தெலங்கானா - சுற்றுலா - இந்தியாவின் புதிய மலர்!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

'தெலுங்கர்களின் நாடு' என்ற பொருளில் அறியப்படும் தெலங்கானா மாநிலம் இந்தியாவின் 29-வது மாநிலமாக ஜூன் 2, 2014-ஆம் ஆண்டு உதயமானது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில், தக்காணப் பீடபூமியில் வாரங்கல், அதிலாபாத், கம்மம், நிஜாமாபாத், நல்கொண்டா, பத்ராச்சலம், மேடக், போச்சம்பல்லி, நாகர்ஜுனாசாகர் மற்றும் மாநிலத் தலைநகர் ஹைதராபாத் ஆகியவற்றை உள்ளடக்கி தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பண்டைய வரலாறு 

மகாபாரத காலத்தில் 'தெலவானா' என்ற இனம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பாண்டவர்கள் பக்கம் போர் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த தெலங்கானா பகுதியே மகாபாரதத்தில் 'தெலிங்கா நாடு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கலாச்சாரம் 

தெலங்கானா பகுதி இஸ்லாமிய மன்னர்களால் பல காலம் ஆளப்பட்டதால் இந்திய மற்றும் பெர்சிய தாக்கம் இங்கு வாழும் மக்களிடையே இயற்கையாகவே காணப்படுகின்றன.

அதோடு தென்னகத்தை சேர்ந்திருந்தாலும், வட இந்தியாவில் கொண்டாடப்படும் சில திருவிழாக்கள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இது தவிர 'பத்துகம்மா பண்டுகா', போனாலு, சமக்க சாராலம்மா ஜாதரா போன்ற பிராந்திய திருவிழாக்களும் இங்கே கொண்டாடப்பட்டு வருகின்றன. 

உணவு வகைகள் 

தெலங்கானா பகுதியில் தெலுங்கு சமையல் வகை மற்றும் ஹைதராபாத் சமையல் ஆகிய இரண்டு உணவு வகைகள் இருக்கின்றன. இவற்றில் தெலுங்கு சமையல் வகை தென்னிந்திய பாணியில் இருக்க, ஹைதராபாத் உணவு வகையோ தெலுங்கு சமையலோடு, அராபிய, துருக்கிய மற்றும் முகாலய பாணிகளை கொண்டு செய்யப்படுகிறது. 

தெலங்கானாவின் சுற்றுலாச் சிறப்பு!

தெலங்கானாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக மாநிலத் தலைநகர் ஹைதராபாத் அறியப்படுகிறது. சார்மினார், ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி, ஐமேக்ஸ், பிர்லா மந்திர், ஃபலக்னுமா பேலஸ், கோல்கொண்டா கோட்டை, ஹுசேன் சாகர் ஏரி, லாட் பஜார், ஐமேக்ஸ், ஸ்னோ வேர்ல்டு என்று எக்கச்சக்கமான சுற்றுலாப் பகுதிகள் ஹைதராபாத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

அதோடு வாரங்கல்லில் உள்ள ஆயிரம் தூண் கோயில், பத்ராச்சலம் போன்ற ஸ்தலங்கள் ஆன்மிக ஸ்தலங்களாக புகழ்பெற்றுள்ளன. 

தெலங்கானாவை எப்படி அடைவது?

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையமான ராஜீவ் காந்தி விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் ரயில் மற்றும் சாலை மூலமாக தெலங்கானாவை எந்த சிரமமுமின்றி அடைந்துவிட முடியும். 

Please Wait while comments are loading...