இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏராளமான அழகிய ஏரிகள் அமைந்துள்ளன. இவற்றில் இயற்கையாக உருவான ஏரிகளும் உண்டு, செயற்கை முறையில் வெட்டுவிக்கப்பட்ட ஏரிகளும் உண்டு.
அதேபோல இவை நன்னீர் ஏரி என்றும், உவர் நீர் ஏரியென்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஏரிகள் அவற்றின் அற்புதமான இயற்கை எழிலின் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகவும் திகழ்ந்து வருகின்றன.
மேலும் செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான காலங்களில் இந்த ஏரிகள் எண்ணற்ற புலம்பெயர் பறவைகளுக்கு புகலிடமாகவும் விளங்குகின்றன.

பாங்காங் ஏரி
பாங்காங் ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக இந்த ஏரி பரவியுள்ளது. 2006-ஆம் ஆண்டில் "தி ஃபால்" மற்றும் 2010-ல் "3 இடியட்ஸ்" ஆகிய திரைப்படங்களில் இந்த ஏரியின் அழகுக் காட்சிகள் படமாக்கி காட்டப்பட்டுள்ளன. இத்திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்த ஏரி சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக தொடங்கியது.
படம் : Sidharthkochar

ட்சோமோரிரி ஏரி
ஜம்மு காஷ்மீரின் சங்தாங் பகுதியில் உள்ள ட்சோமோரிரி ஏரிக்கு வடக்கே இந்தியாவின் லடாக்கும், கிழக்கே திபெத் நாடும் அமைந்திருக்க நடுவில் ட்சோமோரிரி ஏரி எழிலுடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
படம் : Jochen Westermann

தால் ஏரி
'காஷ்மீரின் கிரீடத்தில் உள்ள ஆபரணம்' அல்லது 'ஸ்ரீ நகரின் அணிகலன்' என்று அழைக்கப்படும் தால் ஏரி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். மாபெரும் இமயமலையை பின்னணியாகக் கொண்டு 26 கிமீ பரப்பளவில் விரிந்து காணப்படும் இந்த ஏரி 'ஷிக்காரா' அல்லது மரப் படகுகளுக்காக மிகவும் புகழ்பெற்றது.
படம் : Basharat Shah

சூரஜ் தால் ஏரி
சூர்யா தால் என்ற பெயரிலும் அறியப்படும் சூரஜ் தால் ஏரி ஹிமாச்சல பிரதேசத்தின் லாஹௌல் மற்றும் ஸ்பிதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே உயரமான இடத்தில் அமைந்திருக்கும் ஏரிகளில் சூரஜ் தால் ஏரி 3-வதாக அறியப்படுகிறது.
படம் : Ankit Solanki

ஷேஷ்நாக் ஏரி
ஏழு மலைகளால் சூழப்பட்டுள்ள இவ்வேரி இந்து புராணங்களில் கூறப்படும் ஏழு தலை கொண்ட சர்ப்ப ராஜாவான ஷேஷ்நாக்கின் பெயரிலிருந்தே அவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பஹல்கம்மிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3658 அடி உயரத்தில் அமைந்துள்ள ஷேஷ்நாக் ஏரி அமர்நாத்தின் முக்கிய ஈர்ப்புகளுள் ஒன்றாகும்.
படம் : Akhilesh Dasgupta

வேம்பநாட் ஏரி
கேரளாவின் மிகப்பெரிய ஏரியாகவும், இந்தியாவிலுள்ள மிக நீண்ட ஏரிகளில் ஒன்றாகவும் வேம்பநாட் ஏரி அறியப்படுகிறது. நேரு கோப்பை படகுப்போட்டி எனும் படகுப்போட்டித் திருவிழா வருடாவருடம் கோலாகலமாக இந்த ஏரியில் நடத்தப்படுகிறது. கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான படகுகள் கலந்துகொள்ளும் இந்த பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு கண் கொள்ளா விருந்தாக அமையும்.
படம்

ஹுசேன் சாகர் ஏரி
எப்போதும் வற்றாத நீர்த்தேக்கத்துடன் காட்சியளிக்கும் இந்த பிரம்மாண்ட ஏரி ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் இரண்டையும் இணைப்பது போன்று காட்சியளிக்கிறது. ஏரியை சுற்றிலும் ‘நெக்லஸ் ரோடு' எனும் பிரசித்தமான வீதி அமைந்துள்ளது. இது 1562-ஆம் ஆண்டு ஹஸரத் ஹுசைன் ஷா வாலி என்பவரால் உருவாக்கப்பட்டது.
படம் : Alosh Bennett

கோடை ஏரி
1863-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செயற்கை ஏரியான கோடை ஏரி ஒரு விண்மீனின் வடிவத்தில் காட்சியளிக்கிறது. இந்த ஏரி கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. தொலைவில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
படம் : Aruna

நைனா லேக்
நைனா லேக் எனும் இந்த ஏரி நைனித்தால் சுற்றுலாத்தலத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். இந்த ஏரியில் சுற்றுலாப்பயணிகள் சொகுசுப்படகு சவாரி, துடுப்புப்படகு சவாரி போன்றவற்றில் ஈடுபடலாம்.
படம்

பிச்சோலா ஏரி
பிச்சோலா ஏரி 1362-ஆம் ஆண்டில் மனித முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான ஏரியாகும். இதன் கரையிலேயே ஒரு அழகிய நகரத்தை நிர்மாணிக்க முடிவெடுத்த பின்னர் பிறந்ததுதான் ராஜஸ்தானின் உதய்பூர் நகரம். காலப்போக்கில் இந்த ஏரியைச் சுழ்ந்துள்ள பகுதியில் கோயில்கள், அரண்மனைகள் மற்றும் மாளிகைகள் உருவாக்கப்பட்டன.
படம் : Uri Sittan Tripo

பீம்தால் ஏரி
கடல் மட்டத்திற்கு மேலே 4500 அடி உயரத்தில் உள்ள பீம்தால் ஏரி, நைனிடாலை சுற்றியுள்ள மிகப்பெரிய இயற்கை ஏரிகளில் ஒன்றாகும். இது பாண்டவர்களில் ஒருவரான பீமனின் பெயரால் அழைக்கப்படுகின்றது.
படம் : Manoj Khurana

உலர் ஏரி
24 கிமீ நீளமும், 10 கிமீ அகலமும் கொண்ட உலர் ஏரி இந்தியாவின் மிகப்பெரிய ஏரியாகவும், உலகின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. அதோடு ஆசிய கண்டத்திலேயே தூய நீரை கொண்டிருக்கும் மிகப் பெரிய ஏரியாக இந்த உலர் ஏரி விளங்குகிறது. இந்த ஏரி ஹராமுக் மலையடிவாரத்தில், சோபோர் மற்றும் பன்டிபோர் ஆகிய நகரங்களுக்கிடையே அமைந்திருக்கிறது.
படம் : Maxx786

சில்கா ஏரி
சுமார் 1,100 சதுர கி.மீ. பரப்பளவில் தயா நதியின் வாயிலில் அமைந்துள்ளது சில்கா ஏரி. காஸ்பியன் கடல், ஈரான், ரஷ்யா மற்றும் சைபீரியா போன்ற இடங்களில் இருந்து குளிர் காலத்தில் 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு புலம்பெயர்ந்து வருகின்றன. இந்த ஏரியில் பறவைகள் தீவு, தேனிலவு தீவு, பரிகுத் தீவு, ப்ரேக்பாஸ்ட் தீவு, மலுத் தீவு, நிர்மல்ஜரா தீவு மற்றும் நலபானா (நாணல் தீவு) போன்ற எண்ணற்ற அழகிய சிறு தீவுகள் அமையப்பெற்றுள்ளன.
படம் : Aruni Nayak

லோக்தாக் ஏரி
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலிலிருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள லோக்தாக் ஏரியில்தான் உலகின் ஒரே மிதக்கும் பூங்காவான கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா அமைந்துள்ளது.
படம் : Nareshhemam



Click it and Unblock the Notifications







