பர்ஷவநாதர் கோயில், கஜுராஹோ

கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் கிழக்குத்தொகுதி கோயில்களில் ஒன்றாக இந்த பர்ஷவநாதர் கோயில் இடம் பெற்றிருக்கிறது. ஜைன தீர்த்தங்கரர்களுக்காக இந்த கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலுள்ள ஜைனக்கோயில்களிலேயே மிகப்பெரிய கோயிலாக பர்ஷவநாதர் கோயில் புகழ் பெற்றுள்ளது.  முதலாம் ஜைன தீர்த்தங்கரரான ஆதிநாதரின் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் 954ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது.

சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்குறிப்புகள் இந்த கோயிலில் காணப்படுகின்றன. முதல் பார்வையிலேயே இந்த கோயிலின் தூய்மையான கலையம்சம் நம்மை கிறங்க வைத்து விடுகிறது.

கோயிலின் உள்ளே சென்றால் பர்ஷ்வநாதர் சிலையை காணலாம். இந்த கோயிலில் காமக்கலை சித்தரிப்புகளை கொண்ட சிற்பங்கள் எதுவுமே இல்லை என்றபோதிலும் இது பயணிகள் மத்தியில் பரவலாக விரும்பி ரசிக்கப்படுகிறது.

இருப்பினும் இந்த கோயிலில் சுரசுந்தரிகள் எனப்படும் அழகு மங்கையரின் சிற்பவடிப்புகளை ஏராளமாக காணமுடிகிறது. இவற்றில் மிளிரும் கலை நுணுக்கங்கள் நம்மை வெகுவாக வசீகரித்து மனம் மயங்க வைக்கின்றன. பிரிய மனமில்லாமல் இந்த கோயிலை விட்டு நகர வேண்டியிருக்கும் உணர்வை அனுபவித்துப்பார்த்தால்தான் புரியும்.

Please Wait while comments are loading...