பத்தனம்திட்டா - மதச் சிறப்பும், கலையும், கலாச்சாரமும் பின்னிப் பிணைந்திருக்கும் ஸ்தலம்!

இறைவனின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தின் மிகச்சிறிய மாவட்டமாக பத்தனம்திட்டா மாவட்டம் அறியப்படுகிறது. 1982- ஆம் ஆண்டு நவம்பர் 1-ல் உருவாக்கப்பட்ட இந்த மாவட்டம் தற்போது கேரளாவின் முக்கிய வணிக மையமாக திகழ்ந்து வருகிறது. இந்த மாவட்டத்தின் பெயர்  'பத்தனம்' மற்றும் 'திட்டா'  ஆகிய இரு வார்த்தைகள் சேர்ந்து உருவானது. இதற்கு 'நதியோரத்தில் கொத்தாக அமைந்திருக்கும் பத்து வீடுகள்' என்று பொருள்.

பத்தனம்திட்டா மாவட்டம் அதன் படகுப் போட்டிகள், ஆலயங்கள் மற்றும் கலாச்சார பயிற்சி மையத்துக்காக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. அதோடு இந்தியா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் சபரிமலை, பத்தனம்திட்டா மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக கேரளாவின் யாத்ரீக தலைநகரமாக பத்தனம்திட்டா மாவட்டம் கருதப்படுகிறது.

பத்தனம்திட்டா மாவட்டம் பாரம்பரிய  கலைகளுக்காகவும்,கலாச்சாரத்துக்காகவும் வெகுப்பிரபலம். இந்த மாவட்டத்தில் உள்ள கடமநிட்டா தேவி கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் படயணி எனும் சம்பிரதாய நடனத்தை காண ஒவ்வொரு கலா ரசிகர்களின் உள்ளமும் ஏங்கும்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வாஸ்துவித்யா குருகுலம் வாஸ்துக் கலை மற்றும் சுவரோவியங்களை பாதுகாப்பதிலும், அவைகளின் வளர்ச்சியிலும் முன்னோடியாக விளங்கி வருகிறது.

இவைதவிர உலோகக் கலவை கொண்டு தயாரிக்கப்படும் உலகப் புகழ்பெற்ற 'அரன்முளா கண்ணாடி' பத்தனம்திட்டா வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்தம். இந்த கண்ணாடியை உருவாக்கும் தொழிற்நுட்பம் குடும்ப ரகசியமாக பாதுகாக்கப்பட்டு இன்று பல சந்ததிகளை தாண்டி அந்த குடும்பத்தை சேர்ந்த கைவினைக்கலைஞர்கள் அதை செய்து வருகின்றனர்.

பத்தமனம்திட்டா மாவட்டத்துக்கு நீங்கள் சுற்றுலா வரும் போது ஸ்ரீ வல்லபா கோயில், மலங்கரா ஆர்தோடக்ஸ் தேவாலயம், குடமன் சிலந்தியம்பலம், கவியூர் மஹாதேவா கோயில் போன்ற இடங்களுக்கு கண்டிப்பாக சென்று வர வேண்டும்.

Please Wait while comments are loading...