இந்தியா என்றாலே உலக மக்களுக்கு புராதன கோவில்களும், வரலாற்றுக் கோட்டைகளும், நினைவுச்சின்னங்களும் தான் நினைவுக்கு வரும். கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா கலாச்சார மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் நாகரீக உணர்வுக்கு வித்திடும் வகையில் பல பிராமாண்ட கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.
அந்த வகையில் புகழ்பெற்ற கோவில்களை நிறுவுவது இந்த சாதனைக்கு சான்றாகி வருகிறது. அவற்றில் நாம் அயோத்தியின் ராம் மந்திர் பற்றி மட்டுமே அறிந்திருப்போம்! அதைப் போலவே இன்னும் பல புகழ்பெற்ற கோவில்கள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டு வருகின்றன. ஜம்முவில் கட்டப்படும் திருமலை திருப்பதி கோவில் முதல், கிஷ்கிந்தாவில் எழுப்பப்படும் அனுமன் கோவில் வரை அனைத்தும் இதில் அடங்கும். அவை என்னவென்று தெளிவாக பார்ப்போமா!

சந்திரோதயா கோவில், பிருந்தாவனம்
உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் கட்டப்படும் சந்திரோதய மந்திர் கட்டுமானத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ள ஒரு கோயில் ஆகும். இஸ்கான் பெங்களூருவால் திட்டமிடப்பட்ட இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டால், உலகின் மிக உயரமான மத நினைவுச்சின்னமாக இருக்கும். ஆம், 700 கோடி ரூபாய் செலவில் 70 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் இக்யோயிலின் உயரம் 700 அடி ஆகும். அதாவது இதன் உயரம் குதுப் மினாரை விட மூன்று மடங்கு அதிகமாகும். 62 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டும் இக்கோயிலில் 12 ஏக்கர் பார்க்கிங் மற்றும் ஹெலிபேட் வசதியும் உள்ளதாம்.

ஓம் ஆசிரமம், பாலி
ஓம் ஆசிரமம் என்பது ஓம் விஸ்வதீப் குருகுலம் சுவாமி மகேஸ்வரானந்தா ஆசிரம கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஒரு பகுதியாகும். ராஜஸ்தானின் பாலி பகுதியில் 250 ஏக்கர் பரப்பளவில் எழுப்பபடும் இந்த நினைவுச்சின்னம் உலகின் மிகப்பெரிய ஓம் சின்னமாக இருக்கும். ஓம் சின்னத்திற்கு நடுவே பிறை நிலவைக் குறிக்கும் வகையில் ஒரு குளம் ஒன்றும் உருவாக்கப்படும். பிந்து என்று அழைக்கப்படும் அதன் புள்ளி, 108 அடி உயரத்தில் 12 கோயில்களுடன் ஒரு கோபுரமாக கட்டப்படுமாம். 90 அடியில் பெரிய மேல்நிலை நீர்த்தேக்கமும் அதற்கு மேல் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சூரியன் கோயிலும் கட்டப்படும். இதற்காக ஆகும் செலவு 500 கோடிக்கும் மேல் எனப் பேசப்படுகிறது.

உமியா மாத்ரி மந்திர், மெஹ்சானா
கடுவ பட்டிதர் சமூகத்தின் இளன் தெய்வமான மா உமியாவின் பிரமாண்ட கோவில் குஜராத்தின் மெஹ்சானா பகுதியில் 74000 சதுர அடி நிலத்தில் ரூ.1500 கோடி செலவில் கட்டப்படுகிறது. கோயில் 255 அடி நீளமும் 160 அடி அகலமும் கொண்டதாக இருக்கும், மேலும் பெரிய கோயிலின் கட்டுமானத்தில் இரும்பு ஆணி பயன்படுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உஞ்சாவில் உள்ள பிரதான கோயிலை இயக்கும் ஸ்ரீ உமியா மாதாஜி சன்ஸ்தான் கோயிலைத் தவிர 13 மாடிகள், 400 அறைகளைக் கட்டும் UPSC GPSC நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் பட்டிதார் இளைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் தங்கும் விடுதி வசதியை புதிய கோவிலுக்கு அருகில் உள்ள வளாகம் வழங்கவுள்ளது.

திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில், ஜம்மு
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜம்முவில் திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் பிரமாண்டமான பிரதியை கட்டுகிறது. ரூ. 50 கோடி செலவில் மலையடிவாரத்தில் சுமார் 62 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் இக்கோயில் சோழர் காலத்து கட்டிடக்கலையுடன் கூடிய திராவிட பாணியை பிரதிபலிக்கும். இத்தகைய கட்டிடக்கலையில் ஜம்முவில் இருக்கப்போகும் முதல் கோவில் இதுவே ஆகும். திருப்பதி உள்ள தெய்வங்களின் அச்சு அசல் போலவே வெங்கடேஸ்வரா, பத்மாவதி மற்றும் ஆண்டாளின் சிலைகள் செய்யப்பட்டு ஜம்முவிற்கு கொண்டு வரப்படும். இந்த கோவில் 2023க்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

விராட் ராமாயண கோவில், கேசரியா
விராட் ராமாயண கோவில் பீகாரின் கேசரியா பகுதியில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் இந்து கோவில் வளாகமாகும். இது கட்டி முடிக்கப்படும் போது உலகின் மிகப்பெரிய மத நினைவுச்சின்னமாக மாறும். அதோடு, 33 அடி உயர சிவலிங்கத்தையும் கொண்டிருக்கும். விராட் ராமாயண கோவிலானது கம்போடியாவில் உள்ள 215 அடி உயரமுள்ள 12 ஆம் நூற்றாண்டின் உலகப் புகழ்பெற்ற அங்கோர் வாட் கோவில் வளாகத்தின் உயரத்தை விட இரு மடங்காக உயரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரமாண்ட வளாகம் ரூ.500 கோடி செலவில் கடத்தப்படுகிறது.

அனுமன் கோவில், கிஷ்கிந்தா
ஹனுமந்த் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, உலகின் மிக உயரமான அனுமன் சிலையையும், அவர் பிறந்த இடமாக கருதப்படும் கிஷ்கிந்தாவுக்கு அருகில் உள்ள அஞ்சனாத்ரி பெட்டாவின் அடிவாரத்தில் ரூ.1200 கோடி செலவில் கோயிலையும் கட்ட முன்வந்துள்ளது. இந்த பிராமாண்ட கோவிலுக்கு அருகே, ஒரு ராமாயண கிராமமும் உருவாக்கப்படுமாம், அங்கு முழு காவியமும் பொம்மைகள் மூலம் சித்தரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மகாகால் காரிடர், உஜ்ஜைன்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜோதிர்லிங்கத் தலமான மகாகாளேஸ்வரர் கோயில், மகாகால் காரிடாரைக் கட்டுவதன் மூலம் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. காரிடாரில் யாத்ரீகர்களின் அனுபவத்தை எளிதாக்கும் வகையில் விரிவாக்கப்பட்ட கோயில் வளாகம் மற்றும் பிற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு நீங்கள் வேதங்களில் கூறப்படும் சிவபெருமானின் புராணக்கதைகளுடன் தொடர்புக் கொண்ட 192 சிலைகள் 53 சுவரோவியங்கள் 108 முத்திரைகளையும் காணலாம். இதற்காக ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? ரூ.800 கோடிகளாம்.
இந்த பிரமாண்ட கட்டுமானங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?



Click it and Unblock the Notifications









