மிசோரம் சுற்றுலா – இதயத்தை வருடும் வடகிழக்கு பாரம்பரிய பூமி!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

இயற்கை வரைந்த ஓவியமாய் பல வடிவங்களில் ஓங்கி ஜொலிக்கும் மலைகளும், மாசு மருவில்லாது விரிந்திருக்கும் புல்வெளிப்பிரதேசங்களும், நெளிவுகளுடன் வளைந்தோடும் ஆறுகளும் வடகிழக்கு இந்தியாவின் விசேஷ அடையாளங்களாகும்.

இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பிரம்மாண்ட புவியியல் அமைப்பில் இந்த வடகிழக்கிந்திய மாநிலங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக வீற்றிருக்கின்றன.

திராவிடம், ஆரியம் ஆகியவற்றோடு ஆசியம் எனும் மற்றொரு அம்சமும் நவீன இந்தியாவின் ஒரு அங்கமாக விளங்குவதை இவை பிரதிபலிக்கின்றன.

இப்படி ஒரு விசேஷமான வடகிழக்கிந்தியாவின் ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் மாநிலங்களில் ‘மிசோரம்’ மாநிலமும் ஒன்று. 1986ம் ஆண்டில் தனி மாநிலமாக உருவாக்கப்படும் வரை ‘மிசோரம்’ ஒரு இந்திய யூனியன் பிரதேசமாக இருந்து வந்திருக்கிறது.

இயற்கை அன்னையின் படைப்பில் உருவான பல்வேறு எழில் அம்சங்களை தரிசிக்க விரும்புவோர் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய பூமி இந்த மிசோரம் என்பதில் சந்தேகமேயில்லை.

பாஸ்போர்ட், விசா போன்ற நெருக்கடிகள் ஏதுமில்லாமல் இந்தியக்குடிமகன் என்ற உரிமையுடனும், நம் நாட்டு மாநிலங்களில் ஒன்று எனும் பெருமித உணர்வுடனும் இந்த அழகுப்பிரதேசத்திற்கு மிக சுலபமாக, சிக்கனமாக சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளலாம்.

எங்கெங்கோ இருக்கும் அயல் தேசங்களுக்கு செல்ல முடியுமா என்று கனவு காண்பவர்கள் இந்த மலை எழில் பூமிக்கு ஒரு முறையாவது விஜயம் செய்வது சிறந்தது.

மிசோரம் மாநிலம் எல்லா இயற்கை அம்சங்களையும் தன்னுள் வாய்க்கப்பெற்றிருக்கிறது. அரிதான தாவர வகைகள், வித்தியாசமான உயிரினங்கள், பிரமிக்க வைக்கும் மூங்கில் காடுகள், சலசலவென்று விழும் அருவிகள், பசுமையான வயல்கள் என்று காணும் இடமெல்லாம் இயற்கையின் ரம்மிய காட்சிகளுடன் இம்மாநிலம் நம் நெஞ்சை அள்ளுகிறது. பசுமையான பள்ளத்தாக்குகள் நிரம்பிய இம்மாநிலத்தில் கலடான் எனும் பெரிய ஆறு பூமியை செழிப்பாக்கி ஓடுகிறது.

மக்களும், கலாச்சாரமும்!

வண்ணமயமான ஆடைகளை வித்தியாசமான முறையில் அணிந்து குழந்தைகள் போன்று அழகுடன் தோற்றமளிக்கும் மிசோ மக்கள் முதல் பார்வையிலேயே சுற்றுலாப்பயணிகளின் மனதை கவர்ந்துவிடுகின்றனர்.

300 வருடங்களுக்கு முன்னால் இந்த மிசோ இன மக்கள் இப்பகுதியில் குடியேறியதாக சொல்லப்படுகிறது. தங்களது ஆதி பாரம்பரியம் மற்றும் கலாச்சார அம்சங்களுக்கு இவர்கள் பிரதான முக்கியத்துவம் அளித்து வாழ்கின்றனர்.

மிக எளிமையான குணம், உபசரிப்பு ஆர்வம், இரக்க சிந்தை போன்ற நற்பண்புகளை இவர்கள் வாய்க்கப்பெற்றுள்ளனர். இவர்களது மொழி ‘மிசோ’ என்று அழைக்கப்படுகிறது.

கிறித்துவ மதம் இவர்களால் பின்பற்றப்படுவதை ஒரு வியக்க வைக்கும் வரலாற்று அதிசயமாக கூறலாம். இம்மக்கள் புத்திக்கூர்மை உடையவர்களாகவும் இசை மற்றும் நடனம் போன்ற கலை வடிவங்களில் ஆர்வம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

பொதுவாக இசை என்பது இவர்களது கலாச்சாரத்தின் அடித்தளமாக விளங்குகிறது.  மரம் மற்றும் விலங்கு தோலால் செய்யப்பட்ட ‘குவாங்’ எனப்படும் முரசு வாத்தியங்களை இசைப்பதில் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மிசோரம் திருவிழாக்கள்!

மிசோ மக்கள் வருடமுழுதும் பல்வேறு திருவிழாக்களை கொண்டாடி மகிழ்கின்றனர். லுஷே, மரா, லாய் என்பன இந்த மக்களின் இன உட்பிரிவுகளாகும். மிசோரம் சுற்றுலா சிறப்பம்சங்களில் இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களுக்கும் முக்கிய பங்குண்டு.

சப்சுர் குட் எனப்படும் வசந்த கால திருவிழா ‘மிசோரம்’ மாநிலத்தில் விசேஷமாக கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். இந்த விழாக்காலத்தில் உள்ளூர் மக்கள் இப்பகுதியின் கலாச்சார அடையளமான ‘செராவ்’ நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்துகின்றனர். 

மற்றொரு பாரம்பரிய நடனக்கலை வடிவமான ‘குவால் லாம்’ எனும் கலை நிகழ்ச்சிகளும் இக்காலத்தில் பரவலாக நிகழ்த்தப்படுகின்றன. மேலும்,  இந்த திருவிழாக்காலத்தில் உள்ளூர் மக்கள் அவர்கள் தயாரித்த கைவினைப்பொருட்கள், கைத்தறி தயாரிப்புகள் போன்றவற்றையும் சந்தைப்படுத்தி விற்பனை செய்கின்றனர்.

விவசாயம் இம்மக்களின் முக்கிய தொழிலாக பின்பற்றப்பட்டு வருகிறது. நிலத்தில் களையெடுக்கும் பருவமானது தல்ஃபாவுங் குட் எனும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இது மிசோ மக்கள் மத்தியில் முக்கியமான விழாச்சடங்காக மதிக்கப்படுகிறது.

மூன்று நாட்களுக்கு நீடிக்கும் ‘அந்தூரியம் திருவிழா’ ரேயக் எனும் கிராமத்தை ஒட்டிய மலைப்பகுதியில் மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது.

இந்த திருவிழா அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகளை இப்பகுதிக்கு ஈர்த்துவருகிறது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் அந்தூரியம் மலர்கள் பூத்துக்குலுங்கும் பருவத்தில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

மிசோரம் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்கள்

மிசோரம் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக பலா ஏரி, டம் டில் ஏரி அல்லது கடுகு ஏரி போன்றவற்றை குறிப்பிடலாம். இம்மாநிலத்தின் தலைநகரான அய்சால் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

இங்கு பயணிகளுக்கான நவீன வசதிகள் கிடைக்கின்றன. இது தவிர லுங்லே எனும் மற்றொரு நகரமும் முக்கியமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. ‘மிசோரம்’ பகுதியின் வரலாற்று பின்னணி குறித்த சில தகவல்களை அளிக்கும் சான்றுகளாக பல மலைக்குகை ஸ்தலங்களும் இம்மாநிலத்தில் அமைந்துள்ளன.

தம்பா காட்டுயிர் சரணாலயம் மற்றும் கான்குலுங் சரணாலயம் போன்றவை இம்மாநிலத்தின் இதர முக்கியமான சுற்றுலா கவர்ச்சி அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

மிசோரம் மாநிலத்தை மலையேற்ற பிரியர்களின் சொர்க்கம் என்றும் கூறலாம். இங்குள்ள பான்பூய் மலைகள் மலையேற்றத்துக்கு பொருத்தமான பாதைகளை கொண்டுள்ளன.

ஆர்வம் உள்ள பயணிகள் பாராகிளைடிங் எனும் சாகச பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுவதற்கான வசதிகளும் இங்கு கிடைக்கின்றன.

இந்த பொழுதுபோக்கு இம்மாநிலத்தின் முக்கியமான சாகச பொழுது போக்கு விளையாட்டாக வளர்ந்துள்ளது. பாரா கிளைடிங் ஸ்கூல் (பயிற்சி மையம்) ஒன்று மிசோரம் சுற்றுலாத்துறையோடு இணைந்து திருவிழாக்காலங்களில் இதற்கான வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை அளிக்கிறது.

மிசோரம் பருவநிலை

மிசோரம் மாநிலத்தின் பருவநிலை இனிமையான இதமான சூழலோடு காட்சியளிக்கிறது. இருப்பினும் மழைக்காலத்தில் கடும் மழைப்பொழிவை இம்மாநிலம் பெறுகிறது.

கோடையில் வெப்பமில்லாத குளுமையும், குளிர்காலத்தில் அதிகம் நடுங்க வைக்கும் குளிர் அல்லாத குளுமையும் இம்மாநிலத்தில் நிலவுகிறது. குளிர்காலத்தில் சராசரியாக 7 முதல் 21 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை காணப்படும்.  

Please Wait while comments are loading...