அதிலாபாத் – கலாச்சார கதம்ப நகரம்

ஆந்திர மாநிலத்தின் வடமேற்கு எல்லையில் வீற்றிருக்கும் நகராட்சி நகரமான அதிலாபாத் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாகவும் இயங்குகிறது. உள்ளூர் வரலாற்று கதைகளின்படி முகமது அதில் ஷா எனும் பீஜாப்பூர் ராஜவம்ச மன்னரின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

பல்வேறு கலாச்சார அம்சங்களின் கதம்ப நகரமாக காட்சியளிக்கும் அதிலாபாத் நகரம் செழுமையான வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது. பல வட இந்தியா சாம்ராஜ்யங்களால் ஆளப்பட்ட தனித்தன்மையையும் இந்த நகரம் பெற்றுள்ளது.

மௌரிய அரச வம்சத்தினர், நாக்பூர் போன்ஸ்லே ராஜ வம்சத்தினர் மற்றும் முகலாய மன்னர்கள் போன்றோரின் ஆளுகைக்குள் இப்பகுதி இருந்து வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் தென்னிந்திய அரசவம்சங்களான சாதவாஹனர்கள், வாகடகர்கள், ராஷ்டிரகூடர்கள், காகதீயர்கள், சாளுக்கியர்கள் மற்றும் பேரார் இமாத் ஷாஹி வம்சத்தினர் போன்றோரின் ஆட்சியிலும் இந்த அதிலாபாத் நகரப்பகுதி இருந்திருக்கிறது.

இப்படி வடக்கு மற்றும் தெற்கு ராஜ்ஜியங்களின் ஆட்சிகளுக்குள் அதிலாபாத் நகரம் மாறி மாறி இருந்து வந்துள்ளதற்கு முக்கிய காரணம் இதன் புவியியல் அமைப்புதான் என்பது எளிதில் ஊகிக்கக்கூடிய ஒரு அம்சமாகும்.

அதாவது மத்திய இந்தியாவிற்கும், தென்னிந்தியாவிற்குமான எல்லைப்பகுதியில் இந்நகரப்பகுதி அமைந்திருப்பதால் இரு திசைகளிலிருந்தும் பல ராஜ்ஜியங்களின் தாக்குதலுக்கு காலங்காலமாக இது உட்பட்டு வந்திருக்கிறது.

இப்படி ஒரு வித்தியாசமான வரலாற்றுப்பின்னணி வாய்க்கப்பெற்றிருப்பதால் இன்றைய அதிலாபாத் நகரம் மராத்திய மற்றும் தெலுங்கு கலாச்சாரங்களின் சுவாரசியமான கலவையாக காட்சியளிக்கிறது.

பல்வேறு இனப்பிரிவுகளை சேர்ந்த பாரம்பரிய அம்சங்கள் இன்று ஆதிலாபாத் நகர மக்களின் ஒட்டுமொத்த கலாச்சார அடையாளமாகவே மாறிவிட்டன. மேலும், வங்காள, ராஜஸ்தானிய மற்றும் குஜராத்திய கலாச்சாரங்களும் இந்நகரில் இடம் பிடித்துள்ளன.

அதிலாபாத் நகரத்தின் பொற்காலம்

முகலாயர் ஆட்சிக்காலத்தில் இந்த அதிலாபாத் நகரம் சிறப்புடன் விளங்கியுள்ளது. ஔரங்கசீப் மன்னர் அவரது அரசவையிலிருந்து ஒருவரை தக்காணப்பிரதேசத்துக்கான முகலாய பிரதானியாக அதிலாபாத் நகரத்தில் நியமித்து தனது பேரரசின் தெற்குப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக தெரியவருகிறது.

ஔரங்கசீப் மன்னரின் ஆட்சியில் இந்தப்பகுதி ஒரு முக்கிய தொழில் வணிக கேந்திரமாக பிரசித்தமாக திகழ்ந்திருக்கிறது. வாசனைப்பொருட்கள், துணி வகைகள் மற்றும் இதர பொருட்களை தலைநகர் டெல்லி வரை பரிமாறிக்கொள்ளும் பரபரப்பான வணிகச்சந்தையாக இது வரலாற்று காலத்தில் இயங்கியிருக்கிறது.

மேலும், தக்காணத்தின் இந்த அதிலாபாத் பகுதிக்கு விசேஷ முக்கியத்துவம் கிடைப்பதில் ஔரங்கசீப் தனிக்கவனம் செலுத்தியதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

தென்னிந்தியாவில் முகலாயப்பேரரசின் ஆதிக்கம் நீடிக்கவேண்டுமெனில் இந்த ஆதிலாபாத் பகுதி ஒரு முக்கிய கேந்திரமாக விளங்குவது அவசியம் எனும் ராஜதந்திரத்தை அவர் பின்பற்றியதாக தெரிகிறது.

பொருளாதார வளத்துடன் திகழ்ந்திருந்த இந்த அதிலாபாத் நகரத்தின் சூழ்நிலை தக்காணத்தில் கிழக்கிந்திய கம்பெனியினர் கால் வைத்தபின் அடியோடு மாறியது. பணத்துக்காக நிஜாம் மன்னர் இந்த அதிலாபாத் நகரம் மற்றும் சூழ்ந்துள்ள பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியிடம் தாரை வார்த்தார்.

1860ம் ஆண்டில் நிகழ்ந்த இந்த பரிவர்த்தனையை எதிர்த்து ராம்ஜி கோண்ட் என்பவர் தலைமையில் ஒரு மக்கள்புரட்சியும் நிகழ்த்தப்பட்டது. 1940 ம் ஆண்டுகளில் நிகழ்ந்த சுதந்திர போராட்டங்களிலும் இந்த ஆதிலாபாத் நகரம் முக்கிய பங்கை வகித்தது.

தற்போதைய அதிலாபாத் நகரம் சரித்திர அடையாளங்களை கொண்டுள்ள ஒரு முக்கியமான சுற்றுலா நகரமாக ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்றுள்ளது. குண்டலா நீர்வீழ்ச்சி, செயிண்ட் ஜோசப் கதீட்ரல், கடம் அணை, சதார்மட் அணைக்கட்டு, மஹாத்மா காந்தி பார்க் மற்றும் பசரா சரஸ்வதி கோயில் போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் இந்த அதிலாபாத் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளன.

சுற்றுலா வசதிகளும் சூழலும்

சாலை மார்க்கமாகவும் ரயில் மார்க்கமாகவும் எளிதில் பயணிக்கும் வகையில் அதிலாபாத் நகரம் போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 7 இந்நகரம் வழியாக செல்வதை ஒரு கூடுதல் விசேஷம் என்றும் சொல்லலாம்.

அருகிலுள்ள ஆந்திர மற்றும் அண்டை மாநில நகரங்களிலிருந்து அதிலாபாத் நகரத்துக்கு பேருந்து சேவைகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. ஹைதராபாத் மற்றும் மும்பையிலிருந்து வரும் ஒரு சில சொகுசு பேருந்துகளைத் தவிர இப்பகுதியில் இயக்கப்படும் பேருந்துகள் யாவும் சாதாரண பேருந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சாலைகள் நன்றாக இருப்பதால் பேருந்துப்பயணம் வசதியாகவே இருக்கும். ஆதிலாபாத் நகருக்கு அருகிலுள்ள முக்கியமான பெரிய நகரமாக நாக்பூர் நகரம் அமைந்துள்ளது.

இருப்பினும் பயணிகள் ஹைதரபாத் நகரத்திலிருந்தே அதிக அளவில் பயணம் மேற்கொள்கின்றனர். நாக்பூர், திருப்பதி, ஹைதராபாத், நாசிக், மும்பை, நாக்பூர் மற்றும் ஷோலாபூர் போன்ற நகரங்களுடன் ஆதிலாபாத் ரயில் இணைப்புகளை கொண்டுள்ளது.

மேலும், நாக்பூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களாக அமைந்துள்ளன. நாக்பூர் விமான நிலையம் உள்நாட்டு விமான நிலையம் என்றாலும் முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகளை கொண்டுள்ளது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வெளிநாட்டு நகரங்களுக்கும் விமான சேவைகளை கொண்டுள்ளது

வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள அதிலாபாத் பகுதி கடுமையான கோடைக்காலம் மற்றும் இதமான குளிர்காலம் போன்ற பருவநிலை அம்சங்களை கொண்டுள்ளது. அதிகமான உஷ்ணம் மற்றும் ஈரப்பதம் காரணமாக கோடைக்காலத்தில் இந்நகரம் இறுக்கமான சூழலுடன் காட்சியளிக்கிறது.

எனவே கோடையில் ஆதிலாபாத் நகரத்திற்கு சுற்றுலா மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். மழைக்காலத்தில் இப்பகுதி அதிக மழையை பெறுவதில்லை. இதன் காரணமாகவே இப்பகுதியில் அதிகமாக நீர்த்தேக்கங்களும், அணைகளும் கட்டப்பட்டிருக்கின்றன.

குளிர்காலத்தில் இனிமையான சூழல் நிலவுவதால் சுற்றுலாவுக்கு அப்பருவமே ஏற்றதாக உள்ளது. மாலை மற்றும் இரவு வேளைகளில் குளிர் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதால் குளிர் அங்கிகள் மற்றும் சால்வைகள் போன்றவற்றை எடுத்துச்செல்வது நல்லது.

Please Wait while comments are loading...