Search
  • Follow NativePlanet
Share
» »ஆடி மாதத்தில் இந்த ஸ்தலங்களுக்கு போனால் கோடி புண்ணியம் கிடைக்குமாம்!

ஆடி மாதத்தில் இந்த ஸ்தலங்களுக்கு போனால் கோடி புண்ணியம் கிடைக்குமாம்!

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவை! சித்திரை முதல் பங்குனி வரை ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு கடவுளுடன் தொடர்பு கொண்டது என நம் முன்னோர்கள் சொல்லி நாம் கேட்டிருக்குறோம்! அவற்றில் ஆடி மாதம் மிகவும் விசேஷமானது. ஆடி முதல் நாள், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை என இம்மாதத்தின் பெரும்பாலான நாட்கள் வழிபடப்பட்டு வருகின்றன.

இந்த புனிதமான ஆடி மாதத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூணுகின்றன. வெள்ளை அடிக்கப்பட்டு, தோரணங்கள் எல்லாம் கட்டி, பாட்டு போட்டு, செடல் குத்தி, கூழ் படைத்து, புது புடவை படைத்து, பொங்கலிட்டு மக்கள் அம்பாளை தரிசினம் செய்கிறார்கள். ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள இந்த கீழ்க்கண்ட கோவில்களுக்கு செல்வது மிகவும் சிறப்பாகும். ஆகையால் நீங்களும் இந்தப் பதிவை படித்துவிட்டு திட்டமிடுங்கள்!

சமயபுரம் மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மன் கோவில்

திருச்சிக்கு மிக அருகில் அமைந்துள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவில் இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றாகும். பிரதான கோபுரம் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, பகலிலும் இரவிலும் கோபுரம் பிரகாசமாகவும் பிரமிக்க வைக்கும் விதமாகவும் ஜொலிக்கிறது. இக்கோவிலின் தேவி சுயம்பு என்று கூறப்படுகிறது. தமிழக அறநிலையத்துறைக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதில் இக்கோவில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் அல்லது திருமணத்தில் தடைகள் உள்ளவர்கள் அம்மனுக்கு தங்க மங்களசூத்திரத்தை சமர்பிப்பார்கள். மேலும், பக்தர்கள் தங்கள் நோய் மற்றும் வலிகளில் இருந்து நிவாரணம் பெற உடல் உறுப்புகள் கொண்ட வெள்ளி சிலைகளும் உண்டியலில் போட்டு வழிபடுகின்றனர். ஆடி மாசத்தில் இக்கோவில் மிகவும் விசேஷமாக இருப்பதால், பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இந்த விசேஷமான நாட்களில் சமயபுரத்திற்கு சென்று அம்பாளின் ஆசியைப் பெற்று வாருங்கள்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து 21 கிமீ தொலைவில் அமைந்துள்ள மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம், தேவி அங்காளம்மனுக்கு அர்பணிக்கப்பட்ட ஆலயமாகும். நான்கு திருக்கரங்களுடன், இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்ட யோக வடிவில், பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி எழுந்தருளி காத்து வருகிறாள் அங்காளி.

ஒவ்வொரு பௌர்ணமியும் இங்கு படு விசேஷமாக இருக்கும். எங்கு எங்கிருந்தோ மக்கள் இங்கு வந்து பௌர்ணமி அன்று அமபாளை தரிசித்துவிட்டு செல்வார்கள். குறிப்பாக ஆடி மாதத்தில் மேல்மலையனூர் எல்லைக்குள் கூட நுழைய முடியாது, இக்கோவிலில் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகளும் புனஸ்காரங்களும் நடைபெறுகின்றன.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

புற்று வடிவமாகவே தோன்றி சுயம்பு வடிவம் கொண்டவள் தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன். அம்பாளை வணங்கி புற்றுமண் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடி மாதத்தில் நடைபெறும் வழிபாடுகளும் திருவிழாக்களும் மிகவும் சிறப்புமிக்கவை.

பக்தர்கள் தங்களின் நோய்கள், வறுமை மற்றும் துன்பங்கள் அனைத்தையும் போக்க இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். அவர்கள் தேவிக்கு உடல் உறுப்புகளின் மண் பிரதிகள், இனிப்பு புட்டு, சிவப்பு சேலை மற்றும் பூக்களை வழங்குகிறார்கள். இவ்வளவு பெருமை வாய்ந்த இத்தலம் தஞ்சாவூரில் இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

முண்டக கன்னி அம்மன் ஆலயம்

முண்டக கன்னி அம்மன் ஆலயம்

மயிலாப்பூரில் அமைந்துள்ள 1300 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் சென்னையில் உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவில்களாகும். சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் கோவிலுக்கு பின்புறத்தில் உள்ள ஆலமரத்தடி புற்றில் பால், மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவற்றை வைத்து பூஜித்து வந்தால் சர்ப்ப தோஷம் நீங்குகிறது என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலில் ஆடி திருவிழா மிகவும் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது. தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு, புது துணி சார்த்தப்பட்டு, வெள்ளிக்கிழமைகளில் கூழ் ஊற்றி மக்கள் வழிபடுகின்றனர். இந்த புனிதமான ஆடி மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் அம்பாளை தரிசித்து ஆசி பெற்றிடுங்கள்.

குறுங்குடில் காத்தாயி அம்மன் ஆலயம்

குறுங்குடில் காத்தாயி அம்மன் ஆலயம்

ஒரே சன்னதியில் மூன்று அம்மன்கள் வீற்றிருக்கும் குறுங்குடில் காத்தாயி அம்மன் தனிச்சிறப்பு வாய்ந்த கோவிலாகும். பிரகாரத்தைச் சுற்றிலும் சிவன், முருகன், விநாயகர் மற்றும் முனீஸ்வரர் ஆகியோரின் சன்னதிகள் மற்றும் முன் பந்தலில் ஆறு காவல் தேவதைகளுடன், அழகிய சூழலுக்கு மத்தியில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

ஆடி மாதத்தில் இக்கோவில் மிகவும் விசேஷமாக இருக்கிறது. நீங்களும் ஆடி மாதத்தில் இக்கோவிலுக்கு சென்று அன்னையின் ஆசிப் பெற்று வாருங்கள்.

மேலும் சீர்காழி மகா மாரியம்மன் கோவில், குமுளி கண்ணகி அம்மன் கோவில், காரைக்குடி கொப்புடை அம்மன் கோவில், திருச்சி உஜ்ஜைன் மாகாளி அம்மன் கோவில், திருவக்கரை வக்ரகாளி அம்மன் கோவில், மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், திருநெல்வேலி தீப்பாச்சி அம்மன் கோவில், சிவகங்கை பொன்னழகி கோவில், திருமுல்லைவாயல் பச்சை அம்மன் கோவில், பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில், ஈரோடு கொங்கலம்மன் கோவில் மற்றும் தமிழகமெங்கும் உள்ள பல அம்மன் கோவில்கள் ஆடி மாதத்தில் ஜக ஜோதியாக இருக்கும்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X