ஹரிஹரேஷ்வர் – இறைவனின் எழில் இல்லம் 

ஹரிஹரேஷ்வர் எனும் இந்த சிறிய புராதன நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மாத்ரி, புஷ்பாத்ரி, ஹர்ஷினாச்சல்  மற்றும் ஹரிஹர் எனும் நான்கு மலைகள் சூழ அமைந்துள்ளது. கொங்கண் பிரதேசத்தில் உள்ள ஹரிஹரேஷ்வர் நகரமானது ஒருபுறம் பசுமையான வனப்பகுதியும் மறுபுறம் அழகான கடற்கரையும் அருகருகே இருக்க அழகுடன் காட்சியளிக்கின்றது.

ஹரிஹரேஷ்வர் நகரம் இங்குள்ள சிவன் கோயிலான ஹரிஹரேஷ்வர் கோயிலுக்காக புகழ்பெற்று விளங்குகிறது. இதனாலேயே இந்த ஸ்தலம் கடவுளின் வீடு எனப்பொருள்படும் ‘தேவ்கர்’ என்று அறியப்படுகிறது. இந்த ஸ்தலத்தில் புனித ஆறாக கருதப்படும் சாவித்திரி ஆறு அரபிக்கடலுடன் கலக்கிறது.

வரலாற்று பின்னணியும் முக்கியத்துவமும்

ஹரிஹரேஷ்வர் ஸ்தலத்தின் வரலாறு மாமன்னர் சிவாஜி காலத்திய மராத்தா ஆட்சியிலிருந்து துவங்குகிறது. முதல் பேஷ்வா மன்னரான பாஜிராவ் இந்த புனித ஸ்தலத்துக்கு 1723ம் ஆண்டு விஜயம் செய்ததாக அறியப்படுகிறது.

இந்த ஹரிஹரேஷ்வர் நகரத்திலுள்ள பல முக்கிய வரலாற்று சின்னங்களும் கோயில்களும் இப்பகுதியில் மேன்மையுடன் விளங்கிய அக்கால இந்திய சிற்பக்கட்டிடக்கலை பாரம்பரியத்துக்கு சான்றாய் விளங்குகின்றன.

இங்குள்ள ஒவ்வொரு கோயிலிலும் உள்ள சிற்பங்கள் அவற்றின் பின்னால் ஒரு கதையை கொண்டுள்ளன. இந்த புராண ஐதீகக்கதைகள் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்கின்ற அம்சமாக விளங்குகின்றன.

ஹரிஹரேஷ்வர் – ஒரு ஆன்மீக கேந்திரம்

ஹரிஹரேஷ்வர் ஸ்தலமானது ஒரு முக்கியமான புனித ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாக பக்தர்கள் மத்தியில் பிரபலமாக தக்ஷிண காசி என்றே அறியப்படுகிறது. இங்கு சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மாவுக்கான பல கோயில்கள் அமைந்துள்ளன. காலபைரவர் கோயில் மற்றும் யோகேஸ்வரி கோயில் ஆகிய இரண்டும் இங்கு உள்ள மற்ற முக்கியமான கோயில்களாகும்.

ஹரிஹரேஷ்வர் நகரம் இங்குள்ள அழகான தூய்மையான கடற்கரைக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. அருகாமையிலேயே உள்ள புஷ்பாத்ரி மலையும் ஒரு அழகான இயற்கை எழில் அம்சமாக அமைந்துள்ளது.

ஹரிஹரேஷ்வர் குறித்த இதர தகவல்கள்

ஹரிஹரேஷ்வர் நகரம் விமானம், ரயில், சாலை போன்ற எல்லா மார்க்கங்கள் மூலமாகவும் எளிதில் அடையும்படி அமைந்துள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் விஜயம் செய்யும்படியான சூழலைக்கொண்டிருந்தாலும், மழைக்காலத்திற்கு பிந்தைய காலத்திலும், குளிர் காலத்திலும் இந்த சிறு நகரத்துக்கு விஜயம் செய்வது சிறந்தது.

ஹரிஹரேஷ்வர் ஸ்தலமானது பலவிதமான சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஆன்மீக யாத்ரீகர்களை தன் கோயில்கள் மற்றும் அழகுக்கடற்கரை மூலமாக ஈர்க்கிறது. ஆரவாரம் நிரம்பிய சொந்த ஊரை விட்டு விலகி ஒரு அமைதியான ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிற பயணிகள் யோசிக்காமல் இந்த ஹரிஹரேஷ்வர் ஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம்.

இனிமையான சூழல், ஓவியம் போன்ற கடற்கரை, தொன்மையான கோயில்கள் இவை எல்லாம் ஒன்று சேர்ந்த ஒரு சுற்றுலாத்தலமே ஹரிஹரேஷ்வர் எனலாம்.

Please Wait while comments are loading...