மேடக் - அனுதினமும் திருவிழாக்களின் கோலாகலம்!

ஆந்திர தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மேடக் நகரம் சித்தாபுரம் மற்றும் குல்ஷனாபாத் ஆகிய இருவேறு பெயர்களிலும் பிரபலமாக அறியப்படுகிறது. மேடக் மாவட்டத்தின் தலைமையிடமாக திகழும் மேடக் நகரம் காகதீயர் பேரரசின் காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தது. அப்போது காகதீய பேரரசர் பிரதாப ருத்ரா மேடக் நகரை படையெடுப்பிலிருந்து பாதுகாக்க நகரை சுற்றி ஒரு  குன்றின் மீது மேதுகுர்துர்காம் எனும் கோட்டையை எழுப்பினார். இந்தக் கோட்டை உள்ளூர் மக்களால் மேதுகுசீமா என்று அழைக்கப்படுவதோடு, மேடக் நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதியாகவும் திகழ்ந்து வருகிறது.

மேடக் நகரில் வெகு உற்சாகத்தோடும், விமரிசையாகவும் கொண்டாப்படும் திருவிழாக்கள் அருகாமை நகரங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதுமட்டுமல்லாமல் ஆந்திராவின் அனைத்து பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுவதால் திருவிழாக்களுக்காகவே மேடக் நகரம் புகழ் பெற்று விளங்குகிறது.

அதிலும் குறிப்பாக தெலங்கானா பகுதியின் திருவிழாவாக கருதப்படும் பாதுகம்மா பாதுகா எனும் திருவிழா பெண்களினால் மட்டும் மேடக் நகரில் கொண்டாடப்படும். இந்தத் திருவிழா பாதுகம்மா என்று தெலங்கானா மக்களால் வணங்கப்படும் கௌரி மாதாவை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி சமயத்தில் நடத்தப்படும்.

மேடக் மாவட்டத்தில் எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் நிரம்பியுள்ளன. மேடக் நகரில் அமைந்திருக்கும் சாய் பாபா கோயில் பாபாவின் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

அதோடு மேடக் நகருக்கு அருகில் உள்ள கொட்டம் குட்டா எனும் சிறிய கிராமத்தில் அழகிய கோயில்களும், எழில் கொஞ்சும் ஏரிகளும் அமைந்துள்ளன. இவைதவிர ஒரு காலத்தில் ஹைதராபாத் நிஜாம்களின் வேட்டை பகுதியாக இருந்து வந்த போச்சாரம் காடுகள் மற்றும்  வனவிலங்கு சரணாலயம் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

மேடக் நகருக்கு வரும் பயணிகள் மஞ்சிரா ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள நிஜாம் சாகர் அணையையும், சிங்கூர் அணையையும் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.

மேலும் மேடக் நகருக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் மஞ்சிரா வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயமும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இந்த சரணாலயம் முதலைகளுக்காக நாடு முழுவதும் பிரபலமாக அறியப்படுவதுடன், ஏராளமான புலம்பெயர் பறவைகளுக்கு புகலிடமாகவும் இருந்து வருகிறது.

மேடக் நகரிலும் அதை சுற்றிலும் ஸ்ரீ சரஸ்வதி க்ஷேத்ரமு கோயில், வேலுபுகொண்ட ஸ்ரீ தும்புருநாத தேவாலயம், எடுப்பாலய துர்கா பவானி குடி போன்ற சரித்திர சிறப்பு வாய்ந்த கோயில்கள் சில இருக்கின்றன.

இந்த கோயில்களாலும், இங்கு நடத்தப்படும் திருவிழாக்களாலும் மேடக் நகரம் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதோடு, மேடக் நகரம் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருவதற்கும் இந்தக் கோயில்களே முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.

Please Wait while comments are loading...