பரப்பளவில் உலக அளவில் ஏழாவது பெரிய நாடாக திகழும் இந்தியா பல இயற்கை வளங்களால் நிரம்பியுள்ளது. நமது அழகிய நாட்டின் ஒவ்வொரு பகுதியும் இயற்கை மற்றும் அதன் அதிசயங்களால் மூடப்பட்டிருக்கிறது. அடர்ந்த வனப்பகுதிகளும் பசுமையான காடுகளும் அழகான நிலப்பரப்பின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. பல இந்திய மாநிலங்களில் பல்வேறு வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்தக் காடுகள் உள்ளன. மழை பொழிவதற்கும், சுற்றுச்சூழல் சீரான முறையில் இருப்பதற்கும் வனப்பகுதிகள் மிகவும் அவசியம். அந்த வகையில் அடர்ந்த வனப்பகுதிகள் கொண்ட 7 மாநிலங்களின் பட்டியல் வெளிவந்துள்ளது, அதில் தமிழ்நாட்டின் நிலை நம்மை வருத்தப்பட வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்!
இயற்கையின் அமைதியான மடியில் நுழைந்து, மிகப்பெரிய காடுகளைக் கொண்ட இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஒரு பயண விரும்பியாக நீங்கள் கட்டாயம் ஆராயலாம். கவர்ச்சியான பசுமைக்கு தாயககமாக அந்த ஏழு மாநிலங்கள் இதோ!

மத்தியப் பிரதேசம்
95,221 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் அடர்ந்த காடுகளை உள்ளடக்கிய மத்தியப் பிரதேசம் மிகப்பெரிய காடுகளைக் கொண்ட இந்திய மாநிலமாகும். பரந்த காடுகள் கொண்ட இந்த மாநிலம் புலிகள் மற்றும் பிற வனவிலங்குகளின் பார்வையை வழங்குகிறது மற்றும் முக்கியமாக கன்ஹா தேசிய பூங்கா மற்றும் பாந்தவ்கர் தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும். அதோடு மட்டுமில்லாமல் மொத்தமாக மத்தியப் பிரதேசத்தில் 12 தேசிய பூங்காக்களும், 24 வனவிலங்கு சரணாலயங்களும், 3 உயிர்க்கோள காப்பகங்களும் உள்ளன.

அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள காடுகள் 67,248 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி, நாட்டிலேயே இரண்டாவது பெரிய காடுகளைக் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. அடர்ந்த காடு பகுய் வனவிலங்கு சரணாலயம் மற்றும் நம்தாபா தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும். மாநிலத்தின் 80% பச்சை நிறத்தில் உள்ளது, இது சில அற்புதமான நீர்வீழ்ச்சிகளையும் கொண்டுள்ளது. இமயமலையின் சாரலில் அமைந்திருக்கும் அழகிய அருணாச்சல பிரதேசம் பல அறிய வனவிலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களின் தாயகமாக இருக்கிறது.

சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் 55,547 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகளால் சூழப்பட்டுள்ளது, இது இந்தியாவின் மூன்றாவது பெரிய காடுகளால் நிரம்பிய மாநிலமாக உள்ளது. கங்கேர்காட்டி தேசியப் பூங்கா மற்றும் இந்திராவதி தேசியப் பூங்கா ஆகியவை இந்தப் பரந்த வனப்பகுதியின் பெரும்பகுதியை உள்ளடக்கி, புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகும்.

ஒடிசா
51,345 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள ஒடிசாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகள், நாட்டின் நான்காவது பெரிய வனப்பகுதி கொண்ட மாநிலமாக கருதப்படுகிறது. பிதர்கனிகா தேசிய பூங்கா மற்றும் சிம்லிபால் தேசிய பூங்காவில் உள்ள இந்த பசுமையான காடுகள் வனவிலங்குகளின் இருப்பிடமாக உள்ளன, அவை பிரபலமான சுற்றுலா தலங்களாக அமைகின்றன. இந்த மாநிலம் தேசிய வனப் பரப்பில் தனது பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் வனப்பகுதியை அதிகரிக்க அம்மாநில அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள பென்ச் புலிகள் காப்பகம் மற்றும் தபோசா அந்தாரி புலிகள் காப்பகம் ஆகியவை புலிகள் மற்றும் பிற வனவிலங்குகளின் இருப்பிடமாக உள்ளது. இந்த காப்பகங்கள் மகாராஷ்டிராவில் உள்ள 50,628 சதுர கிலோமீட்டர் காடுகளின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. இதனால் இது இந்தியாவின் ஐந்தாவது பெரிய காடுகளை கொண்ட மாநிலமாக மாறியுள்ளது.

கர்நாடகா
38,720 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாக கர்நாடகா, அழகான சதுப்புநிலங்கள் நிறைந்த அழகான காடுகளைக் கொண்டுள்ளது. இந்த கவர்ச்சியான காடுகளில் பெரும்பாலானவை நாகர்ஹோல் தேசிய பூங்கா மற்றும் பந்திப்பூர் தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும்.

ஆந்திரப் பிரதேசம்
இந்தியாவின் மிகப்பெரிய காடுகளைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா ஏழாவது இடத்தில் உள்ளது, ஆந்திரப் பிரதேசத்தின் 36,475 சதுர கிலோமீட்டர்கள் அடர்ந்த காடுகளாக உள்ளன. கிழக்குத் தொடர்ச்சி மலை காடுகளும் இந்த மாநிலத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
தமிழகத்தின் வனப்பகுதி 26,419 சதுர கிமீ ஆகும், இது மாநிலத்தின் புவியியல் பரப்பில் 20.31% மட்டுமே. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் கூட நம் தமிழகம் இல்லை என்பது சற்று வருத்தமாக இருக்கிறது. வனப்பகுதியை அதிகரிக்கவும், அடர்ந்த வனப்பகுதி சேதமடையாமல் இருக்கவும் தமிழக மாநில அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. தொடர்ந்து அதில் முன்னேற்றம் கண்டு வந்தால் கூடிய சீக்கிரம் தமிழக வனப்பகுதிகள் அதிகரிக்கும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று?



Click it and Unblock the Notifications






