சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான காங்டாக்கிலிருந்து, 92 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள காணுதற்கினிய காட்சி எழிலைக் கொண்டுள்ள ஒரு அழகிய சுற்றுலாத்தலம் நம்ச்சி ஆகும். இங்கிருந்து, டார்ஜிலிங்,கலிம்பாங் குன்றுகள், அழகிய பள்ளத்தாக்குகளுடன் கூடிய, பனிசூழ்ந்த மலைகள் ஆகியவற்றின் அற்புதமான காட்சிகளைக்கண்டு மகிழலாம்.
அமைவிடம்
சிலிகுரியிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 1675 மீட்டர் உயரத்தில், அமைந்துள்ள நகரம் நம்ச்சி ஆகும். சிக்கிமின் குருவாகப் போற்றப்படும், குரு பத்மசம்பவாவின் உலகிலேயே மிகப்பெரிய சிலை ஒன்று இங்கு அமைக்கப்பட்டதால், இந்தப்பகுதி அண்மையில் மிகப் பிரபலமடைந்து வருகிறது.
அழகிய காட்சித்தலங்கள், புத்தமடாலயங்கள், உயர்ந்த மலை உச்சிகள் ஆகியவற்றுக்குப் புகழ்பெற்றது இந்நகரம். சிக்கிமின் வேறு முக்கிய நகரங்களுக்கும் மேற்கு வங்காளத்திற்கும் அருகில் நம்ச்சி நகரம் அமைந்துள்ளது.
இங்கு பேசப்படும் பூட்டியா என்னும் மொழியில், நம்ச்சி என்றால், 'வானுயரம்' என்று பொருள். கண்ணுக்கினிய கட்சித்தலங்களை மட்டும் கொண்டிராமல், மிகவும் பழமையான பாரம்பரியத்தையும், பல்வேறு களிப்பூட்டும் பொழுதுபோக்கு அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு சுற்றுலாத் தலமாகவும் இது வளர்ந்து வருகிறது.
மாநிலத் தலைநகரான காங்டாக் போன்ற அமைப்பை ஒத்திருந்தாலும், காங்டாக்கின் பரபரப்பான சூழல் இன்றி மிகவும் அமைதியாக சாந்தமாகத் திகழ்கிறது நம்ச்சி.
மக்கள்
நம்ச்சியில் வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள், இந்துக்களும் புத்தமதத்தை சேர்ந்தவரும் ஆவர். இவர்கள் நேபாளி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் பேசுகிறார்கள்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள்
நம்ச்சியிலுள்ள புத்த மடாலயம், ரோலாங்க் மடாலயம், சம்த்ருப்சே குன்று எனப்படும் இறந்த எரிமலை, டென்டாங்க் குன்று, பாறைத்தோட்டம், டோலிங்க் கோம்பா, ங்காடக் மடாலயம், டெமி தேயிலைத்தோட்டம், சார் தாம் ஆகியவை இப்பகுதியிலுள்ளவற்றில் முக்கியமாகக் காணத்தக்க இடங்கள் ஆகும்.
பிப்ரவரி மாதத்தில் நம்ச்சியில், ஆண்டு மலர்க் காட்சி நடைபெறும். இது சிக்கிமிலேயே மிகப்பெரியதாகும். இக்கண்காட்சியில், எண்ணற்ற வகையிலான மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
புகழ்பெற்ற பைச்சுங்க் விளையட்டு மைதானத்தில்,"தங்கக் கோப்பை" கால்பந்து போட்டி நடத்தப்படும். இதனைப் பார்ப்பதற்கும் ஏராளமான மக்கள் வருகை புரிகிறார்கள். இவ்விளையாட்டு மைதானமானது, சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து வீரரான, பைச்சுங்க் பூட்டியாவைக் கௌரவிப்பதற்காக சிக்கிம் மாநில அரசினால் கட்டப்பட்டதாகும்.
சிக்கிமின் அனைத்து பிரதான நகரங்களிலிருந்தும், நம்ச்சி நகருக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், வாடகை ஜீப்புகள் மற்றும் கார்களும் தாராளமாகக் கிடைக்கின்றன.



Click it and Unblock the Notifications