இந்தியாவே தீபாவளி கோலாகலத்துல மூழ்கி கிடைக்கிற நேரமிது. ஒரு பக்கம் அம்மாக்கள் விதவிதமா வகை வகையா பலகாரங்களை செஞ்சு அடுக்க, மறுபக்கம் அப்பாக்கள் எல்லோரும் பிள்ளைகள கூட்டிகிட்டு பட்டாசு வாங்க கிளம்பிடுறாங்க.
நாம ஏன் இந்த தீபாவளியை கொண்டாடுறோம்ன்னு நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். அதாவது நரகாசுரன் என்ற அசுரனை ஸ்ரீ கிருஷ்ணர் வதம் செய்ததைதான் தீபாவளியா கொண்டாடுறோம்.
அதனால நரகாசுரன் என்ற கொடிய அரக்கனை அழித்து இன்று மக்கள் சந்தோஷமா தீபாவளி கொண்டாட யார் காரணம்?....ஸ்ரீ கிருஷ்ணர்தானே?...
நம்ம தென்னிந்தியாவுல நிறைய கிருஷ்ணர் கோயில்கள் இருந்தாலும் ஒரு சில கோயில்கள் ரொம்பவும் பிரபலம். அந்த கோயில்களைத்தான் நாம இப்போ பாக்க போறோம்!

குருவாயூரப்பன் கோயில், குருவாயூர்
இந்தியாவிலேயே அதிக மக்களால் தரிசிக்கப்படும் கோயில்களில் 4-வது கோயில் எனும் பெருமையை குருவாயூரப்பன் கோயில் பெற்றுள்ளது. இங்கு மஹா விஷ்ணு கிருஷ்ண அவதாரத்தின் பாலகோபால ரூபத்தில் குடிகொண்டுள்ளார். இந்த கோயிலில் கிருஷ்ணலீலாக்கள் எனப்படும் கிருஷ்ணரின் இளம் பருவக்கதைகள் சுவர்களில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. இக்கோயிலில் பலவித கர்நாடக இசைக்கச்சேரிகளும் பாரம்பரிய கேரள நடனக்கலை வடிவங்களும் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

கிருஷ்ணர் கோயில், உடுப்பி
உடுப்பி கிருஷ்ணர் கோயிலின் விசேஷம் இங்கு கிருஷ்ணர் 9 துவாரங்கள் கொண்ட ஜன்னல் வழியாக தரிசனம் அளிப்பதாகும். இவ்வாறு கிடைக்கும் தரிசனம் பக்தர்களுக்கு எல்லா வளத்தையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் இந்த பகுதியிலேயே பழமையான கோயில் எனும் பெருமையை பெற்றுள்ளது. இங்கு ராம நவமி மற்றும் உகாதி போன்றவை கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாக்களாகும். இது காலை 5 மணியிலிருந்து இரவு 9.30 வரை கோயில் திறந்துள்ளது.

இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில், மன்னார்குடி
இராஜகோபாலஸ்வாமி திருக்கோயிலின் வளாகம் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் 24 சன்னதிகள், 16 உயர்ந்த கோபுரங்கள், 7 முற்றங்கள், 7 கூடங்கள் மற்றும் 9 குளங்கள் ஆகியவற்றுடன் பரந்து விரிந்து காணப்படுகிறது.இந்த கோயில் குலோத்துங்கச் சோழரின் காலத்தின் போது கட்டப்பட்டு, அவருக்குப் பின் வந்த பல்வேறு சோழ மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இக்கோயில் குளம், 1158 அடி நீளம் மற்றும் 837 அடி அகலத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய கோயில் குளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில், ஆலப்புழா
8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மிகவும் பழமை வாய்ந்த கோயிலான அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயிலில் கிருஷ்ண பகவான் பார்த்தசாரதி உருவில் ஒரு கையில் சாட்டையுடனும் மறு கையில் சங்குடனும் ருத்ர கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த மாதிரி சாட்டையுடன் காட்சியளிக்கும் கிருஷ்ணர் விக்ரகத்தை நீங்கள் வேறெங்கும் காண முடியாது. இங்கு நைவேத்தியமாக படைக்கப்படும் பால் பாயசத்தை ஏற்றுக்கொள்ள குருவாயூரப்பன் தினமும் இக்கோயிலுக்கு வந்து செல்வதாக நம்பப்படுகிறது.

பார்த்தசாரதி கோயில், சென்னை
சென்னை திருவெல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோயில் முதலாம் நரசிம்மவர்ம பல்லவரால் கட்டத்துவங்கப்பட்டு சோழ மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்குதான் மஹாகவி பாரதி தனது 39-வது வயதில் கோயில் யானைக்கு உணவு ஊட்டும்போது எதிர்ப்பாராவிதமாக யானையால் தாக்கப்பட்டு உடல்நலம் குன்றி பின்னர் அதன் காரணமாகவே அவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணர், நரசிம்மர், ராமர் மற்றும் வராஹமூர்த்தி போன்ற மஹாவிஷ்ணு அவதாரங்களின் சிலைகளை இக்கோயிலில் காணலாம்.

ஜனார்த்தன ஸ்வாமி கோயில், வர்கலா
2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன ஸ்வாமி கோயில் தெற்கு பகுதியின் காசி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒரு டச்சு கப்பல் மாலுமியால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆலயமணி ஒன்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களிடையே மிகவும் பிரபலம். இக்கோயில் கருவறைக்குள் ஹிந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் கருவறையை சுற்றியுள்ள பிரகாரம் உள்ளிட்ட இதர பகுதிகளுக்கு விஜயம் செய்ய தடை ஏதுமில்லை.



Click it and Unblock the Notifications








