து ரசிக்கலாம். 

இந்திய மரபின் சில அடிப்படையான அம்சங்கள், வாழ்க்கைக்காட்சிகள் போன்றவற்றை  சித்தரிக்கும் நுணுக்கமான (இன்ஸ்டலேஷன் பாணி) காட்சி அமைப்புகள் இங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன.

இவை பார்வையாளர்களை நிஜமாகவே இன்னொரு யுகத்துக்குள் கால இயந்திரம் போன்று இழுத்துச்செல்கின்றன. குருகுலக்கல்வி, யோகக்கலை போன்றவை இந்திய பாரம்பரிய கல்வி முறையின் அங்கமாக இடம் பெற்றிருந்ததை விளக்கும் தத்ரூப காட்சிகள் நம் முன்னே வெளிச்சத்துடன் உயிர் பெறுவது பரவசமூட்டும் அனுபவமாகும். 

பார்வையாளர்கள் இருட்டிலும்,  காட்சிகள் நுணுக்கமாக வெளிச்சப்படுத்தப்பட்டும் இருக்குமாறு அற்புதமான தொழில்நுட்பத்துடன் இந்த படகுச்சவாரி வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. படகுச்சவாரி என்பதற்கு பதிலாக ‘கால இயந்திர சவாரி’ என்றே இந்த அனுபவத்தை சொல்லலாம் என்பதை நேரில் புரிந்து கொள்வீர்கள்.

அக்ஷர்தாம் வளாகத்தின் யக்ஞபுருஷ் குண்டம் மற்றும் அதிலுள்ள இசைநீரூற்று மற்றொரு சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வேதகால யாக குண்டம் மற்றும் நவீன இசை நீரூற்று அமைப்பு இரண்டையும் கலந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

புராதன கால படிக்கிணறு போன்று பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குண்டம் அல்லது கிணறு உலகிலேயே மிகப்பெரிய படிக்கிணறாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

மாலை நேரங்களில் இந்த குண்டத்தின் இசை நீரூற்று இயக்குவிக்கப்படுகிறது. வண்ண விளக்குளால் ஜொலிக்கும் இந்த அதிஉயர நீரூற்றுகள் மாயாஜாலம் போன்று பார்வையாளர்களை திகைக்க வைத்துவிடுகின்றன.

மேலும், எட்டு இதழ்களுடன் கூடிய தாமரை மலர் போன்ற வடிவமைப்பு இந்த படிக்கிணறின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அக்கால இந்திய கணிதத்தத்துவங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்த ‘எண்கோண’ தத்துவப்படி இந்த தாமரை மலர் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

அக்ஷர்தாம் கோயில் வளாகத்தின் மற்றொரு அம்சமாக இதன் உள்ளே ‘பாரத் உபாவன்’ அல்லது ‘பாரத தோட்டம்’ எனும் அமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனுள்ளே குழந்தைகள், பெண்கள், சுதந்திரப்போராட்ட வீரர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் இந்திய பிரபல்யங்களின் சிலைகள் காணப்படுகின்றன.

இவை தவிர அக்ஷர்தாம் கோயிலில் யோகி ஹிருதய் கமால், நீலகண்ட அபிஷேக், நாராயண் சரோவர், பிரேம்வதி அஹர்கிருஹ் மற்றும் ஆர்ஷ் சென்டர் போன்ற இதர முக்கிய அம்சங்களும் உள்ளன.

தலைநகருக்கு விஜயம் செய்யும் இந்தியப்பயணிகள் அனைவரும் மறக்காமல் தரிசிக்கவேண்டிய அற்புத ஸ்தலம் இந்த அக்ஷர்தாம் கோயிலாகும். நம் முன்னோர்களின் கலைத்திறமையில் கொஞ்சமாவது எட்டியிருக்கின்றோமா என்று நீங்களும் சொல்லுங்களேன், இந்த கோயிலை பார்த்துவிட்டு!

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Apr,Thu
Check Out
19 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri